Aran Sei

சூரரைப் போற்று: தரமான படைப்பு – அருண் நெடுஞ்செழியன்

“சூரரைப் போற்று” படத்தின் காலகட்டமானது தொன்னூறுகளில் முன்பும் பின்புமான மூன்று ஆண்டுகளை மையப்படுத்தியது.அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வேகமாக தனியார்மயப்படுத்துகிற காலம்;உலகப் பெருநிறுவனங்களும் உள்நாட்டு நிறுவனங்களும் தனியாகவும் ஒப்பந்தம் செய்துகொண்டும் போட்டி போட்டுக் உள்நாட்டு சந்தைகளை கைப்பற்ற முனைகிற காலம்;இதையேதான் தாராளமய சகாப்தம் அனைவருக்குமான வாய்ப்பை வழங்குகிறது என முன்னால் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு உரையில் குறிப்பிட்டிருப்பார்.

இந்த வரலாற்றுக் காலகட்டத்திலே விமான சேவைத் துறையிலே பெரிய மூலதன பலமும் அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு நடுத்தரவர்க்க இளைஞனின் பெரும் தொழில்முனைவுக் கனவுப் போராட்டத்தை நரம்பும் சதையுமாக சூரரைப் போற்று கண் முன்னே நிறுத்துகிறது.

விமான சேவைத் துறையிலே ஏகபோக சக்திகளுடனான போராட்டம் ஒரு பக்கமும் சொந்த நிறுவனத்தை தொடங்க முதலீடு இல்லாமல் சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி அல்லல் படுகிற பொருளாதார நெருக்கடி மற்றொரு புறமும் குடும்ப பரமாரிப்பு உற்றார் உறவினர்களின் ஏச்சு பேச்சுகள் பிறிதொரு புறம் என தொடக்க கால தொழில்முனைவோர் எதிர்கொள்கிற அனைத்துவிதமான நெருக்கடிமிக்க வாழ்க்கைப் பாடுகளை சூர்யாவின் மாறன் கதாப்பாத்திரம் சிறு பிசிறு தட்டாமல் பிரதிபளிக்கிறது.

‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தாமதம் – சூர்யாவின் கடிதமும், பின்னணியும்

இத்தனை நெருக்கடிகளையும் எதிர்கொள்ள இயலாமல் பல கட்டங்களில் உடைந்து அழுது உரக்கக் கத்தி தனது இயலாமையை வெளிப்படுத்துகிற சூர்யாவின் நடிப்புத்திறன் பார்ப்போரை கலங்கச் செய்வது.

சூரரைப் போற்று பேசுகிற அரசியல் ஒரு சமூக எதார்த்தம்.ஆனால் இன்று இந்தியாவின் சாமனிய நடுத்தர வர்க்க மனிதனின் தொழில்முனைவுக் கனவு மாறன் போல வெற்றியில் முடிவதில்லை.மூலதன நெருக்கடியும் குடும்ப நெருக்கடியும்,நம்பிக்கையின்மையும் பல இளைஞர்களின் தொழில்முனைவுக் கனவுகளை சிதைத்துள்ளன.

இப்படத்திலே பொம்மி பாத்திரப் படைப்பும் மாறனுடனான காதல் வாழ்கையும் சிறு காவியம்!படத்திலே இச்சிறு காவியம் இல்லையென்றால் படமானது,இயந்திர கதியான தொழில் முன்னேற்ற படமாக கூட மாறியிருக்கும்! சாதிக்கு எதிரான மாறனின் கருத்துக்கள்,கருஞ்சட்டை அணிந்து சாதி மறுப்பு திருமணம்,நானொரு சோசலிஸ்ட் என்கிற வசனம் போன்ற முற்போக்கு அம்சங்கள் இயக்குனரின் அரசியல் கூர்மையை ஆழமாக வெளிப்படுத்துகிறது.

