இயக்குநர் மிஷ்கின் திண்டுக்கல் நாகல் நகரில் உள்ள என்விஜிபி திரையங்கில் தன் அப்பாவுடன் பார்த்த முதல் சினிமாவைப் பற்றியும் அந்தத் திரையரங்கின் தற்போதைய நிலை குறித்தும் தன் முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒருவராகக் கருதப்படுபவர் இயக்குநர் மிஷ்கின். `சித்திரம் பேசுதடி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு படங்களின் மூலம் தனக்கெனத் தனி வழி வகுத்துக்கொண்டவர். 2020 ஆம் ஆண்டு வெளியான சைக்கோ திரைப்படமும் அதில் இடம்பெற்ற பாடல்களும் திரை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.
ஆண்ட்ரியா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘பிசாசு 2’ படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் மிஷ்கின். கார்த்திக் ராஜா இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், தன் வாழ்க்கையை ஓடவைத்த திரையரங்கின் தற்போதைய நிலை குறித்து இயக்குநர் மிஷ்கின் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
“இன்று மதியம் திண்டுக்கல்லில் உள்ள என்.வி.ஜி.பி தியேட்டருக்கு சென்றேன். பழைய ஞாபகங்கள் பெருவெள்ளமாய் என்னை அடித்தது. என்னுடைய ஐந்தாவது வயதில் என்னுடைய தந்தை என்னை இந்த தியேட்டருக்குள் அழைத்துச் சென்றார். படம் பார்த்து விட்டு வெளியே வந்தேன். “எப்படிப்பா இருக்கு?” என்று என் தந்தை கேட்க. “ரொம்ப நல்லாருக்குப்பா” என்று சொன்னேன். என் தந்தை என் கையை பிடித்துக்கொண்டு மீண்டும் தியேட்டருக்குள் சென்று கியூவில் நின்று டிக்கெட் வாங்கி இரண்டாவது முறையாக என்னைப் படம் பார்க்கவைத்தார். அதுதான் என்னுடைய முதல் திரைப்படம். அது புரூஸ் லீ நடித்த ‘எண்டர் தி டிராகன்’ (Enter The Dragon).” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.