Aran Sei

’இவண்’ என்ற சொல் மரியாதை குறைவாக உள்ளது: தமிழ் புரியாமல் பணியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிகாரி

திருநெல்வேலி மண்டல போக்குவரத்து துறையில் சோதனை ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று, தற்போது தாமிரபரணி கிளையில் கட்டுப்பாட்டு அறையில் ம.தளவாய் மணி பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஜூலை 7 ஆம் தேதி, தாமிரபரணி கிளையில் போக்குவரத்து ஊழியர்கள் சிலர் பணிக்கு வராததினால் போதுமான பேருந்துகள் இயக்க முடியாத நிலை எற்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து, இனி வரும் காலங்களில் இதுபோன்று நிகழா வண்ணம், அந்த கிளையின் மேலாளர் விஜயகுமாரின் அறிவுறுத்தலின் படி அறிவிப்பு பலகையில், ‘ஓட்டுனர், நடத்துனர் கவனத்திற்கு, 07/07/21 முகூர்த்த நாளாக இருப்பதால் விடுப்பை தவிர்க்கவும். நிர்வாக நலன் கருதி. இவண், கிளை மேலாளர்’ என்று சோதனை ஆய்வாளர் தளவாய்மணி எழுதியிருக்கிறார்.

இதில் பயன்படுத்தபட்டுள்ள ‘இவண்’ என்னும் வார்த்தை வழியாக தன்னை மரியாதை குறைவாக குறிப்பிட்டதாக கூறி, தளவாய்மணியை கிளை மேலாளர் விஜயகுமார் தகாத வார்த்தைகளில் திட்டியதாக, தளவாய்மணியின் மகள் தமயந்தி மலர்க் கொடி புகார் அளித்துள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

இதுதொடர்பாக, முதலமைச்சரின் தனி பரிவு, தமிழ்நாடு போக்குவரத்து கழக செயலாளர், திருநெல்வேலி போக்குவரத்து கழக இயக்குனர் ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இவண் என்னும் வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத கிளை மேலாளர் திரு. விஜயகுமார், தன்னை மரியாதை குறைவாக குறிப்பிட்டதாக எனது தந்தை திரு. தளவாய்மணி அவர்களை தொலைப்பேசியில் அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டினார். எனது தந்தை அதற்கான சரியான விளக்கம் சொல்லியும் அதை ஏற்க மறுத்த அவர், என் தந்தையை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் என் தந்தை கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “தமிழக அரசு பணியில், ஒரு உயர் பதவியில் இருக்கும் திரு விஜயகுமார் போன்றவர்கள் தமிழ் தெரியாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. மேலும் இந்த நவீன காலத்தில் அந்த வார்த்தைக்கான பொருளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஆனால் அதை விடுத்து என் தந்தையை தகாத வார்த்தைகளால் மரியாதை குறைவாக பேசியதோடு இல்லாமல் கொலை மிரட்டலும் விடுத்துள்ள திரு. விஜயகுமார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.” என்று தமயந்தி மலர்க் கொடி கோரியுள்ளார்.

ஸ்டான் சாமிக்காக இடது சாரிகள் நடத்தும் போராட்டத்தில் விசிக பங்கேற்கும் – திருமாவளவன்

இதுகுறித்து, அரண்செய்யிடம் பேசிய தமயந்தி மலர்க் கொடி, “பொது இடத்தில் வைத்து, பலர் முன்னிலையில் அப்பாவை அந்த மேலாளர் திட்டினார். இவண் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அப்பா அவரிடம் தெளிவுப்படுத்தி இருக்கிறார். ‘நீ பன்னிரெண்டாவதுதான் நான் பொறியியல் படித்திருக்கிறேன். எனக்கு பாடம் நடத்துறீயா? எனக்கு ஏழு விடு இருக்கு. வெளிநாட்டில் சம்பாதித்து வைத்திருக்கிறேன். வெட்டிருவேன்.’ என்று மிரட்டியிருக்கிறார். அச்சம்பவத்திற்கு பிறகு அப்பா பணிக்கு செல்லவில்லை. மனவுலைசலாக இருக்கிறது என்று வீட்டிலேயே முடங்கியிருக்கிறார். அரசு உயர் அதிகாரியாக இருப்பவருக்கு, தமிழ் தெரியாதது அவரின் தவறு” என்று தெரிவித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்