Aran Sei

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்

 

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி சினிமாவிலும் வலம் வந்த நகைச்சுவை நடிகர் ‘வடிவேல் பாலாஜி’ உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தொலைக்காட்சி மற்றும் திரைத்துறையினரோடு அவரது ரசிகர்களையும் இச்சம்பவம் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு’ என்கிற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் வடிவேல் பாலாஜி. நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தீவிர ரசிகரான பாலாஜி, வடிவேலுவின் தாக்கத்தில் அவரைப் பின்பற்றி நடிகரானதால் வடிவேல் என்கிற பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து ‘அது இது எது’ போன்ற நிகழ்ச்சிகளிலும் நடித்த அவர் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். வடிவேலுவின் தாக்கம் நிறைந்திருந்தாலும் தனக்கான தனித்துவமான நடிப்பால் பலரது விருப்புக்குரிய கலைஞராக திகழ்ந்தார். இரட்டை அர்த்தம் தொனிக்கும்படியோ, அடுத்தவர் மனதைப் புண்படுத்தும்படியோ அல்லாமல் அனைவரையும் ரசிக்க வைக்கும் வகையில் கவுன்டர் கொடுப்பதில் வடிவேலு பாலாஜிக்கு நிகர் அவர்தான் என்று சக கலைஞர்கள் கூறுவர்.

இவர், மாரடைப்பு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாத சூழலில் இறுதியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மரணத்துக்கு தொலைக்காட்சி மற்றும் திரைத்துறையினர் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். நகைச்சுவை மூலம் மக்களை சிரிக்க வைத்த ஓர் கலைஞன் தனது 45வது வயதில் உயிரிழந்தது வேதனைக்குரிய ஒன்று.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்