ஆனால் இப்படம் பார்த்த பின்னர் வேறு சில எண்ணங்களும் கூடவே வந்து போகிறது.படத்தைப் பொறுத்தவரையிலே கார்பரேட் உடனான போராட்டத்தில் வெற்றியுடைந்த மாறனின் சாதனை பயணத்தின் தொடக்கத்தோடு முடிகிறது.ஆனால் இப்படத்தை பார்த்த ஆர்வத்திலே புதிதாக ஒரு திட்டத்தோடு ஏதேனும் ஒரு துறையில் நுழைய முயல்கிற நடுத்தர வர்க்க மாறன் தற்போது வளர்ந்து நிற்கிற ஏகபோகத்தை வீழ்த்தி பொருளாதார சாதனை நிகழ்த்த முடியுமா என எண்ணத் தோன்றுகிறது.

 

சூரரைப் போற்றலாமா..??? – நவநீத கண்ணன்

 

தொழில் முனைவோர்களது எதார்த்த வாழ்க்கையில் மாறனுக்கு வாய்த்த பொம்மி போலவோ அவனது தாய் போலவோ அவனது ஊர்க்காரர்கள் போலவோ அமைவதில்லை!இவை படத்திற்கேற்ப புனைவு பாத்திரமாக படைக்கப்பட்டாலும் கூட ராணுவ பின்புலம் உண்மையானது.இது கோபிநாத்துக்கு கூடுதல் பலம்தான்.கேப்டன் கோபிநாத் என்றுதான் அழைக்கப்படுகிறார்.மாறன் கதாபாத்திரத்தின் உண்மை கதாநாயகன் கோபிநாத் இந்தியாவின் விதி விலக்கு.அண்மையில் காபி டே சித்தார்த்தாவின் தற்கொலை இந்தியாவின் சிறு குறு தொழில் முனைவோர்களின் இன்றைய எதார்த்த வாழ்க்கைப் பாடுகளை காட்டுகிறது.

இன்று இந்தியாவின் ஏகபோக சக்திகளாக பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள அதானியின் விமான நிலையத்தை கேரள அரசால் கூட தடுத்து நிறுத்த முடியவில்லை.அம்பானியின் ஜியோவிற்காக பிஎஸ்என்எல் காவு கொடுக்கப்பட்டது.இன்று தொலைதொடர்பு துறையிலே நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவர் நுழைய முடியாது.அப்படி ஒருவர் செய்தால் அது தற்கொலைக்கு சமமானது.ஏன் கோபிநாத்தின் பயணம் கூட 2006,2007 இற்குப் பிறகு ஏற்றத்தாழ்வாக சென்று தற்போது அஸ்தமன நிலைக்கு வந்துவிட்டது. முதலில் தனது நிறுவனத்தை மல்லையாவின் கிங் விஷரோடு இணைத்தார்.பிறகு பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டது.வங்கியில் வாராக் கடன் எகிறியது.தொடர்ந்து விமான சேவை சந்தையில் வெற்றியோடு தொடர்ந்து நீடிக்க முடியாமல் போகிறது.ஒருகட்டத்தில் தனது Deccan 360 நிறுவனத்தில் கால் பங்கை முகேஷ் அம்பானிக்கு விற்றார்.தற்போதும் கூட இந்தியாவின் பெரு நகரில் உள்ள விமான நிலையங்கள் தனியார்மயமாவதால்,அவை லாபத்தை மட்டுமே கணக்கில் கொள்வதாகவும் பெரிய விமானங்களை மட்டுமே அனுமதித்து வருமானத்தை பெருக்கிக்கொள்வதகவும் பேட்டியொன்றில் ஆதங்கப்படுகிறார். சரி இவைபோகட்டும்..

நடுத்தர வர்க்கத்தின் விமானக் கனவை சாத்தியமாக்கிய வகையில் கோபிநாத் இன்றும் என்றும் நினைவுக் கூறப்படுவார்.இதை பல ஆயிரம் பேருக்கு எடுத்துச் சென்ற சூரரைப் போற்று சமகாலத்தின் தரமிக்க படைப்பு..

– அருண்‌ நெடுஞ்செழியன்

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்