Aran Sei

‘நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும் பழக்கத்தைச் சீர்குலைக்கவே அவசரச்சட்ட வழிமுறை’- காங்கிரஸ் குற்றச்சாட்டு

திர்ப்பவர்களின் குரலை அடக்குவதற்காகவே சிபிஐ, அமலாக்கப் பிரிவு இயக்குநர்களின் பதவிக் காலத்தை 5 ஆண்டுகள் நீட்டித்து ஒன்றிய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

நேற்று(நவம்பர் 14), அமலாக்கத்துறை இயக்குநர் மற்றும் சிபிஐ இயக்குநரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளாக நீட்டிக்கும் அவசரச் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளது. தற்போது, ​​ஒன்றிய விஜிலென்ஸ் ஆணையம் (சிவிசி) சட்டம், 2003-ன்படி, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநர்கள் இரண்டு ஆண்டுகால பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தனது டிவிட்டர் பக்கத்தில், “தனது விஸ்வாசிகளான சிபிஐ, அமலாக்கத்துறைகளை வைத்துக்கொண்டு, சட்டவிரோதமாக அதன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மோடி அரசு கவிழ்க்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையும், சிபிஐ அமைப்பும் ரெய்டு நடத்துவதை ஒரு நடைமுறை விதியாக வைத்துள்ளன. இந்த இரு விஸ்வாசிகளுக்கும் அதிகாரம் அளித்து, ஐந்து ஆண்டுகள் பதவிக் காலம் அளித்துள்ளது ஒன்றிய அரசு. இந்தச் செயல் எதிர்பவர்களின் குரலை அடக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “மோடி அரசில் அமலாக்கத்துறையும் (இடி) சிபிஐயும் என்னவென்றால், இடி(ED)- எலெக்சன் டிபார்ட்மென்ட், சிபிஐ (CBI)- காம்ப்ரமைஸ்டு பியூரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் என்பதுதான். இயல்பாகவே ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்படும். இப்போது நேரடியாகவே ஐந்து ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மணிஷ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில்,  “ஜெயின் ஹவாலா தீர்ப்புக்கு விரோதமாகவே இந்த இரு அவசரச் சட்டங்களையும் மோடி அரசு கொண்டுவந்துள்ளது. அரசியல் தலையீடு இல்லாமல் சிபிஐ, அமலாக்கப் பிரிவு இயக்குநர்கள் பதவிக் காலம் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இவ்வாறு இருக்க, பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“நம் நாட்டில் தகுதியான அதிகாரிகளே இல்லையா? அல்லது அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்களா? பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் சிபிஐ, அமலாக்கப் பிரிவு அலுவலகங்களின் இயக்குநர்கள் முன் பதவி நீட்டிப்பு எனும் கவர்ச்சியைத் தொங்கவிடுவதன் வழியாக, இரு அமைப்புகளிலும் எஞ்சியிருக்கும் ஒருமைப்பாட்டைத் தகர்க்கும் முயற்சி இது. நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் பழக்கத்தைச் சீர்குலைக்கவே மீண்டும் மீண்டும் அவசரச் சட்ட வழிமுறையை ஒன்றிய அரசு கையில் எடுக்கிறது. வரும் 29 ஆம் தேதி, நாடாளுமன்றம் கூட இருக்கும் நிலையில் அதற்குள் இந்த அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டிய அவசரம் என்ன?” என்று மனீஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: New indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்