Aran Sei

சூரரைப் போற்று – நிழல், நிஜம் மற்றும் மேக்கிங் – இரா.முருகவேள்

சூரரைப் போற்று படத்தின் மீதான விமர்சனங்களை மூன்றுவிதமாகப் பிரிக்கலாம்.

  1. இந்தப் படமானது டெக்கான் ஏர்வேஸ் என்ற விமான நிறுவனத்தின் அதிபரான ஜி. ஆர். கோபிநாத் எழுதிய Simply fly- a Deccan odyssey என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் படம் அவர் எழுதாத பல விஷயங்களையும், மிகைப்படுத்தல்களையும் கொண்டுள்ளது. பொய்யான தகவல்களைக் கூறுகிறது.
  2. இப்படம் லாபநோக்கத்துடன் செயல்பட்ட ஒரு முதலாளியை மக்கள் நலனுக்காகச் செயல்பட்ட ஹீரோவாகக் காட்டுகிறது.
  3. அழுகை, புலம்பல், மலிவான உணர்ச்சிகளைத் தூண்டும் மெலோடிராமா காட்சிகளைக் கொண்ட ஸ்டிரியோ டைப் மேக்கிங்.

முதல் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். ஜி.ஆர். கோபிநாத் இந்திய விமானப்படையில் கேப்டன் என்ற அதிகாரி மட்டத்திலான பொறுப்பில் இருந்தவர். ராணுவ வீரர்களின் மறுவாழ்வுக்காக அரசு வழங்கிய முப்பது ஏக்கர் நிலத்தில் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு ரோலக்ஸ் விருது பெற்றவர்.

பின்பு டெக்கான் ஏவியேசன் என்ற வாடகை ஹெலிக்காப்டர் சர்வீஸ் நிறுவனம் நடத்தினார். அது பெரிய வளர்ச்சி கண்டது. பெரும் கார்ப்பரேட் நிறுவன அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அவரது வாடிக்கையாளர்களாக இருந்தனர். இந்தியாவிலும் இலங்கையிலும் இது முக்கியமான நிறுவனமாக இருந்தது.

இந்தச் சூழலில்தான் இந்தியாவில் 500 விமான நிலையங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன என்பதைத் தற்செயலாகக் கண்டுபிடிக்கிறார். விமானப் பயணம்  செலவு பிடிப்பதாக இருப்பதால் அதில் நடுத்தர வர்க்கத்து மக்கள் பயணம் செய்வதில்லை. விமானக் கட்டணத்தைக் கொஞ்சம் குறைத்து அவர்களும் பயணம் செய்யும் படி செய்தால் விமான நிறுவனத்துக்கான சந்தை பெருமளவு பெருகும் என்ற முடிவுக்கு வருகிறார்.

கூடவே நடுத்தர வர்க்கத்து மக்கள் வாழும் சிறுநகரங்களுக்கு விமானச் சேவையை விரிவுபடுத்தினால் இந்தக் கட்டணக்குறைப்பால் ஏற்படும் இழப்பை விட அதிக லாபத்தை ஈட்டலாம் என்று முடிவு செய்கிறார்.

2003ல் ஏர் டெக்கான் என்ற விமான நிறுவனத்தைத் தொடங்கி உண்மையிலேயே மலிவு விலை சேவையை அளிக்கிறார். பின்பு அது நட்டமடைகிறது. முதலில் விஜய் மல்லையாவுக்கு விற்க மறுப்பவர் பின்பு 1000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். அல்லது அந்த சூழலை ஏர் டெக்கான் பங்குகளைக் கைப்பற்றியும், விமானிகளை வேலையை விட்டு விலகச் செய்தும் மல்லையா ஏற்படுத்துகிறார்.

படத்தில் நெடுமாறனின் ஒரே நோக்கம் மக்களுக்கு மலிவு விலையில் விமானப் பயணம் செய்யும் வாய்ப்பை அளிப்பது என்று மிகவும் பிடிவாதமாகக் காட்டப்படுகிறது. அவருக்கு அந்த நோக்கம் ஏற்பட்டதற்குப் பின்னுள்ள காரணங்களாக கோடம்பாக்கத்துக்கே உரிய கற்பனையான காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. தனது தந்தையின் இறப்புக்கு வர முடியாமல் நெடுமாறன் விமானநிலையத்தில் கதறி அழுகிறார். விஜய் மல்லையாவிடம் சோஷலிசம் பேசுகிறார். . . ஏறக்குறைய ஜீரோவிலிருந்து தொடங்குகிறார். அவர் பணமோ செல்வாக்கோ இல்லாதவர் என்று காட்டப்படுகிறது.

