Aran Sei

`சர்தார் உத்தம்’ – பிற தேச பக்தி திரைப்படங்களில் இருந்து ஏன் மாறுபடுகிறது?

`உங்கள் 23வது வயதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?’ – `சர்தார் உத்தம்’ திரைப்படம் முடிவடைந்த பிறகும், இந்தக் கேள்வி ஏற்படுத்திய பாதிப்பு நீங்காமல் இருக்கிறது. பாலிவுட் திரைப்படங்களைப் பொருத்தவரை, தேச பக்தி என்பது வியாபாரத்திற்கான பண்டம். தேச பக்தியை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் பல ஆண்டுகளாக இங்கு வெளிவந்து கொண்டிருந்தாலும், பாஜக ஆட்சியமைத்ததற்குப் பின் பாலிவுட்டில் தேச பக்தி திரைப்படங்கள் அதிகம் வெளிவரத் தொடங்கியிருப்பதைப் பார்க்க முடிகிறது. எனினும் பிற தேச பக்தி திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு நிற்பதால், `சர்தார் உத்தம்’ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

2014ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபோது, இந்தியா கடந்த 1200 ஆண்டுகளாக அடிமைத்தளையில் இருப்பதாகக் கூறினார். முஸ்லிம் சுல்தான்களின் ஆட்சியையும், வெள்ளையர்களின் ஆட்சியையும் சுட்டிக்காட்ட இந்த `1200 ஆண்டுகள்’ என்ற கணக்கு பயன்படுத்தப்பட்டது. இந்துத் தேசியம் இவ்வாறு `நாம்’ யார் என்பதையும், `மற்றவர்’ யார் என்பதையும் தீர்மானிப்பதற்கும் இந்த ஆண்டுக் கணக்கு தேவையாக இருக்கிறது. இதன் பின்னணியில், தேசத்தின் நண்பர் யார், எதிரி யார் என்று முடிவு செய்யப்படுகிறது.

காந்தியின் ஆலோசனையின்படி தான் சாவர்க்கர் கருணை மனு போட்டாரா? – உண்மை என்ன?

சமீபத்தில் வெளியான தேச பக்தி திரைப்படங்களான `Kesari’, `Tanhaji: The Unsung Warrior’ முதலான திரைப்படங்கள் வரலாற்று ரீதியாக முஸ்லிம்கள் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் எதிரானவர்கள்; பிற்போக்கானவர்கள் என்ற கருத்தை விதைப்பவை. `Uri: The Surgical Strike’, `Shershaah’, `Bhuj: the Pride of India’, `Parmanu: the Story of Pokhran’, `Gunjan Saxena’ முதலான திரைப்படங்கள் போர் வெறியை ஊக்குவிப்பவை. இந்தியா வெற்றி பெற்ற போர்களின் அடிப்படையில், இந்தப் படத்தின் திரைக்கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிரி தரப்பாக பெரும்பாலும் பாகிஸ்தான் சித்தரிக்கப்பட்டிருப்பதோடு, இந்தியர்களின் தரப்பில் தன் தாய்நாட்டைக் காப்பதே மதத்தின் மிகப்பெரிய கடமை என்று சிறுபான்மையினருக்கு பாடம் நடத்தும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த கதாபாத்திரங்களும் சேர்க்கப்பட்டிருப்பார்கள். எந்தத் தவறும் செய்யாத இந்தியா சினம் கொண்டு, வெகுண்டு எழுந்து, திருப்பியடித்து பார்வையாளர்களின் ரத்த அழுத்தத்தை ஏற்றி தேசபக்தியைப் புகுத்தும் விதமாக இந்தப் படங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.

‘காட்டுயிர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் ஒன்றிய அரசு’ – சதீஷ் லெட்சுமணன்

