Aran Sei

படங்களை வெளியிட மாட்டோம். தயாரிப்பாளர்கள் போர்க்கொடி.

கோரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக தமிழ்நாட்டில் திரையரங்குகள் கடந்த மார்ச் 23ம்  மூடப்பட்டது. ஊரடங்கு விதிமுறைகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சார்பில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு சில கோரிக்கைகளை முன் வைத்து  கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்துக்கு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில், கடந்த 10 ஆண்டுகளாக க்யூப் கட்டணத்தை தயாரிப்பாளர்கள்தான் செலுத்தி வருவதாகவும், இனிமேல் அக்கட்டணத்தை தங்களால் செலுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

திரைப்படத்தைத் தயாரித்து மக்களைத் திரையரங்கிற்குக் கூட்டி வருவதற்காக கோடிக்கணக்கில் செலவு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு, திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரத்திற்கான வருவாயில் குறிப்பிட்ட அளவு பங்கு ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் நியூ, புக் மை ஷோ போன்ற ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முறையில் கிடைக்கும் வருவாயிலும் தயாரிப்பாளர்களுக்கு பங்கு தர வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த கோரிக்கைகளை திரையரங்கு உரிமையாளர்கள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், திரையரங்குகள் திறப்பதற்கான அறிவிப்பு வருவதற்குள் இரு தரப்பினரும் கலந்து பேசி இது குறித்து தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கும்போது திரைப்படங்களை வெளியிட முடியும் என நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்