Aran Sei

குடியுரிமை திருத்தச் சட்டம் : விரைவில் விதிமுறைகள் – உள்துறை அமைச்சகம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் விதிமுறைகள் இன்னமும் தயாரிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்ட விதிகளில் இன்னமும் மாற்றங்கள் செய்யப்பட்டுக்கொண்டிருப்பதால், அச்சட்டம் இயற்றப்பட்டு ஒரு வருடமாகியும் செயல்பாட்டிற்கு வரவில்லை என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி 2020 மார்ச் மாதம் வரை குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களும் கலவரங்களும் நடந்து வந்த நிலையில், நீண்ட காலம் கழித்து குடியுரிமைச் சட்டத்தைக் குறித்துப் பேசுகிறது உள்துறை அமைச்சகம். குடியுரிமைச் சட்டத்தின் பாகுபாடான விதிகளுக்கு எதிராக அசாம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மேகாலயா மற்றும் டெல்லியில் நடந்த போராட்டங்களில் வெவ்வேறு நிகழ்வுகளில் 83 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், தி இந்து நிறுவனம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், குடியுரிமைச் சட்டத்திற்கு விதிமுறைகளை அமைப்பது குறித்து பதிவு செய்த கேள்விக்குப் பதிலாகவே உள்துறை அமைச்சகம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டினர் பிரிவின், (குடியுரிமை) இயக்குநர் பி.சி.ஜோஷி, தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்த கேள்விக்குப் பதிலளிக்கும் போது, “குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 தொடர்பான விதிமுறைகள் இன்னமும் தயாரிப்பில்தான் உள்ளன. ஆகஸ்ட் 2020ல் இது தொடர்பான எந்தக் கடிதத்தையும் நாடாளுமன்றக் குழுவிற்கு நாங்கள் அனுப்பவில்லை. நீங்கள் அறிய நினைக்கும் தகவல் குறித்து விவரமாகக் கேட்டால், அதைக் கண்டுபிடித்துக் கொடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 31,2014 -ற்கு முன் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் மதச் சிறுபான்மையினராக இருந்து இந்தியாவில் வந்து குடியேறிய ஆறு மதப் பின்புலங்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குகிறது குடியுரிமை திருத்தச் சட்டம். இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சி மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த மக்களுக்குக் குடியுரிமை வழங்கும் இச்சட்டம், இஸ்லாமியர்களைப் பட்டியலில் சேர்க்காதது மத வேற்றுமையின் வெளிப்பாடாக உள்ளது.

(தி இந்து இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்