கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலும், ஊடகவியலாளர்கள் சங்கம் அமைக்கும் உரிமையைப் பறிக்கும் வகையிலும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் உத்தரவிற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சிலை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் போலி பத்திரிக்கையாளராக ஒருவர் செயல்பட்டதை கண்டறிந்தது. இதை தொடர்ந்து போலி பத்திரிக்கையாளர்களை ஒழிப்பது தொடர்பாக தானாக வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை செய்தது.
வழக்கை அண்மையில் ஓய்வு பெற்ற நீதிபதி என். கிருபாகரன் மற்றும் நீதிபதி பி. வேல்முருகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியான இந்த வழக்கின் தீர்ப்பில், பொதுநலன் கருதி ஊடகத்துறையை சீரமைக்கும் வகையில் தேவையான சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
”தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பைத் தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பிற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை தாங்குவார் என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
அந்த அமைப்பே, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டம் அல்லது நகரத்தில் எத்தனை பத்திரிகையாளர் அமைப்புகள் செயல்படும் என்பதை முடிவு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அந்த அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்துவதற்கும், அமைப்பின் நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கும் தமிழ்நாடு பிரஸ் கவுன்சிலுக்கே அதிகாரம் உள்ளது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர் அமைப்புகள், தங்கள் அமைப்பு சார்பாக கூட்டங்கள் நடத்துவதற்கு முன்னர் பிரஸ் கவுன்சிலிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், சாதி, மதம் மற்றும் நிலப்பரப்பு சார்ந்து பத்திரிகையாளர் அமைப்புகளை உருவாக்க அனுமதியளிக்கக் கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களுக்கு அரசு வழங்கும் நலத் திட்டங்கள் அனைத்தும் பிரஸ் கவுன்சில் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்றும், 10,000 பிரதிகளுக்குக் கீழாக விநியோகம் உள்ள தினசரி அல்லது வார இதழுக்கு அரசு அங்கீகார அட்டை வழங்கத் தேவை இல்லை என்றும் நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் ஒரு பத்திரிகையில் வெளியான செய்திக்கு எதிராக பிரஸ் கவுன்சிலில் புகார் அளிக்கலாம் என்றும், அந்த புகாரின் பேரில் நடக்கும் விசாரணையில், அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் உண்மைத் தன்மையை அந்த பத்திரிகை நிறுவனம் நிரூபிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, பத்திரிகையாளர் அமைப்புகளின் செயல்பாடுகளை அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வதற்கு வழிவகுக்குமே தவிர, இதனால் வேறு எந்த நல்ல பயனும் விளையப் போவதில்லை. அவ்வாறு பத்திரிகையாளர் அமைப்புகள் ஆளும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும்பட்சத்தில், பத்திரிகையாளர்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் அச்சுறுத்தலுக்கும், அரசே மேற்கொள்ளும் கருத்து சுதந்திர ஒடுக்குமுறைக்கும் எதிராக, பத்திரிகையாளர் அமைப்புகள் குரல்கொடுக்க முடியாத ஒரு ஆபத்தான நிலை உருவாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ”பத்திரிகை நிறுவனங்களுக்கு எதிராக பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்ற இந்த உத்தரவு, பத்திரிகை நிறுவனங்களை பழிவாங்குவதற்கு அதிகாரம் படைத்தவர்காளல் பயன்படுவதுடன், பத்திரிகை சுதந்திரதை ஒடுக்கும் நடவடிக்கைக்கும் இது வழிவகுக்கும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
”இறுதியாக, தமிழ்நாட்டில் செயல்படும் பத்திரிகையாளர் அமைப்புகள் தங்கள் அமைப்புகளின் பெயரில் “தமிழ்நாடு” என்ற வார்த்தையைக் கூட சேர்க்க முடியாத நிலை ஏற்படும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
”ஆகவே, ஒட்டு மொத்த பத்திரிகைதுறைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்து இந்த உத்தரவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.” கூறப்பட்டுள்ளது.
”தமிழகத்தில் செயல்படும் அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் ஒன்றிணைந்து இந்த உத்தரவை ரத்து செய்ய வைப்பதற்கான நடவடிக்கைகளை ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும்” மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.