முன்னர் அகஸ்டா நிறுவனம் ஊழல் நிறுவனமாக இருந்தது என்றும் இப்போது அது பாஜக சலவை மையத்தில் கழுவப்பட்டு சுத்தமாகி விட்டது என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான இத்தாலி நிறுவனம் – ஆயுதம் வாங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியது பாஜக அரசு
இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் கூறுகையில், “பின்மெக்கானிகா என அழைக்கப்படும் லியோனார்டோ மீதான கொள்முதல் தடையை பிரதமர் மோடியும் அவரது அரசும் நீக்கியுள்ளது என்பதுதான் உண்மை. இது அகஸ்டாவெஸ்ட்லேண்டின் தாய் நிறுவனம். பிரதமர் நரேந்திர மோடியும் இத்தாலிய பிரதிநிதியும் ஜி20 மாநாட்டிற்காக சமீபத்தில் ரோம் சென்றிருந்தபோது, அகஸ்டா/பின்மெக்கானிகா விவகாரம் குறித்து விவாதித்துள்ளனர். இந்த சந்திப்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு முகமையின் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் விளைவாக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மீதான கொள்முதல் தடை நீக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஒன்றிய அரசிடம் ஐந்து கேள்விகளை எழுப்பியுள்ளார். “மோடி அரசுக்கும் அகஸ்டா/பின்மெக்கானிகாவுக்கும் இடையேயான ரகசிய ஒப்பந்தம் என்ன? மோடிஜியும் அவரது அரசும் ‘ஊழல்வாதிகள்-லஞ்சம் கொடுப்பவர்கள்’ என்று அழைத்த நிறுவனத்தோடு தற்போது இணைவது சரியா? அதாவது 2019 தேர்தலுக்கு முன்பு போலியாக உருவாக்கப்பட்ட ஊழல் மோசடி, இரண்டு நாட்களுக்கு முன்பு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் விவகாரத்தில் நடந்தது போன்று அமைதியாக புதைக்கப்படுகிறதா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அகஸ்டா/ பின்மெக்கானிகா நிறுவனத்தின்மீது காங்கிரஸ் அரசு தொடங்கியுள்ள விசாரணை என்ன ஆகும்? அகஸ்டா/பின்மெக்கானிகா மீதான நிலுவையில் உள்ள நடுவர் மன்றம் என்னவாகும்? இதனால் நிதித்துறைக்கு நஷ்டம் ஏற்படுமா?” என்று கவுரவ் வல்லப் தெரிவித்துள்ளார்.
“இதற்கு நேர்மாறாக, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சியானது, அகஸ்டாவெஸ்ட்லேண்டிற்கு எதிராக தீர்மானகரமான நடவடிக்கை எடுத்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அகஸ்டாவெஸ்ட்லேண்டிடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “முன்னர் அகஸ்டா நிறுவனம் ஊழல் நிறுவனமாக இருந்தது. இப்போது அது பாஜக சலவை மையத்தில் கழுவப்பட்டு சுத்தமாகி விட்டது” என்று ட்வீட் செய்துள்ளார்.
Source: The Economics Times
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.