Aran Sei

’முதுகெழும்புள்ள ஒரு இந்திய கிரிக்கெட் வீரரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்’ – விவசாயிகள் போராட்டம் குறித்து சச்சினின் பதிவுக்கு பதிலடி

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான, சச்சின் டெண்டுல்கர் உட்பட இந்திய கிரிக்கெட் வீரர்களின் கருத்திற்கு, தமிழகத்தில்  கண்டனமும் விமர்சனமும் எழுந்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞரான ரிஹான்னா, விவசாயிகள் போராட்டக் களத்திற்கு இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது பற்றிய சிஎன்என் செய்தியைப் பகிர்ந்து, அதுபற்றி நாம் ஏன் பேசவில்லை என்று ட்வீட் செய்திருந்தார். விவசாயிகள் போராட்டத்தின் மீதான அரசு அடக்குமுறைக்கு எதிரான ரிஹான்னாவின் பதிவு, உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரிஹான்னாவிற்கு எதிராக ட்வீட் செய்த பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் – நடிகை தாப்சி பன்னு பதிலடி

அதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகப் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், நடிகை மியா கலீஃபா உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் இறையாண்மை விவகாரத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது. வெளியிலிருக்கும் சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம். ஆனால் பங்கேற்பாளர்களாக இருக்க கூடாது. இந்தியாவைப் பற்றி இந்தியர்களுக்குத் தெரியும். இந்தியாவுக்காக இந்தியர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தேசமாக நமது ஒற்றுமையைப் பறைசாற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

“ரிஹான்னா இஸ்லாமியரா?” – கூகுள் இணையதளத்தில் முதல் இடம் பிடித்த கேள்வி

மேலும், இதே கருத்தில், கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, ஆர்.பி.சிங், விராத் கோலி, பால் பாட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால், நடிகர் அக்‌ஷய் குமார், பாடகர் லதா மகேஷ்கர் போன்றோரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளனர்.

இந்தக் கருத்துகள்குறித்து ட்வீட் செய்துள்ள பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், “மாலை நான்கு மணியிலிருந்து, முதுகெழும்புள்ள ஒரு இந்திய கிரிக்கெட் வீரரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் சொல்லுங்கள்.” என்று கோரியுள்ளார்.

இதுகுறித்து, இசை கலைஞரும் எழுத்தாளருமான டி.எம்.கிருஷ்ணா தனது ட்வீட்டர் பக்கத்தில், “விவசாயிகள் போராட்டம்பற்றி ‘வெளி நபர்கள்’ பேசத் தேவையில்லை என்று பிரபலங்கள் ட்வீட் செய்வது பரிதாபகரமாக உள்ளது. அமெரிக்காவில் நடக்கும் எல்லாவற்றை பற்றியும் யாரும் எதுவும் சொல்வதை யாருமே தடுக்கவில்லையே? இது உண்மையிலேயே அருவருப்பாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரியா பைதாந்தி தனது ட்வீட்டில், “இந்தக் கிரிக்கெட் வீரர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் ஒரே நாளில் திடீரென்று இந்த விவகாரம் பிற்றி ட்வீட் செய்வது கொஞ்சம் வித்தியாசமான விஷயமாகத் தெரிகிறது அல்லவா? கல்லூரி காலத்தில், அவசர அவசரமாகக் காப்பியடித்து அசைன்மெண்ட்டுகளை பேராசிரியரிடம் அளிப்போமே, எனக்கு அதுதான் நினைவுக்கு வருகிறது.” என்று கூறியுள்ளார்.

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள இந்திய கிரிக்கெட் வாரியமே, டிவிட்டரில் பிரச்சாரம் செய்யச் சொல்லி, கிரிக்கெட் வீரர்களை வற்புறுத்துவதை நிறுத்துங்கள். மிகவும் அருவறுப்பாக உள்ளது.” என்று விமர்சித்துள்ளார்.

திமுக தகவல் தொழிற்நுட்ப அனியை சேர்ந்த இளையராஜா குப்புசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “அமித் ஷாவின் குழந்தை இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் வியாபாரம் செய்துக்கொண்டிருக்கிறது. உண்மையைப் பேச எந்தக் கிரிக்கெட் வீரருக்கும் தைரியம் இல்லை. தாங்கள் இந்திய கிரிக்கெட் தேர்வு செய்யப்படாமல் போய்விடுவோமோ என்று பயப்படுகிறார்கள். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. தினமும் குறைந்தது மூன்று முறையாவது விவசாயிகளின் இரத்தத்தை அவர்கள் சுவைப்பார்கள்.” என்று கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்