இவற்றில் இருந்து மாறுபட்டு நிற்கிறது `சர்தார் உத்தம்’. 1919ஆம் ஆண்டு பஞ்சாபில் ஜாலியன்வாலா பாக் பகுதியில் நடந்த மாபெரும் படுகொலையை இந்திய வரலாற்றைப் படித்த யாரும் மறந்துவிட முடியாது. இதுவரை நாடக பாணியில் சித்தரிக்கப்பட்டு, தேச பக்தியைத் தூண்டுவதற்காக காட்சிப்படுத்தப்பட்ட ஜாலியன்வாலா பாக் படுகொலை `சர்தார் உத்தம்’ படத்தில் ரத்தமும் சதையுமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குக் காரணமாக பஞ்சாப் மாகாண முன்னாள் கவர்னர் மைக்கேல் ஓ’ட்வையர் என்பவரை பஞ்சாபில் இருந்து லண்டன் வரை தேடிச் சென்று உத்தம் சிங் என்பவர் கொலை செய்தார் என்ற வரலாற்று ஒன்லைனில் உத்தம் சிங்கின் வாழ்க்கையைப் படமாக்கியிருக்கிறார் ஷூஜித் சிர்கார்.

இந்திய விடுதலைக்கு முன்பான காலகட்டத்தைச் சித்தரிக்கும் பிற தேச பக்தி திரைப்படங்களில் தங்கள் மண் பறிபோவதாகவும், தங்கள் மொழி, கலாச்சாரம் பறிபோவதாகவும், தங்கள் வீட்டுப் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் பிரிட்டிஷாரை எதிரிகளாகக் கட்டமைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். `சர்தார் உத்தம்’ அவற்றில் இருந்து மாறுபட்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் என்ற கொள்கையை எதிர்க்கும் வர்க்க உணர்வுள்ள வீரனாக உத்தம் சிங்கைச் சித்தரிக்கிறது. உத்தம் சிங் வெறும் தேசத்தை அந்நியரிடம் இருந்து மீட்கும் நிலையில் இருந்து பேசும் வழக்கமான ஹீரோவாக அல்லாமல், ஏகாதிபத்திய எதிர்ப்பையும், ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுதலை கோருபவராகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அயர்லாந்து போராளிகள், சோவியத் அரசு எனப் பலருடன் இணைந்து, ஏகாதிபத்திய எதிர்ப்பை முன்வைக்கிறார் உத்தம் சிங். பிற தேச பக்தி திரைப்படங்களில் வரும் சூப்பர் ஹீரோவாக அல்லாமல், அனைத்து பலவீனங்களும் கொண்ட மனிதனாக உத்தம் சிங் சித்தரிக்கப்பட்டிருப்பதே பாலிவுட்டின் தற்போதைய நிலைமையில் பாராட்டத்தக்கது.

‘டாக்டர் அம்பேத்கரின் மதமாற்றம் உலக மக்களின் சிந்தனையை தூண்டும்’ – அறிஞர் அண்ணா

உத்தம் சிங்கின் வாழ்க்கையில் இருந்து பகத் சிங்கைப் பிரித்துவிட முடியாது என்பதால், கதையோட்டத்துடன் பகத் சிங்கின் கதையும் நமக்குக் காட்டப்படுகிறது. அரசியலால் இணைந்தவர்கள் என்பதைத் தாண்டி, பகத் சிங் என்ற இளைஞனுக்கும், உத்தம் சிங் என்ற இளைஞனுக்கும் இடையிலான அழகான நட்பு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பகத் சிங் தனது தோழர்களிடம் பேசும் ஒவ்வொரு காட்சியிலும் சமகால அரசியல் மீதான விமர்சனம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. பகத் சிங்கை இந்துத் தேசியம் கையில் எடுக்கும் இக்காலத்தில், அவரைக் குறித்த நேர்மையான சித்தரிப்பாக `சர்தார் உத்தம்’ உருவாகியிருக்கிறது. அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய அமைதி வழியில் கூடிய மக்களின் மீது தாக்குதல் நடத்திய ஜெனரல் டையர் பற்றிய காட்சிகள் சமீபத்திய லகிம்பூர் சம்பவத்தை நினைவூட்டுகின்றன.

ஜாலியன்வாலா பாக்கில் துப்பாக்கிச் சூடு நடந்து முடிந்த பிறகு, உயிரோடு இருப்பவர்களைக் காக்க உத்தம் சிங் நுழையும் காட்சிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உத்தம் சிங் மைக்கேல் ட்வையரைச் சுட்டுக் கொன்ற பின் லண்டன் காவல்துறையினரிடம் சரணடைகிறார். அப்போது அவரது பெயரை `ராம் முகமது சிங் ஆசாத்’ என்று குறிப்பிடுகிறார். எனினும் பிரிட்டிஷ் அரசு அவருடைய உண்மையான பெயரைக் கண்டுபிடிக்கிறது; அவரது புனைப்பெயர் மத ஒற்றுமையையும், அவர் முன்வைக்கும் வர்க்க ஒற்றுமை அரசியலையும் பரப்பக்கூடும் என்பதால் பிரிட்டிஷ் அரசு சுதாரித்துக் கொண்டது.

