Aran Sei

குஜராத்: ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள காம்பத் நகரில் ராம நவமியை முன்னிட்டு நடத்தப்பட்ட ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார்.

சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள ஹிம்மத்நகர் நகரிலும் இதேபோன்று நடந்த சம்பவத்தின்போது இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் நடந்துள்ளது.

இரு இடங்களிலும் கல் வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.

ஜேஎன்யு விடுதியில் அசைவ உணவு வழங்குவதை தடுத்த ஏபிவிபியினர் – இருதரப்பு மோதல்; 15 பேர் காயம்

“காம்பத் நகரில் ஞாயிறு (ஏப்ரல் 10) பிற்பகல் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு குழுக்களும் ஒருவரையொருவர் கற்களால் வீசித் தாக்கிக்கொண்டுள்ளனர். சம்பவ இடத்தில் தோராயமாக 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது” என்று காவல்துறை கண்காணிப்பாளர் அஜீத் ராஜ்யன் தெரிவித்துள்ளார்.

மேலும், “காம்பத் நகர் சம்பவத்தின் போது ஒருவர் காயமடைந்ததுடன், சில கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தி நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.

ஹிம்மத் நகரில் நடந்த மோதலில், சில வாகனங்களும் கடைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம்: ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டதால் ஊரடங்கு உத்தரவிட்ட அரசு நிர்வாகம்

“ஹிம்மத்நகரில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, மாறி மாறிக் கற்களை வீசியுள்ளனர். அதில், சிலர் காயமடைந்துள்ளனர். சிறிது நேரத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது” என்று சபர்கந்தா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷால் வகேலா கூறியுள்ளார்.

மேலும், “இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் நகரின் நடந்த ராம நவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கல் வீச்சைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் வாகனங்களும் வீடுகளும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, அந்நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்