Aran Sei

இந்தியப் பொருளாதாரத்தை சீரழித்துள்ளது ஒன்றிய அரசு – காங்கிரஸ் செயற்குழு

பொருளாதார வளர்ச்சி குறைவும், கொரோனா தொற்றால் ஏற்பட்ட வேலையிழப்பும் இன்னும் சரியாகவில்லை என்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று(அக்டோபர் 16), காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. அக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, ஏ.ஏகே.அந்தோனி, மல்லிகார்ஜூன கார்கே,கே.கே.வேணுகோபால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

அப்போது, நாட்டின் அரசியல் சூழல், பணவீக்கம், விவசாயிகள் பிரச்சினை மற்றும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தில், “நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருவது மிகப்பெரிய கவலை அளிக்கிறது. 2020-21 ஆம் ஆண்டு பொருளாதாரம் சரிந்தபின், விரைவான பொருளாதார மீட்சி இருக்கும் என்று மோடி தலைமையிலான அரசு மார்தட்டியது. ஆனால், பொருளாதாரத்தின் அனைத்துக் துறைகளும் சமமற்ற முறையில் மீட்சிக்காக போராடும் சூழலைத்தான் காண முடிகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பொருளாதார வளர்ச்சிக் குறைவும், கொரோனா தொற்றால் ஏற்பட்ட வேலையிழப்பும் இன்னும் சரியாகவில்லை. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இன்னும் அவை திறக்கப்படாமல் உள்ளன. விலைவாசி உயர்வு, வேலையிழப்பு ஆகிய இரு பெரிய பிரச்சினைகளை லட்சக்கணக்கான குடும்பங்கள் சந்தித்து வருகின்றன” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், “பேரழிவு தரக்கூடிய வகையில் மோடி அரசு பொருளதாரத்தை கையாண்டுள்ளதன் விளைவு தெரிகிறது. பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையும், சராசரி இந்தியரின் குறைந்தபட்ச வருமானம் மற்றும் சேமிப்பும் முழுங்கப்பட்டுள்ளது. 14 கோடி வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளளன. ஊதியக்குறைப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான சிறு,குறு, நடுத்தரத் தொழில்கள் மூடப்பட்டுள்ளன, சிறுவணிகர்கள் கடை நடத்த தடுமாறுகிறார்கள்” என்று காங்கிரஸ் கட்சியின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்