‘சுற்றுச்சூழல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய மாசுக் கட்டுப்பாடு வாரிய உத்தரவு’ – பூவுலகின் நண்பர்கள்

உரிமைகளுக்காகப் போராடி உயிரிழந்த அப்பாவி மக்கள், உலகம் முழுவதும் பல நாடுகளை முதலாளித்துவத்தின் மூலம் சுரண்டும் ஏகாதிபத்திய நாடுகள், மக்கள் மீது கரிசனம் கொள்ளாத ஆளும் அரசுகள், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் அனைவருடனும் இணைந்து தோழமை பாராட்டும் பண்பு, தேச பக்தியைப் பிரதானப்படுத்தாத விடுதலை உணர்வு ஆகிய கூறுகளின் அடிப்படையில் உருவாகியிருப்பதால் `சர்தார் உத்தம்’ பிற தேச பக்தி திரைப்படங்களில் இருந்து முழுமையாக மாறுபட்டு நிற்கிறது.

இதில் வெள்ளையர்கள் இந்திய மக்களை இழிவாகப் பேசி. அதனால் கோபப்படும் இளைஞர்கள் இல்லை; மாறாக ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதிகளாக பிரிட்டிஷ் அதிகாரிகள் காட்சிப்படுத்தப்படுகின்றனர். இதில் `என் மதத்தை விட என் தாய் நாடு பெரியது’ என்று கூறிவிட்டு, அடுத்த காட்சியில் செத்துப் போகும் முஸ்லிம் கதாபாத்திரம் இல்லை; `இது மண் இல்ல, மருந்து’ என்று கூறி, குண்டடி பட்டபிறகும் தேச பக்தியோடு மண்ணை எடுத்துப் பூசிக் கொள்வது, மண்ணில் விழுந்தபிறகு திடீரென ஹைபர் ஆக்டிவாக மாறுவது போன்ற அபத்தங்கள் இல்லை. தேசிய சின்னங்களை இழிவுபடுத்தும் பிரிட்டிஷார்கள் இதில் இல்லை; அதன்மூலம் பார்வையாளர்களின் உணர்வுகளைத் தூண்டி ஹீரோயிசத்தை வளர்க்கும் காட்சிகள் இல்லை. தன் பெயரை ராம் முகமது சிங் ஆசாத் என முன்வைக்கும் உத்தம் சிங், நீதிமன்றத்தில் `ஹீர் – ராஞ்சனா’ என்ற காதல் காவியத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார். இதுபோன்ற பல இடங்களில், தேச பக்தியை உணர்ச்சி பொங்கத் தூண்டிவிட வாய்ப்புகள் இருந்தும், அவற்றைக் கவனமாகத் தவிர்த்திருக்கிறார் இயக்குநர் ஷூஜித் சிர்கார். அவரது இந்த முயற்சி, இறுதி 40 நிமிடங்களில் அவருக்குப் பெரிதும் கைகொடுத்திருக்கிறது.

மறைக்கப்பட்ட உத்தம் சிங்கின் வரலாறு, ஜாலியன்வாலா பாக் மக்கள் போராட்டம், அதன் மீதான பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறை, பகத் சிங்கின் இறுதிக் கால வாழ்க்கை முதலான மிக முக்கிய விவகாரங்களை நேர்மையாக அணுகியிருக்கிறது `சர்தார் உத்தம்’. உணர்வுகளைத் தூண்டி, மோதலை வளர்க்காமல், நேர்மையான அணுகுமுறையின் காரணமாக `சர்தார் உத்தம்’ அரசியல் நிலைப்பாடுகளின் ரீதியாகவும், அது உருவாக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தியாவின் மிகச்சிறந்த படைப்புகளுள் ஒன்றாக இடம்பெறும்.

கட்டுரையாளர் – ர. முகமது இல்யாஸ்.

ஊடகவியலாளர், தமிழின் முன்னனி பத்திரிகைகளில் எழுதி வரும் இவர் தற்போது ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்