Aran Sei

அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்று வந்தால் 5000 ரூபாய் நிதி – பழங்குடிகளை காவிமயமாக்குகிறதா குஜராத் பாஜக அரசு?

குஜராத்தில் உள்ள பழங்குடியின மக்கள் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமிக்கு பயணம் மேற்கொள்ள சிறப்பு நிதி உதவி வழங்க குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் குஜராத்தில் உள்ள ஒரு பழங்குடியின நபர், அவர் ‘ராம் லல்லா தரிசனத்திற்கான’ ஆதாரங்களை காட்டும்பட்சத்தில் அவருக்கும் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

பழங்குடியினர் நலன் மற்றும் மேம்பாட்டின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் பாஜக ஆளும் பிற மாநிலங்களிலும் பின்பற்றப்படலாம் என கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

”இந்தியாவில் 11 கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் உள்ளோம். நாங்கள் அனைவரும் ராமாயணத்தில், ராமருக்கு இனிப்பான பெர்ரி பழங்களை ஊட்டிய ஆதிவாசி பெண்மணி ஷாப்ரியின் வழித்தோன்றல்கள்” என பாஜகவில் உள்ள பழங்குடியினத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

”குஜராத்தில், மாதா ஷாப்ரியின் நேரடி வழித்தோன்றல்களாக, நாங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான பழங்குடியின மக்கள் உள்ளோம் என்பதால், அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமிக்கு அனைத்து பழங்குடியினருக்கும் ஒருவருக்கும் ரூ. 5 ஆயிரம் வீதம் சிறப்பு நிதி வழங்கப்படும்.” என குஜராத்தின் சுற்றுலா மற்றும் புனித யாத்திரை மேம்பாட்டுத் துறை அமைச்சர் புர்னேஷ் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் பழங்குடியின மக்களை பாஜக ஏன் இவ்வளவு ஆர்வமாக ஈர்க்கிறது?

அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற இருப்பதால், வளர்ச்சி மற்றும் நலத்திட்டம் என்ற பெயரில், பழங்குடியின மக்களைக் கவர இலவச திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

குஜராத் மக்கள் தொகையில் சுமார் 15 விழுக்காடு வரை பழங்குடியின மக்கள் உள்ளனர். இது தேசிய பழங்குடியின மக்கள் தொகை சராசரியான 8.6 விழுக்காட்டை விட அதிகம். 2022 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பழங்குடியின மக்களின் வாக்குகளை குறிவைத்து பாஜக இந்த நகர்வை மேற்கொண்டுள்ளது.

சமீபத்தில், சோட்டா உதேபூரில் உள்ள ஒரு பழங்குடி நபரின் வீட்டில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா மதிய உணவு உண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் பழங்குடியினர் கணக்கு

குஜராத்தில் மொத்தமுள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில், 27 இடங்கள் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 14 தொகுதிகளில் பழங்குடியினருக்கு செல்வாக்கு உள்ளது. இதேப் போன்று சோட்டா உதேபூர், தஹோத், பர்தோலி, வல்சாத் ஆகிய நான்கு நாடாளுமன்ற தொகுதிகளுக்குப் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டவை ஆகும்.

சுதந்திரத்திற்கு பிறகான குஜராத்தின் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தான் ஒரு பழங்குடியின தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. அந்தத் தேர்தலில் குஜராத்தில் காங்கிரஸ் ஒரு இடம் கூட பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்குடியினரின் அரசியல் விருப்பங்கள்

இந்திரா காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு வரை குஜராத்தில் உள்ள பழங்குடியின மக்கள் காங்கிரஸ் அல்லாத கட்சிகளுக்கு வாக்கு செலுத்தியதே இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எழுத, படிக்கத் தெரியாமல் இருந்த போதும், அவர்கள் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை மட்டும் அறிந்து வைத்திருந்தார்கள். பலர் இந்திரா காந்தியை ’மா (அம்மா)’ என்றே அழைத்தார்கள்.

பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காக பழங்குடியின மக்களை கவர்ந்திழுக்கும் ஆர்.எஸ்.எஸ்-யின் திட்டம் முதன்முதலில் இந்துத்துவாவின் ஆய்வகமான குஜராத்தில் தான் சோதனை செய்யப்பட்டது. இதில் நரேந்திர மோடிக்கு பங்கில்லை. இது ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியாகும்.

மூன்று கொலை வழக்குகளில் குற்றசாட்டப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட சுவாமி அசீமானந்த், பழங்குடியினரை கவரும் திட்டத்திற்கான திட்ட மேலாளராக நியமிக்கப்பட்டார்.

இத்திட்டன் ஒரு பகுதியாக 1990 களில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் சார்புடைய பள்ளிகள், பின்னர் வனவாசி கல்யாண் கேந்திராவின் கீழ் வந்தன.

1995 ஆம் ஆண்டு குஜராத்தில் பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சியில் அமர்ந்தபிறகு, ஆர்.எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் மற்றும் வனவாசி கல்யாண் கேந்திராக்கள் மேலும் வலுப்பெற்றன.

1998 ஆம் ஆண்டு, குஜராத்தில் பழங்குயின மக்களைக் கவர்ந்து, மத மாற்றுவதாக குற்றச்சாட்டில், கிறுஸ்துவர்களை குறிவைத்து தாக்குதல் செயல்களில் ஒரு காவி ஆதரவு கும்பல் ஈடுபட்டது.

இந்தத் தாக்குதல்களுக்கு அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மறைமுகமாக ஆதரவளித்தார் என நம்பப்படுகிறது. பின்னர் தாக்கப்பட்ட கிறித்துவ பழங்குடியினர் மற்றும் எரிக்கப்பட்ட அவர்களது கட்டிடங்களைப் பார்வையிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குஜராத் வந்தபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில், “டிசம்பர் 25, 1998 முதல் ஜனவரி 3, 1999 வரையிலான காலகட்டத்தில் குறைந்தபட்சமாக 20 பிரார்த்தனை அரங்குகள் மற்றும் தேவாலயங்கள் சேதப்படுத்தப்பட்டன அல்லது எரிக்கப்பட்டன. டாங்க்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கிறுஸ்துவர்கள் மற்றும் கிறுஸ்துவர்கள் தாக்கப்பட்ட சம்பம் நடைபெற்றுள்ளது. பிரார்த்தனை அரங்குகள் மற்றும் தேவாலயங்களுக்குத் தீ வைத்த சம்பவங்கள் குஜராத் முழுவதும் 25 கிராமங்களில் பதிவாகி உள்ளன” என தெரிவிக்கப்பட்டிருந்தன.

2017 ஆம் தேர்தல் பின்னடைவும், பழங்குடியினர் மீதான கணக்கும்

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தலில் பழங்குடியினருக்கான தொகுதிகளில் பாஜக பின்னடைவை சந்தித்தது. பழங்குயின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 27 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், பாரதிய பழங்குடி கட்சி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றன. பாஜகவிற்கு 9 இடங்களே கிடைத்தது.

அடுத்த ஆண்டு நடைபெற விருக்கும் தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக வேலை பார்த்து வருகிறது.

பழங்குடியினரை கவர்வதில் தொலைநோக்குப் பார்வை, திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதலில் பாஜகவை பாராட்டியே ஆக வேண்டும். பழங்குடியின மக்களின் வாக்குகளைக் குறிவைத்து குஜராத் அரசும் அதன் பிரிவும் (சங்கத்தான்), ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வான் பந்து கல்யாண்யோஜனா 2 என்ற திட்டத்தைக் கடந்த ஒரு ஆண்டாக நிறைவேற்றி வருகின்றன.

இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம், உலக பழங்குடிகள் தினமான ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

பழங்குடிகள் இந்துக்களா?

