Aran Sei

3200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாமிரபரணி நாகரிகம்: ‘சிவகளை அகழாய்வு பொருட்களுடன் அருங்காட்சியகம்’ – முதலமைச்சர் அறிவிப்பு

திச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரிய பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளோடு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் இது ‘பொருநை அருங்காட்சியகம்’ என அழைக்கப்படும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்று (செப்டம்பர் 9), தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டப்பேரவை விதி எண்:110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, அவர் பேசியதாவது:

“கரிமப் பகுப்பாய்வு (Carbon Dating) முடிவுகளின்படி, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாகச் சங்ககாலத் தமிழர்கள் விளங்கினர். அந்தவகையில், ‘கீழடி’ என்ற ஒற்றைச் சொல் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்தது என்றே சொல்ல வேண்டும். அதே உணர்வைத் தாங்கி தமிழக அரசின் தொல்லியல் துறை, கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் தற்போது அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அப்போது கிடைத்த பல்வேறு பழமைவாய்ந்த பொருட்கள் குறித்து, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைத் தமிழ்நாடு தொல்லியல் துறை கலந்தாலோசித்தது. அதன்படி, கீழ்க்கண்ட முக்கிய முடிவுகளை வெளியிடுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

கீழடியில் சூரியன், நிலவு மற்றும் வடிவியல் குறியீடுகள் கொண்ட முத்திரைகளுடன் கூடிய வெள்ளிக் காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதை ஆய்வுசெய்த தலைசிறந்த நாணயவியல் அறிஞரும், கொல்கத்தா பல்கலைக்கழகப் பேராசிரியருமான சுஷ்மிதா பாசு மசும்தார், இந்த வெள்ளிமுத்திரைக் காசு, கி.மு. நான்காம் நூற்றாண்டுக்கு, அதாவது, மௌரியப் பேரரசர் அசோகர் காலத்துக்கும் முற்பட்டது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே, கரிமப் பகுப்பாய்வு முடிவுகளின்படி, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தமிழி எழுத்துகளின் காலம், கி.மு. ஆறாம் நூற்றாண்டு என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதை வலுப்படுத்தும் விதமாக, தற்போது பெறப்பட்ட இரண்டு கரிம மாதிரிகளின் பகுப்பாய்வு முடிவுகளிலும்,கீழடி நாகரிகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்தது எனத் தெரியவந்துள்ளது என்ற செய்தியை நான் பெருமையோடு இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற கரிமப் பகுப்பாய்வுகளின் காலக் கணக்கீட்டு முடிவுகளின்படி, கி.மு. எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பாகவே, கொற்கை ஒரு துறைமுகமாகச் செயல்பட்டு வந்தது என்பது ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வில் கருப்பு வண்ணப்பூச்சு பெற்ற கங்கைச் சமவெளியைச் சார்ந்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

இவற்றைக் கவனமாக ஆய்வுசெய்த இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் ராகேஷ் திவாரி மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவீந்திரநாத் சிங் ஆகியோர், கொற்கைத் துறைமுகமானது கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே வெளிநாடுகளுடனும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில், ஒரு முக்கிய ஆய்வு முடிவை இங்கு நான் வெளியிட விரும்புகிறேன். தமிழ்நாடு தொல்லியல் துறையால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வின்போது ஆதிச்சநல்லூருக்கு அருகே, சிவகளைப் பறம்புப் பகுதியில் வெளிப்பட்ட முதுமக்கள் தாழி ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகள் அமெரிக்க நாட்டின் மயாமி நகரத்தில் அமைந்திருக்கும் உலகப்புகழ் பெற்ற Beta Analytical Laboratory-க்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

அதன் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் கிடைத்துள்ளன. AMS Carbon Dating முறையில் ஆய்வு செய்ததில், முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு. 1155 எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ‘தண்பொருநை’ என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிசெய்ய முடிகிறது.

பண்டைய தமிழர்களின் செழுமையான பண்பாடு, கடல்வழி வணிகம், நீர் மேலாண்மை, இரும்பு உருக்குதல், அரிய மணிகள் தயாரித்தல், முத்துக் குளித்தல் போன்ற தொழில்நுட்பங்களை உலகம் அறிந்துகொள்ளத் தேவையான சான்றுகளைச் சேகரிக்கும் வகையில், இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் அதிக அளவு நிதியாக ஐந்து கோடி ரூபாய் நடப்பு நிதியாண்டில் அகழ்வாராய்ச்சிப் பணிக்காகவும், ஆழ்கடல் அகழாய்வுக்காகவும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரிய பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளோடு அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது ‘பொருநை அருங்காட்சியகம்’ என அழைக்கப்படும்.

இதுமட்டுமல்ல; தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்தியத் துணைக்கண்டமெங்கும்; அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித் தடம் பதித்த வெளிநாடுகளிலும்; தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதிகள் பெற்று இனி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்.

முதல் கட்டமாக, சங்ககாலத் துறைமுகமான முசிறி, தற்போது பட்டணம் என்ற பெயரில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. சேரநாட்டின் தொன்மையினையும், பண்பாட்டினையும் அறிந்துகொள்ளும் வகையில், கேரள மாநிலத் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து அங்கு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும். அதேபோல், ஆந்திர மாநிலத்திலுள்ள வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைக்காடு மற்றும் ஒடிசா மாநிலத்திலுள்ள பாலூர் ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அன்றைய ரோமப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கிய எகிப்து நாட்டிலுள்ள குசிர்-அல்-காதிம் மற்றும் பெர்னிகா, மேலும் ஓமான் நாட்டின் கோர் ரோரி ஆகிய இடங்களில் பழந்தமிழகத்தோடு இருந்த வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அந்தப் பகுதிகளில், அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுநர்களோடு இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

மாமன்னர் ராஜேந்திர சோழன் வெற்றித் தடம் பதித்த தென்கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அந்தந்த நாட்டுத் தொல்லியல் வல்லுநர்கள் துணையோடு, உரிய அனுமதி பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

தொடர்புடைய பதிவுகள்:

அகழாய்வுகளுக்கு அனுமதி வழங்கும் ஆலோசனைக் குழுவில் தமிழர்கள் புறக்கணிப்பு – சு.வெங்கடேசன் கண்டனம்

2800 ஆண்டுகளுக்கு முன் நெல் பயிரிட்ட தமிழர்கள் – ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவில் தகவல்

‘விந்திய மலைகளுக்குக் கீழே இந்தியா இல்லையா?’ சு.வெங்கடேசன்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்