Aran Sei

தாக்கப்பட்ட தர்கா, சேதமடைந்த கோவில்; மகாராஷ்ட்ராவில் நடப்பது என்ன? – நேரடி ரிப்போர்ட்

காராஷ்ட்ரா மாநிலம் அமராவதியில், பாரதிய ஜனதா கட்சியினர் அழைப்பு விடுத்த முழு அடைப்பு மற்றும் அதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறையால் ஏற்பட்ட பதட்டம் காரணமாக அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (12.11.21), திரிபுராவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து, அமராவதி நகரின் மையப் பகுதியில் இஸ்லாமியர்கள் பேரணி நடைபெற்றது. பேரணியில் கலந்துகொண்ட சிலர், அப்பகுதியில் உள்ள பாஜக-வின் முன்னாள் தலைவர் ஒருவரின் கடையை சூறையாடும் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பதட்டம் ஏற்பட்டதாக தி வயர் இணையதளம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பாஜக சர்பாக அதற்கு மறுநாள் (சனிக்கிழமை,13.11.21) முழு அமைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தி வயர் செய்தி கூறுகின்றது. சனிக்கிழமை காலை 9 மணி முதலே இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சபன்பூரா, சாந்தினி சௌக், குவாலிபூரா ஆகிய பகுதியில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூடத் தொடங்கியதால் பதட்டம் ஏற்பட்டதாகவும், நமுனா கல்லி என்ற பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே கல்வீச்சு நடைபெற்றதாகவும் தி வயர் கூறுகின்றது.

அன்றை தினம் (சனிக்கிழமை) காலை சுமார் 11 மணியளவில் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ‘தர்கா’ மீது இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தர்கா மீது  இந்ததுத்துவ அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியதாக, அதன் அருகே கடை வைத்துள்ள முகம்மது ஷாபாஸ் என்பவர் தி வயர் இணையதளத்திடம் கூறியுள்ளார். அத்துடன் தன் கடையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை இந்துத்துவ அமைப்பினர் கொள்ளையடித்தாகவும் ஷபாஸ் கூறியுள்ளார். தர்கா மீது தாக்குதல் நடைபெற்ற பிறகே, நமுனா கல்லி பகுதியில் கல்வீச்சு தொடங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் சாந்தினி சௌக் பகுதியில் இந்துத்துவ அமைப்பினர் கூடி வருவதாகவும், இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாகவும் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் பரவியதால், அமராவதியின் பல்வேறு பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், சாந்தினி சௌக் பகுதியில் கூடத்தொடங்கியதால் மேலும் பதட்டம் அதிகரித்ததாக தி வயர் கூறுகின்றது.

சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சாந்தினி சௌக் மற்றும் இந்துக்கள் அதிகம் வசிக்கும் சக்கார் சாத் பகுதிகளை இணைக்கும் சாலைகளில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றதாக தி வயர் கூறுகின்றது. இந்த கல்வீச்சு சம்பவத்தில் சக்கார் சாத் பகுதியில் உள்ள ஒரு கோவில் சேதமடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதியம் சுமார் 2.45 மணிக்கு சாந்தினி சௌக் பகுதியில் கத்தி, கோடாரி போன்ற ஆயுதங்களுடன் இஸ்லாமியர்கள் பெரும் அளவில் கூடியிருந்ததாகவும், காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சில சமயம் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதாகவும் தி வயர் இணையதளத்தின் செய்தியாளர் கவுசல் ஷரூப் கூறுகின்றார்.

மறுபுறம், இந்துக்கள் தரப்பில் கூடியிருந்த இளைஞர்கள் “முஸ்லீம்களிடம் துப்பாக்கிளும், கத்திகளும், கோடாரிகளும் உள்ளன, ஆனால் உங்களிடம் (இந்துக்கள்) வெறும் கம்புகள்தான் உள்ளன. சண்டையிடும்போது அவர்கள் (இஸ்லாமியர்கள்) மரணிப்பதற்கு தயாராக உள்ளனர் ஆனால் நீங்கள் இந்த சமயத்திலும் கூட பொந்துக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறீர்கள். கத்தியை எடுத்துக்கொண்டு சண்டைக்கு வாருங்கள். மற்றவர்களையும் அழைத்து வாருங்கள்” என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்ததாக செய்தியாளர் கவுசல் ஷரூப் கூறுகின்றார்.

இந்த பதட்டத்திற்கிடையிலும், சுமார் 3 மணியளவில் ஒரு மனிதாபிமானம் மிக்க காட்சியை கண்டதாக ஷரூப் கூறுகின்றார். சக்கர் சாத் பகுதியில் சர்ஃபராஸ் என்ற இஸ்லாமியருக்கு சொந்தமான கடையை அடையாளம் கண்ட இந்து இளைஞர்கள், அதை தாக்கும் நோக்கத்தோடு நெருங்கியதாகவும், அப்போது அந்த பகுதியின் மாடியில் நின்று கொண்டிருந்த இந்து ஒருவர் இறங்கி வந்து, அது தன் கடை என்று கூறி அதை காப்பாற்றியதாகவும் ஷரூப் பதிவுசெய்துள்ளார்.

அந்த கடையை காப்பாற்றிய ரித்தேஷ் பனார்சே என்பவர் “இந்த பகுதியின் வியாபார சமூகத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் அங்கத்தினரே. நாங்கள் அவர்களுடன் தொடர்ந்து கொடுக்கல் வாங்கலில் உள்ளோம். அவர்களோடு வியாபாரத்தை பகிரிந்துகொள்கிறோம். கல்வீச்சில் ஈடுபடுபவர்கள் வேறு பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் இவ்வாறு செய்வதற்கு நான் எப்படி அனுமதியளிக்க முடியும்? சர்ஃபராசின் முகத்தின் நான் தினமும் விழிக்க வேண்டும். இந்த கடை அடித்து நொறுக்கப்படுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்று செய்தியாளர் ஷரூப்பிடம் கூறியதாக தி வயர் குறிப்பிட்டுள்ளது.

சாந்தினி சௌக் பகுதியில் சுமார் 3.30 மணியளவில் காவல்துறை நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக கூறும் தி வயர் கடந்த மூன்று நாட்களில் மகாராஷ்ட்ராவின் மலேகான், நன்டேட், அமராவதி ஆகிய பகுதிகள், மத மோதல்களின் மையமாக மாறியுள்ளதாகவும் கூறுகின்றது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்