பழங்குடிகள் இந்துக்களா என்பது விவாதத்திற்குரியது. பெரும்பாலான பழங்குடியின மக்கள் தண்ணீர், மரம், தீ போன்ற இயற்கையுடன் தொடர்புடைய பொருட்களை வணங்கி வருகின்றனர். ஆனால், பாஜக அவர்களை இந்துக்கள் என்று நம்ப வைப்பதற்காக மூளை சலவை செய்து வருகிறது. இயற்கையை வழிபட்டவர்களை வான்தேவி முதல் அன்னப்பூர்ணா வரை இந்து தெய்வங்களை வழிபடுபவர்களாக மாற்றி வருகிறது.

உதாரணமாக, ஜார்கண்ட்டில் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சிக்கு முன்பு வரை பாஜக ஆட்சியில் இருந்தது) மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, பழங்குடியின மக்களின் சர்னா குறியீட்டை ஒரு மதமாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

”நாங்கள் பழங்குடியின மக்கள், இருப்பினும் பாஜக எங்களை காவி மயமாக்க முயற்சித்து வருகிறது” என சோட்டா உதேபூரின் காங்கிரஸ் சட்டமன்ற சுக்ராம் ரத்வா கூறியுள்ளார்.

குஜராத்தில் பல பகுதிகளில் பழங்குடியினர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். தஹோத்தில் 40%, நர்மதாவில் 34%, டாங்ஸில் 31.5%, தாபியில் 28.36%.

எனவே, அயோத்தி செல்ல வழங்கப்படும் ரூ. 5 ஆயிரம் என்பது அவர்களில் பெரும்பாலானவர்களுக்குப் பெரிய தொகையாகும். ஆனால் அதை பாஜக வாக்காக மாற்ற முயல்கிறது.

“பழங்குடியின மக்கள் அனைவரும் ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றபோது சந்தித்த ஷாப்ரி மாதாவின் வழித்தோன்றல்கள். அவர்களுக்கு இதை செய்வது நம் கடமை” என புர்னேஷ் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் அழுக்குப்படிந்த தந்திரங்கள் துறை மீண்டும் கூடுதல் நேரம் வேலை செய்கிறது என குஜராத் காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர் அர்ஜுன் மோத்வாடியா கூறியுள்ளார்.

அயோத்திக்கு செல்ல வழங்கப்படும் சிறப்பு நிதி, பழங்குடியின மக்களை அரசியல் துருவப்படுத்தும் தந்திரம் என குஜராத் காங்கிரஸ் கட்சித் தலைவர் அமித் சாவ்டா தெரிவித்துள்ளார்.

”பழங்குடியின மக்களுக்குச் சிறந்த சுகாதார வசதிகள், பள்ளிகள், அதிகாரம் ஆகியவை தேவை. அவர்கள் வன உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல், பாஜக அரசு சுற்றுலா சலுகைகளை வழங்கி அவர்களை மத அடிப்படையில் பிளவுபடுத்த முயற்சிக்கிறது” என அவர் கூறியுள்ளார்.

குஜராத் அரசின் திட்டத்தை வத்காம் சட்டமன்ற உறுப்பனரான ஜிக்னேஷ் மோத்வானியும் விமர்சித்துள்ளார்.

“பழங்குடியின மக்களை அயோத்தி அனுப்புவதற்கான திட்டம் அவர்களின் கலாச்சாரத்திற்கு திரித்து அவமரியாதை செய்யும் செயல்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பழங்குடியினருக்கு உதவ விரும்பினால் அவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்குங்கள். ஆனால், அயோத்தி யாத்திரைக்கு அவசியம் என்ன வந்தது?. பழங்குடியின மக்கள் ஜெய்பால் சிங் முண்டா மற்றும் பிர்சா முண்டாவை பார்த்துக் கொள்ளட்டும். 1996 ஆம் ஆண்டு, பட்டியலிடப்பட்ட பகுதிகளில் பஞ்சாயத்து விரிவாக்க சட்டத்தின் கீழ் பாஜக அவர்களுக்கு அதிகாரம் வழங்கட்டும். அதை விடுத்து அதிவாசிகளை வனவாசிகளாக மாற்றும் யோசனை மோசமானது” என ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.

தி வயர் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்

இந்த கட்டுரை முதலில் வைப்ஸ் ஆப் இந்தியா இணையதளத்தில் பிரசுரமானது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்