நூலில் இருப்பது படத்தில் இல்லை என்ற விமர்சனம் வரும்போது போது காட்சி ஊடகம் வேறு, நூல் வேறு இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நண்பர்கள் வலியுறுத்துகிறார்கள்.

ஆனால் உள்ளடக்கத்தை மாற்றவும், திரிக்கவும் யாருக்கும் உரிமை இல்லை. உலகமயமாக்கல் புதிய தொழில் வாய்ப்புகளை வழங்குகிறது. அதில் ஒன்று தனியார் விமான சேவை. தனியார் வசம் ஒப்படைக்கப்படும் போதே சேவை என்பது லாபம் என்பதாக மாறிவிடுகிறது. ஜி ஆர் கோபிநாத் பி ஜே பி டிக்கெட்டில் தேர்தலில் நின்றவர். வலதுசாரி எண்ணங்கள் கொண்டவர். உலகமயத்தைப் பயன்படுத்திக் கொண்டவர். ஏற்கெனவே நடந்த சமபவங்களை வேறுவிதமாகக் காட்டுவதும், அது புனைவு, கோபிநாத் ஒரு இன்ஸ்பிரேஷன் மட்டுமே என்று சொல்வதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

நூலின் உள்ளடக்கத்தைச் சிதைக்காமலேயே நூலைவிட உயர்ந்து நின்ற படங்கள் உள்ளன. தாகூர் எழுதிய சாருலதா என்ற குறுநாவல் மிகச் சாதாரணமானது. அது அவருக்கும் அவரது அண்ணிக்கும் இடையே இருந்த காதலை மறைமுகமாகச் சுட்டியதன்  காரணமாகவே பேசப்பட்டது.

ஆனால் சத்யஜித் ரே கை பட்டதும் இந்தச் சாதாரணமான கதை மிக அற்புதமான சினிமாவாக மாறியது. இன்றுவரை அழகியலுக்கும், கதை சொல்லும் உத்திக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. ரே பாத்திரங்களை வளர்த்தெடுத்தார். சிற்சில மாற்றங்கள் செய்தார். ஆனால் உள்ளடக்கத்தை ஒரு சிறிதும் சிதைக்கவில்லை. தாகூர் சொல்லாத வேறு ஒன்றைச் சொல்லவில்லை.

அதே போலத்தான் டெர்சு உஸாலா என்ற ரஷ்ய நாவல். விளாடிமிர் அர்சன்யேவ் என்ற எழுத்தாளர் எழுதிய இந்த நாவல் பழங்குடி மக்களுக்கும் காட்டுக்குமான, இயற்கைக்குமான உறவைப் பேசுகிறது. ஏராளமான அற்புதமான தகவல்கள், சம்பவங்கள் இருந்தாலும் நாவல் போர் அடிக்கும். படிக்க மிகுந்த பொறுமை தேவைப்படும்.

ஆனால் அகிரா குரோசோவா இந்த சலிப்பூட்டும் நாவலை மிகுந்த சுவாரஸ்யமான, அறிவுபூர்வமான திரைப்படமாக மாற்றினார். பழங்குடிகளுக்கும் வனத்துக்குமான ஆத்மார்த்தமான உறவை அற்புதமான கவிதையாகத் திரையில் தீட்டினார். நாவலின் சிக்கல் சிடுக்குகளையெல்லாம் நீக்கி தெளிந்த நீரோடையாக திரைக்கதையை வளர்த்தெடுத்தார்.

இந்த இயக்குநர்கள் நாவலில் நல்லவராக வருபவரை கெட்டவராகவும், மோசமான நோக்கத்தை நல்லதாகவும் மாற்றவில்லை. அதற்கான உரிமை அவர்களுக்கு இல்லை என்பதை அவர்கள் நன்குணர்ந்திருந்தனர்.

எழுத்தில் இருந்ததை காட்சி மொழி மூலம் மேலும் கூர்மைப் படுத்தினரே ஒழிய மலிவான கற்பனையாக காட்சிகளைக் கொண்டு கீழிழுக்கவில்லை.

