Aran Sei

ஓடிடியில் வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’

‘எல்.கே.ஜி’ படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் ‘மூக்குத்தி அம்மன்’. இதில் மூக்குத்தி அம்மனாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். என்.ஜி.சரவணன் என்பவரோடு ஆர்.ஜே.பாலாஜி இணைந்து இயக்கியுள்ளார். கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ளார்.

சமகாலத்தில் அம்மன் வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பது நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருக்கிறது. கடந்து மே மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக படம் தள்ளிப்போனது.

இந்நிலையில் நேற்று சமூக வலைதளங்களில், மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் பரவியது. ‘ஹாட் ஸ்டார்-டிஸ்னி ப்ளஸ்ஸில்’ தீபாவளி அன்று நேரடி ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், அதேநேரம் விஜய் டிவியிலும் அன்று ஒளிப்பரப்பப்பட உள்ளதாகவும் தகவல் பரப்பட்டது. இதனால் உற்சாகம் அடைந்த நயன்தாரா ரசிகர்கள், இப்படத்தின் போஸ்டர்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இயக்குனர் என்.ஜி.சரவணனிடம் அரண்செய் பேசிய போது,

இப்போது தொடர்ந்து ஓடிடியில் தமிழ் திரைப்படங்கள் வெளிவர தொடங்கி இருக்கிறது. இந்த நகர்வை எப்படி பார்க்கிறீர்கள்?

இப்போதைய கொரோனா சூழலில், மக்களிடம் படங்களை கொண்டு செல்ல ஓடிடி பெரும் உதவியாக இருக்கிறது. நமக்கு வேறு வழியும் இல்லை. இன்னொன்று தயாரிப்பாளரின் பொருளாதார நிலையையும் கணக்கில் கொண்டால், ஓடிடி வரவு தற்போதைக்கு மிகவும் தேவைதான்.

இப்போதைய சூழலை மட்டும் கணக்கில் கொள்ளாமல், பொதுவாக ஓடிடியின் வருகையை தமிழ்சினிமா எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்? 

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு மாறுதல்கள் வரதான் செய்யும். அதை நாம் வேறு வழி இல்லாமல் ஏற்றுக்கொள்கிறோம். இப்போது ஓடிடி வந்துருக்கிறது. ஏற்றுக்கொள்வோம். படைப்பாளிகளையும், ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவது  தியேட்டர்தான். எனக்கு தியேட்டர்தான் பெஸ்ட். ஆனாலும் அடுத்த கட்டத்திற்கு சினிமா நகரும் போது, நாமும் நகரத்தான் வேண்டும்.

’மூக்குத்தி அம்மன்’ எந்த மாதிரியான படம்?

இது முழுக்க முழுக்க ஃபாம்லி எண்டர்டெயினர். குடும்பமாக வந்து சந்தோஷமாக சிரித்து ரசித்து பார்த்து விட்டு போகலாம்.

எந்த ஓடிடி-யில் ரிலீஸ்? எப்போது ரிலீஸ்? 

ஓடிடியும் ரிலீஸ் தேதியும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது. அது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளிவரும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்