“முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரித்த தமிழ்ப் படங்களை வரவேற்ற சென்சார் போர்ட்டும் சமூகமும் அவர்கள் பக்கம் இருக்கும் நியாயங்களைச் சொல்லும் போது மட்டும் ஏன் மல்லுக்கட்டுகிறது” என்று தெளிவுப்பாதையின் நீச தூரம் படத்தின் இயக்குநர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் ,1998 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை மையமாக வைத்து, ‘தெளிவுப்பாதையின் நீச தூரம்’ என்ற திரைப்படத்தைக் கோவையைச் சேர்ந்த அரவிந் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் தியேட்டர் வெளியீடு, திரைப்பட விழாக்கள் மற்றும் தனித்திரையிடல்களுக்கான அனுமதிகளுக்குக் காவல்துறை பல தடைகள் விதித்தது. சமீபத்தில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின், மூவிவுட் என்ற திரைப்படச் செயலியில் படம் வெளியானது.
இந்நிலையில், திரைப்படத்தின் இயக்குநர் அரவிந், தனது ஃபேஸ்புக் பக்கத்தில், திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதில், “நீதி கிடைக்காத மக்களுக்காக ஒரு திரைப்படம் எடுத்து அதை மக்களுக்குத் திரையிட நினைப்பது என்ன அவ்வளவு பெரிய தேச துரோகமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு இஸ்லாமிய ஆணும், இந்து பெண்ணும் முத்தமிட்டால்.. – அதனால் என்ன?
ஒரு பக்கம் தணிக்கை மூலம் அரசு தடையால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் படம் முடக்கப்பட்டது என்றும் தனித்திரையிடல்களும் காவல் துறையால் தடை செய்யப்பட்டது என்றும் சுட்டிக்காட்டி, ”இப்போது படத்தின் முகநூல் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
”உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்று எனத் தன்னை பெருமை பிதற்றிக்கொள்ளும் இந்த நாட்டில், நடந்த உண்மைகளை ஒரு சாதாரண திரைப்படமாய் எடுத்து வெளியிட எத்தனை தடைகளைக் கடக்க வேண்டியுள்ளது. ஒரு கட்டத்தில் அயர்ச்சி தான் மிஞ்சுகிறது.” என்று கூறியுள்ளார்.
சென்ற வாரம் தெளிவுப்பாதையின் நீச தூரம் பார்த்த சிலர் அழைத்து மனம் திறந்து பாராட்டினர் என்றும் இத்தனை நாள் இந்த சினிமாவால் இஸ்லாமியச் சமூகம் எவ்வளவு இழிவாகச் சித்திரிக்கப்பட்டதை நினைத்து வெதும்பியிருந்த நிலையில் இந்தப் படம் பெரும் நம்பிக்கையைக் கொடுத்ததாக அலைபேசி மூலம் பலர் பகிர்ந்துகொண்டனர் என்றும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
’முஸ்லீம்கள் மீது வெறுப்பை பரப்புவதா?’- உச்சநீதி மன்றம் கேள்வி
மேலும், இனி எத்தனை தடைகள் வந்தாலும், படம் தன் நோக்கத்தை அடைந்துகொண்டிருக்கிறது என்கிற பேராறுதலோடு, வரும் தடைகளைக் கடக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
”கடைசியில் ஒரு கேள்வியோடு முடிக்கிறேன், சென்சார் அதிகாரிகளிடம் நாங்கள் கேட்ட அதே கேள்விதான். முஸ்லிம்களைத் தீவிரவாதிகள் என்று சித்திரித்த எத்தனையோ தமிழ்ப் படங்களை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற இந்த சென்சார், சமூகம் எல்லாம் ஏன் அவர்கள் பக்கம் இருக்கும் நியாயங்களை எடுத்துச் சொல்லும் போது மட்டும் மல்லுக்கட்டுகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உமர் காலித்திற்குள் ‘தீவிரவாதியை’ தேடுகிறார்கள் – தாரப் ஃபரூக்கி
இதுகுறித்து, அவரிடம் அரண்செய் பேசிய போது, “காலையில் எழுந்து பார்த்தால், பக்கம் முடப்பட்டிருக்கிறது. புதிய பக்கத்தை மீண்டும் ஆரம்பிப்பது பெரிய விஷயமில்லை. ஆனால், கடந்த நான்கு வருடங்களாக இந்தப் படத்தைப் பற்றிய தகவல்கள், வெளியீட்டில் ஏற்பட்ட தடைகள் பற்றி எழுதி வந்தோம். எல்லாம் இப்போது அழிக்கப்பட்டுள்ளன.” என்று கூறியுள்ளார்.
மேலும், ”திரைப்படத்திற்கு மக்களிடம் பெரிய வரவேற்புகள் வருகிறது. அதேநேரம், படம் வெளியான ‘மூவிவுட்’ செயலியின் உரிமையாளருக்கு வாட்ஸ் அப்பில் சில மிரட்டல்கள் வந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
50 ரூபாய் செலுத்தி, ’தெளிவுப்பாதையின் நீச தூரம்’ திரைப்படத்தை Moviewud செயலியில் பார்க்கலாம்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.