இப்படம் நூலை முழுவதும் அடிப்படையாகக் கொண்டது அல்ல என்று சொல்வது ஒரு தற்காப்பு மட்டுமே. படத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும்  படத்துக்கும் கோபிநாத்துக்கும் இடையேயான உறவு தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

 

  1. முதலாளியை கதாநாயகன் ஆக்குவது என்ற அம்சத்தை எடுத்துக் கொள்வோம். இதில் தவறு ஒன்றுமில்லை. ஒரு முதலாளியையோ, விளையாட்டு வீரரையோ, அரசு தலைவரையோ பற்றிப் படம் எடுக்கும் போது கதை அவரைச் சுற்றித்தான் பின்னப்படும். எடுப்பவரின் அரசியலைப் பொறுத்து படத்தின் கோணம் மாறுபடும். ரத்தம் குடிக்கும் பிசாசு என்று வர்ணிக்கப்படும் கவுண்ட் டிராகூலா ருமேனியா நாட்டின் தேசிய நாயகன் என்று சித்தரித்துப் படம் வந்து இருக்கிறது. கலிகூலா சீசரைப் பற்றி படமும், ஆவணப்படங்களும் வந்துள்ளன. அதே போல கோபிநாத் பற்றியும் படம் வரலாம். அவரை உயர்வாகவும் காட்டலாம். ஆனால் அவர் செயல்பட்ட கார்ப்பரேட் உலகை படம் ஒழுங்காகக் காட்டி இருக்கிறதா என்பதுதான் முக்கியம். இந்தப் படத்தில் கார்ப்பரேட் உலகமே இல்லை. அதன் நெளிவுசுளிவுகள், போட்டி, லாப நட்டங்கள் ஏதோ தனிநபர் ஏமாற்று போலவே காட்டப்படுகின்றன.

சூரரைப் போற்று: தரமான படைப்பு – அருண் நெடுஞ்செழியன்

நாம் நேரடியாகப் பார்க்க வாய்ப்பில்லாத ஒரு உலகைக் காட்டும் வாய்ப்பை சூரரைப் போற்று தவற விட்டுட்டுள்ளது. இதுவரை போகாத புதிய தளங்களுக்குப் போவதே சினிமா, இலகியம், ஓவியம் போன்றவற்றின் தனித்தன்மைக்கு காரணமாக அமையும். இதில் அவ்வாறு செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தும் செண்டிமெண்ட், வில்லத்தனம் என்று சுருக்கிக் கொண்டது படத்துக்கு பாமரத்தன்மையை அளித்து அதை  வழக்கமான தமிழ் மசாலாவாக மாற்றுகிறது.

  1. இறுதியாக மேக்கிங். இந்தப் படத்தின் மேக்கிங் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லப்படுவது சங்கடப்படுத்துகிறது. படம் முழுக்க நெடுமாறன் இறுகிய முகத்துடன் இருக்கிறார். அழுகிறார். புலம்புகிறார். கெஞ்சுகிறார். கத்துகிறார். உணர்ச்சிபூர்வமாக இருக்கிறார். நிதானமான அறிவுபூர்வமான தருணங்களே படத்தில் இல்லை.

நெடுமாறன் இந்தியாவில் 500 விமான நிலையங்கள் சும்மா கிடக்கின்றன என்று சொல்லும் காட்சி ஏதோ விளையாட்டு போல வந்து செல்கிறது. ஆனால் அந்தக் கண்டுபிடிப்புதான் கோபிநாத்தின் வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது இந்த விமான நிலையங்களை கண்களுக்கு விருந்தாக, ஆழமாகக் காட்டியிருக்க முடியும். இந்தக் கண்டுபிடிப்பை மிக நுட்பமாக விறுவிறுப்பாகக் காட்டியிருக்க முடியும். நாட்டின் அண்மைக்கால வரலாறு கண்முன் விரிந்திருக்கும்.

