Aran Sei

” சினிமா நடுத்தெரு படுக்கை அல்ல ” – பாரதிராஜா குமுறல்

மீபத்தில் சந்தோஷ் பி ஜெயராஜ் இயக்கி நடிக்கும், ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தின் போஸ்டரும் டிரைலரும் வெளிவந்தன. ஆபாசமும் வக்கிரமுமே அதில் இருப்பதாகப் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.

சந்தோஷ் பி ஜெயராஜ் இதற்கு முன்பே ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஹரஹர மகாதேவகி’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். அந்தப் படங்களிலும் ஆபாசமும் வக்கிரமும் நிறைந்திருந்ததாகப் படம் வெளியான சமயங்களில் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், மூத்த இயக்குநர் பாரதிராஜா ’இரண்டாம் குத்து’ படத்தின் போஸ்டரைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது.

உலகெங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனை எத்தனையோ சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சாதாரணமல்ல.

பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு. தார்மீகப் பொறுப்புகளோடு சமூகப் பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக் காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்றுச் சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன்.

சினிமா வியாபாரமும்தான். ஆனால் வாழைப்பழத்தைக் குறிகளாகச் செய்து அதைக் கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்தச் சினிமாவைக் கட்டமைத்தார்கள்? சினிமா, வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை.

இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத்தெருவில் வைப்பது எந்த விதத்தில் சரி என்பது? நான் கலாச்சார சீர்கேடு எனக் கூவும் நபரல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன். கலைநயத்தோடு செய்யப்படும் எந்தப் படைப்பையும் ஆழ இரசிப்பவன்.

ஆனால் `இரண்டாம் குத்து’ என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டில் உள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டைத் துப்பி வைத்திருக்கும்? கல்வியைப் போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்? ” என்று கூறியுள்ளார்.

பாரதிராஜாவின் இந்த அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகச் சந்தோஷ் பி ஜெயராஜ் ட்வீட் செய்துள்ளார்.

“நான் அவர்மேல் மரியாதை வைத்துள்ளேன். 1981-ம் ஆண்டு வெளியான டிக் டிக் டிக் படத்தில் இதைப் பார்த்துக் கூசாத கண்ணு, இப்ப கூசிருச்சோ?” என்று ட்வீட் செய்துள்ளார்.

https://twitter.com/santhoshpj21/status/1314068431537233920

மேலும் ட்விட்டரில் பலர் பாரதிராஜாவையும் சந்தோஷ் பி ஜெயராஜையும் விமர்சித்து வருகிறார்கள்.

‘Adults Content genre’-ல் படம் எடுப்பது தவறல்ல. ஆனால் அதில் வியாபாரத்திற்காகப் பெண்களை ஒரு பண்டமாகக் காட்டி, உடலுறவு என்பது ஆண்களுக்கான விஷயம் மட்டுமே என்பது போலக் காட்டுவது தவறு. எந்தத் தலைமுறையைச் சேர்ந்த இயக்குநராக இருந்தாலும் எந்த ஜானராக இருந்தாலும், பெண்களை உடமையாகக் காட்டுவது, பண்டமாகவும் சித்திரித்துக் காட்டுவதும், உடலுறவை ஆண்களுக்கான ஆயுதமாகக் காட்டுவதும் ஒட்டு மொத்தச் சமுதாயத்தையே கூச வைக்கும். மேலும் ஆணாதிக்க உளவியலுடன் இருக்கும் நாயகன்களைக் கம்பீரமானவனாகவும் வீரமானவனாகவும் காட்சிப்படுத்துவது சமூகத்தில் சிதைவையே ஏற்படுத்தும்.

உலகம் முழுவதும் வன்முறை மற்றும் பாலியல் உள்ளடக்கமுள்ள படங்களுக்கும் இணையத் தொடர்களுக்கும் பெரும் கிராக்கி உருவாகியுள்ளது. இது இளைஞர்களின் பார்வையிலும் நடவடிக்கைகளிலும் தவறான நகர்வை ஏற்படுத்தும்.

அதிலும் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பாலியல் கல்வியின் தேவைகள்குறித்து முன்பை விட இப்போது விவாதங்களும் கோரிக்கைகளும் அதிகம் எழுகின்றன.

இப்படிப்பட்ட சூழலில் படைப்பாளிகள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். மாறாகச் சமூகத்தில் நச்சைப் பரப்பி, அதைப் பின்னோக்கி இழுக்கக் கூடாது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்