Aran Sei

மாஸ்டர் ரிலீஸ் – திரையரங்கு அதிபர்களுக்கு கை கொடுக்கும் விஜய்

Image Credit : Hindustan Times

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்படுவதாக படக்குழு நேற்று அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி திரைத்துறை சார்ந்த அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்.

மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளராக விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ உள்ளார். ஆரம்பத்திலிருந்தே மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட நடிகர் விஜய் விரும்புகிறார். அதனால் மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்குகளில் தான் வெளியிடப்படும். தக்க தருணம் வரும் பொழுது படத்தை வெளியிடுவோம் என்று தயாரிப்பு தரப்பு கூறிவந்தது.

திரையரங்குகள் திறக்கப் பட்டாலும் சிறிய பட்ஜெட் படங்கள் மட்டும் தான் தற்பொழுது ரிலீஸ் செய்யப்படுகின்றன. பெரிய நடிகர்களின் படம் வெளியிடப்படாததால் இந்த படம் பார்க்க பெருவாரியான ரசிகர்கள் வருவதில்லை. இந்த நிலை மாற வேண்டுமென்றால் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியிடப்பட வேண்டும். அப்பொழுதுதான் ரசிகர்கள் படம் பார்க்க வருவார்கள். அதன்பிறகுதான் திரைத்துறை சரிவிலிருந்து மீண்டு எழும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் காத்திருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யும் வகையில் நடிகர் விஜய் தமது திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். அதன்படி மாஸ்டர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும். இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு பாக்கியராஜ், ஆண்டிரியா ஆகியோரும் நடித்துள்ளனர். திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

முன்னதாக நடிகர் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்பொழுது தமது திரைப்படம் வெளியிடப்படுவது தொடர்பாக தமிழக அரசின் உதவியை நாடியுள்ளார். இந்த சந்திப்பு நடந்த உடனடியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக திரையரங்குகள் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. அரசு ஊரடங்கு சட்டத்தில் பல தளர்வுகள் கொடுத்தாலும் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி தரவில்லை. இதன் காரணமாக பல தமிழ் திரைப்படங்கள் OTT தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெங்குயின், விஜய் சேதுபதி நடித்த கணவர் பெயர் ரணசிங்கம் போன்ற பல திரைப்படங்கள் நேரடியாக OTT தளத்தில் வெளியிடப்பட்டன.

குறிப்பாக நடிகர் சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் திரைத்துறையில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. நவம்பர் மாதத்தில் திரையரங்குகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்தாலும் பார்வையாளர்கள் அனுமதிப்பது குறித்து பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. திரையரங்குகள் பாதி அளவு மட்டுமே நிரப்பிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. திரைப்படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் ஒரு இருக்கை விட்டு ஒரு இருக்கையில் அமர வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக சூரரை போற்று படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் நடிகர் சூர்யா நேரடியாக OTT தளத்தில் வெளியிட்டார்.

நடிகர் சூர்யா திரைத்துறை இக்கட்டில் சிக்கியிருக்கும் இந்த தருணத்தில் தமது படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் லாப நோக்கை மட்டும் கருதி OTT தளத்திற்கு நமது படத்தை விற்றுவிட்டார் என்று திரையரங்க உரிமையாளர்கள் குற்றம் சாட்டினார்கள். ஒரு படி மேலே சென்று நடிகர் சூர்யா நடிக்கும் எந்த திரைப்படத்தையும் திரையரங்குகளில் வெளியிட போவதில்லை என்று அறிவிப்பு செய்தனர்.

என்றாலும் OTT தளத்தில் புதுப் படங்கள் வெளியிடுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த பொங்கல் பண்டிகைக்கு கூட நடிகர் ஜெயம் ரவி நடித்த பூமி, நடிகர் மாதவன் நடித்த மாறா போன்ற திரைப்படங்கள் நேரடியாக OTT தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

திரையரங்குகளில் வெளியிடப்படும் மாஸ்டர் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் திரண்டு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. திரையரங்குகளில் முழு கொள்ளளவை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை தமிழக அரசால் வெளியிடப்படவில்லை.

என்றாலும் நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தபோது இது சம்பந்தமாக பேசி இருப்பார். அதனால் பொங்கலுக்கு முன்பு திரையரங்குகள் முழு கொள்ளளவுடன் திரைப்படங்கள் திரையிடுவதற்கு அனுமதி வழங்கும் தமிழக அரசு ஆணை வரும் என்ற எதிர்பார்ப்பு திரையரங்கு உரிமையாளர்களிடம் உள்ளது.

திரைத் துறைக்கு விஜய் செய்துள்ள இந்த உதவி திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கலாம்.

மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியிட படுவது திரைத்துறைக்கு நிச்சயம் புத்துணர்ச்சியை கொடுக்கும். திரைத்துறை சரிவிலிருந்து நிச்சயம் மீண்டு எழும். விஜய் தனது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரைத்துறைக்கு கொடுக்கும் பொங்கல் பரிசு தான் இந்த மாஸ்டர் படத்தின் வெளியீடு.

– சியாம் சுந்தர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்