காட்சிகள் ஆழமில்லாமல் படபடவென்று ஜுரவேகத்தில் நகர்கின்றன.   ஹரி படங்கள் நினைவுக்கு வருகின்றன. வாழ்க்கையைப் பேசும் படத்தில் ஒரு சில நிதானமான தருணங்களாவது இருக்க வேண்டும். படுபயங்கர ஏக்‌ஷன், மசாலாவான ஷோலே படத்தில் கூட சில  அமைதியான ஆழமான தருணங்கள் உள்ளன. பாகுபலியிலும் கூட இப்படிப்பட்ட இடங்கள் உண்டு. அவை நம்மை படத்துக்கு உள்ளே இழுத்துக் கொள்ளும். சூரரைப் போற்று படத்தில் அந்த இடங்களை செண்டிமெண்ட் வைத்து நிரப்பிவிடுகிறார்கள்.

அவர் விமானியாகப் பயிற்சி பெறும் காட்சிகள் மிகவும் தட்டையாக, ஸ்டீரியோ டைப்பாக இருக்கின்றன.  பறத்தலை அவர் நேசிக்கிறாரா என்பதே படத்தில் இல்லை. குறைந்த விலையில் விமானப் பயணம் என்பது மட்டுமே மந்திரம் போல திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது. முதல் முறை விமானப் பயணம் செய்பவர்களுக்கு ஏற்படும் அற்புதமான கணங்களைக் காட்டுவதைப் படம் மிஸ் செய்கிறது.

நிறுவனத்துக்குப் பணம் திரட்டுவது, விமானத்தில் நாசவேலை, அதிகாரி துரோகம், பிரஸ் மீட்டின் போது பிரசவவலி எல்லாமே ஸ்டீரியோ டைப்.

அதிகார வர்க்க செயல்பாடு ஏதோ தனிநபர் துரோகமாகக் காட்டப்படுகிறது. கார்ப்பரேட் பணம் திரட்டும் உத்திகள் எளிமைப்படுத்தப்பட்டு மக்கள் அள்ளி வழங்குவதாகக் காட்டப்படுகிறது. இப்படி அறிவாக இருக்க வேண்டிய ஒவ்வொரு காட்சியும் இறக்கப்பட்டு மலினப்படுத்தப்படுகிறது. கோபிநாத் அதிகார வர்க்கத்தை சதி என்று சொல்லாமல் சிவப்பு நாடாமுறை என்று விமர்சித்திருப்பார். விமர்சனம் தனிப்பட்ட அதிகாரி மேலானது அல்ல. கார்ப்பரேட்டுகளுக்கும் அதிகாரவர்க்கத்துக்கும் இடையேயான முரண்பாடு அது.

அப்பாவுடன் போன் பேச முடியாமல் நெடுமாறன் தவிப்பது, அப்பா இறந்து போனதும் சடங்குக்கு வர பணமில்லாமல் கதறுவது என்று கண்ணீரும் கம்பலையுமான காட்சிகள் பார்வையாளர்களின் ரசனைக்காக சேர்க்கப் பட்டுள்ளன என்று கூறுவது மக்களைக் குறைத்து மதிப்பிடுவதாகும். ஒரு கார்ப்பரேட் கம்பெனி எப்படி இயங்குகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று தானாகக் கற்பனை செய்து கொள்வது இயக்குநரின் குறைபாடாகவே தோன்றுகிறது. அறிவுபூர்வமான, ஆழமான காட்சிகளை உருவாக்க முடியாத இயலாமையையே காட்டுகிறது.

இறுதியாக பொம்மி பேக்கரி சுந்தரி பாத்திரம் பெண்களின் ஆதரவை மிகவும் பெற்றுவிட்டது. சுந்தரி கணவனுக்கு உறுதுணையாக இருக்கிறார். கூடவே தனது தொழிலையும் வளர்த்தெடுக்கிறார் என்பது புதுமையாகக் கருதப்படுகிறது. ஒவ்வொன்றையும் குறைசொல்வது நோக்கம் இல்லை என்பதால் இதை விட்டுவிடலாம்.

ஆனால் பெண்களின் ஆளுமை, செயல்திறன், அறிவுகூர்மை ஆகியவை அவர்கள் சார்ந்திருக்கும் வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டே  வெற்றியடைகின்றன.  எனக்குத் தெரிந்து கோவையில் மூன்று பிரபலமான பெண் தொழிலதிபர்கள் உள்ளனர். அவர்கள் தொழில் முனைவோர் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இதையும் கணக்கில் கொள்ளலாம்.

சூரரைப் போற்று : படத்தில் நேர்மை இல்லை – ராஜ சங்கீதன் விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்