திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே 6 வீடுகள் எந்த வித முன்னறிவிப்பும் தராமல் இடிக்கப்பட்டதாக மக்கள் புகாரளித்துள்ளனர்.
இதுகுறித்து அரண்செய்யிடம் பேசிய வீடிழந்தவர்களில் ஒருவர், “இங்கு வசிக்கும் நாங்கள் சுமார் 40 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருகிறோம். எங்களுடைய வாழ்வாதாரம் குழந்தகளின் கல்வி யாவும் கவரப்பேட்டை கிராமத்தைச் சுற்றியே உள்ளது” என்று தெரிவித்தார்.
அரசின் வட்டார போக்குவரத்து அலுவலகம் கட்ட இருப்பதாகவும் அதனால், கும்மிடிப்பூண்டி தாசில்தார் எந்த ஒரு நோட்டீஸ் தராமல் வாய் வழியாக அங்கிருந்து அவர்களை வெளியேறச் சொல்லியிருந்ததாக மக்கள் கூறி, காலி செய்ய மறுத்துள்ளனர். பிறகு, வீடுகளை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். வீடுகள் இடிக்கப்பட்டது குறித்து அம்மக்கள் தாசில்தாரை அனுகி விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், ”இரண்டு வருடங்களுக்கு முன்பே வீட்டு மனை தந்துவிட்டோம்” என்று கூறியுள்ளார்.
அம்மனை குறித்து நாம் விசாரித்தபோது, கவரப்பேட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சூரப்பூண்டி என்கிற ஊரில் இடம் ஒதுக்கியுள்ளதாக கூறும் மக்கள்; தங்களின் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி கவரப்பேட்டையை சுற்றி இருப்பதால் பல கிலோ மீட்டர் தாண்டி எப்படி வாழ முடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
பட்டியல் சமூகம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர்கள், வீடுகளை இழந்துள்ளதால் கடும் சிரமத்திற்குள் ஆளாகி இருப்பதாக அரண்செய்யிடம் கூறினர்.
தினக்கூலிகளாக இருக்கும் அவர்கள் காலிமனையில் புதிதாக வீடுகட்ட வாய்ப்பில்லை என்கிறார்கள். சிறுகச் சிறுக சேர்த்து வைத்த சேமிப்பிலிருந்து கட்டிய வீட்டை அரசு இடித்துள்ளதால் அவர்களின் வாழ்வு நிர்கதியாகியுள்ளதாக கூறினர். அத்தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரனிடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக தெரிவித்தனர்.
வீடு இடிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை என்பது, கவரப்பேட்டை பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடத்தில் அவர்களுக்கு மனை ஒதுக்க வேண்டும்; வீடு கட்டிக்கொள்ள அரசு உதவி புரிய வேண்டும். மக்கள் நலன் சார்ந்த திமுக அரசு தங்களுக்கு நிச்சயம் செய்து தர வேண்டும் என்று அரண்செய்யிடம் கூறினர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.