Aran Sei

‘சூரரைப் போற்று’ ரிலீஸ் தாமதம் – சூர்யாவின் கடிதமும், பின்னணியும்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து அமேசான் பிரைமில் அக்டோபர் 30 அன்று வெளியாக இருந்த சூரரைப் போற்று திரைப்படம், தடையில்லா சான்றிதழ் (no objection certificate) கிடைக்காததால் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

திரைப்படம் வெளியாவது தள்ளிப் போவது குறித்து தன் நலம் விரும்பிகளுக்கும் ரசிகர்களுக்கும் நடிகர் சூர்யா கடிதம் எழுதியுள்ளார்.

“என்னுடைய நலம் விரும்பிகள் மற்றும் என் தம்பி தங்கைகளுக்கு,

ஒவ்வொரு நாளும் என்னுடைய எண்ண ஓட்டங்களை உங்களுக்குக் கடிதத்தின் மூலம் நான் வெளிப்படுத்தியதில்லை. ஆனால் இதுபோன்ற ஒரு எதிர்பாராத தருணத்தில் என் எண்ணங்களை வெளிப்படுத்த ஒரு சூழல் எழுந்துள்ளது. அதனால் உங்களுடன் திறந்த மனதுடனும் வெளிப்படையான சிந்தனையுடனும் என் எண்ணங்களை வெளிப்படுத்துகிறேன் .

காரணம் நான் இன்று இருக்கும் இடத்திற்கு ஆதரவாகவும் பக்க பலமாகவும் என் கூடவே இருந்து பயணித்தவர்கள் நீங்கள், பாராட்டையும், நேசிப்பதையும் தவிர்த்து வேறு எதுவும் தெரியாத நீங்கள் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் சூரரைப் போற்று படத்தைத் தொடங்கியபோது நாங்கள் சந்திக்கப் போகும் ஒரே சவால் இதுவரை படப்பிடிப்பே நடந்திராத தளங்களுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்துவது, பல்வேறு மொழி பேசும் மக்களுடன் வேலை செய்வது, பல திறமைகளைக் கொண்டிருந்த பிரமிக்க வைக்கும் மாறா எனும் ஆளுமையை உயிரோட்டத்துடன் காட்சிகளில் கொண்டு வருவதே ஆகும். என்று நினைத்தோம். இது கேட்பதற்கு எளிதாகத் தெரிந்தாலும் இதன் பின்னணியில் மிகப் பெரிய உழைப்பு இருக்கிறது.” என்று சூரியா தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.

இந்தத் திரைப்படம், ஏர் டெக்கான் விமான சேவை நிறுவனத்தை உருவாக்கிய ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

“நீங்கள் அனைவரும் அறிந்தபடி சூரரைப் போற்று விமானப் போக்குவரத்துத் துறை பற்றியது. இதனால் நாங்கள் பல்வேறு விதிமுறைகளையும் அனுமதிகளையும் பெற வேண்டி இருந்தது. இது தேசியப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். நாங்கள் கையாண்டது இந்திய விமானப் படையின் உண்மையான விமானங்களையும் பாதுகாப்பு முறைகளையும்.

ஒப்புதலுக்குக்காக அனுப்பப்பட்டிருந்த சில தடையில்லா சான்றிதழ்களுக்கான மனுக்கள் (no objection certificate) ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளன. இது போன்ற கடினமான ஒரு காலகட்டத்தில் மற்ற அனைத்தையும் விட தேசத்தின் நலனுக்காக அதன் முதன்மைப் பிரச்சனையில் கவனம் செலுத்துவதால் ஏற்பட்டிருக்கிற இந்தக் கால தாமதத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

சூரரைப் போற்று எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். இது போன்ற அழுத்தமான மற்றும் எழுச்சியூட்டும் கதை மீது நாங்கள் மிகவும் உணர்ச்சிபூர்வமான பற்றுதலைக் கொண்டுள்ளோம். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்தத் திரைப்படம் நாம் எதிர்பார்த்த காலத்தை விட தாமதமாக வெளியிடப்படும்.

இந்தப் படத்துக்காக ஆவலாகக் காத்துக்கொண்டிருந்த என் நலம் விரும்பிகளைப் பற்றி யோசிக்கும் பொழுதுதான் என் மனம் புண்படுகிறது. ஆனால் நமக்கு வேறு வழியில்லை.

அன்பு மற்றும் நம்பிக்கையுடன் என்னுடைய நலம் விரும்பிகள் இதை நல்லமுறையில் அணுகுவார்கள் என்றே நினைக்கிறேன்”. என்று சூர்யா தனத கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“மாறா”வின் உலகத்திற்கு ரசிகர்களைக் கூட்டிச் செல்வதற்கு ஒரு முன்னோட்டமாகப் படத்திலிருந்து நட்பு, அன்பு, பாசம் ஆகியவற்றைக் கொண்டாடுவதற்கு “நட்புக்கான பாடல்” ஒன்றை வெளியிடுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் அகரம் என்னும் அறக்கட்டளையை நடத்தி வரும் நடிகர் சூர்யா தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகிகிறார்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசு கொண்டவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சூர்யா கருத்து தெரிவித்திருந்தார்.

“கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக் கூடாது. நம் நாட்டில் கல்வியானது, ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது.” என்று அவர் கூறினார்.

“அப்படிப்பட்ட மனசாட்சிதான், ஏழை பணக்காரர் பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான, தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்று வலியுறுத்துகிறது.” என்று புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட நீட் தேர்வின் அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து சூர்யா நீட் தேர்வைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

”நீட் தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது. தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக ஆறுதல் சொல்வதைப் போன்ற அவலம் ஏதுமில்லை.

கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசாங்கம் ஏற்றத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாகக் கொண்டு வருகிறது. ஏழை எளிய மாணவர்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள்.

நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது” என்று நீட் தேர்வை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அப்போது “நீட் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்” என்று பாஜக தலைவர் எல்.முருகன் கருத்து கூறியிருந்தார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்