Aran Sei

பத்திரிகை நிறுவனங்களில் வருமானவரி சோதனை: ‘ஊடகங்களின் குரலை ஒடுக்க முயலும் வெட்கக்கேடான முயற்சி’ – ராஜஸ்தான் முதலமைச்சர்

டைனிக் பாஸ்கர் செய்தித்தாள் மற்றும் பாரத் சமச்சார் செய்தி தொலைகாட்சி நிறுவனங்களில் நடத்தப்படும் வருமான வரி சோதனை என்பது ஊடகங்களின் குரலை ஒடுக்க முயலும் ஒரு வெட்கக்கேடான முயற்சி என்று மோடி தலைமையிலான ஒன்றிய அரசை ராஜஸ்தான் முதலைமைச்சர் அசோக் கெஹ்லாட் விமர்சித்துள்ளார்.

இன்று (ஜூலை 22), காலை 7 மணி முதல்,  நாட்டின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான டைனிக் பாஸ்கர் குழுமத்தில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், குஜராத்தின் அகமதாபாத் மற்றும் மகாராஷ்டிராவில் ஒரு சில இடங்களில் உள்ள டைனிக் பாஸ்கர் குழுமத்துக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

டைனிக் பாஸ்கர் பத்திரிகை நிறுவனத்தில் வருமானவரி சோதனை – பாஜக அரசை விமர்சித்ததால் வந்த விளைவா?

இந்தி மொழியில் அதிகம் விற்பனைக்குள்ளாகும் நாளிதழிலான டைனிக் பாஸ்கர் தனது இணையதளத்தில், “கொரோனா தொற்று காலத்தில் கங்கை நதியில் மிதக்கும் சடலங்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியிட்டதால், டைனிக் பாஸ்கர் குழு மீது அரசு இதுபோன்ற சோதனைகளை நடத்தி வருகிறது.” என்று தெரிவித்துள்ளது.

டைனிக் பாஸ்கர் பத்திரிகை           நன்றி : twitter.com/tanvishukla

உத்தரபிரதேசத்தை சேர்ந்த உள்ளூர் செய்தி தொலைகாட்சியான பாரத் சமாச்சரின் வளாகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இச்செய்தி நிறுவனம் கொரோனா  நோய்தொற்றை மாநில அரசு கையாளுவதை மிகவும் விமர்சித்து வந்தது. அலுவலகங்கள் மட்டுமின்றி, அதன் ஆசிரியர் பிரஜேஷ் மிஸ்ராவின் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது.

இந்தியாவை சேர்ந்த 40 பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டனர் – சர்வதேச பத்திரிகைகள் நடத்திய புலன்விசாரணையில் அம்பலம்

இதுகுறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜஸ்தான் முதலைமைச்சர் அசோக் கெஹ்லாட், “டைனிக் பாஸ்கர் செய்தித்தாள் மற்றும் பாரத் சமச்சார் செய்தி தொலைகாட்சி நிறுவனங்களில் நடத்தப்படும் வருமான வரி சோதனை என்பது ஊடகங்களின் குரலை ஒடுக்க முயலும் ஒரு வெட்கக்கேடான முயற்சி. மோடி தலைமையிலான ஒன்றிய அரசால் தன்மீதான இச்சிறிய விமர்சனத்தை கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தன் பாசிச மனப்பான்மையால், இந்த ஜனநாயக அமைப்பில் நிலவும் இந்த உண்மையைப் பார்க்கக்கூட பாஜக விரும்பவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதன் வழியாகவும், ஊடகங்களின் வாயை அடைப்பதன் வழியாகவும், மோடியின் மீடியாவாக (கோடி-மீடியா) ஊடகங்கள் மாறாவிட்டால், அதன் குரல் ஒடுக்கப்படும் என்ற செய்தியை மோடி அரசு தெரிவிக்க விரும்புகிறது என்று அவர் விமர்சித்துள்ளார்.

‘பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக்கி எதிராக வலதுசாரிகளின் இனவெறி பரப்புரை கவலையளிக்கிறது’ – பத்திரிகையாசிரியர்கள் சங்கம்

இதுதொடர்பாக, டிவீட் செய்துள்ள டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால், “டைனிக் பாஸ்கர் மற்றும் பாரத் சமச்சார் மீது நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகள் வழியாக ஊடகங்களை பயமுறுத்த பாஜக முயல்கிறது. ஒன்றை தெளிவாக சொல்கிறார்கள். பாஜகவிற்கு எதிராக பேசுபவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதுதான் அது.” என்று கூறியுள்ளார்.

மேலும், பாஜகவின் இவ்வகையான சிந்தனைகள் மிகவும் ஆபத்தானது என்றும், அனைவரும் இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்றும் டெல்லி முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

source; thehindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்