Aran Sei

முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி-சர்ச்சைகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு நடிகர் விஜய் சேதுபதி நடிக்க, ’800’ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட உள்ளது. அதற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியானது.

முத்தையா முரளிதரனின் மூதாதையர்கள் ஆங்கிலேயர் காலத்தில் தமிழகத்தில் இருந்து,  இலங்கையின் மலையகப் பகுதி என்று அழைக்கப்படுகிற மத்திய மலைப் பிரதேசப் பகுதிகளில் தொழில்புரிய வந்த பணக்காரக் குடும்பம். இவர் மலையகப் பகுதியான கண்டி நகரில் 1972-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி பிறந்தார். இவருடைய தந்தை இலங்கையின் முன்னணி பிஸ்கெட் தயாரிப்பு நிறுவமான ‘லக்கி லாண்ட்’ பிஸ்கெட் நிறுவனத்தின் உரிமையாளர்.

இளம் வயதில் கிரிக்கெட்டின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால், தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்தார். பல போராட்டங்களுக்குப் பின் இலங்கை அணியில் இடம் கிடைக்கிறது. அதற்குப் பின் சாதனைகள், சர்ச்சைகள் என அவர் கிரிக்கெட் வாழ்க்கை போகிறது. 1992-ம் ஆண்டில் இருந்து, 2011-ம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்து கிரிக்கெட் உலகில் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளராக மாறுகிறார் முத்தையா முரளிதரன்.

’800’ விக்கெட் எடுத்த சாதனையைப் போற்றும் விதமாக ’800’ என்று படத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர், நேற்று ஐபிஎல்-ன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைடர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டிக்கு இடையில் வெளியிடப்பட்டது.

நன்றி : Pinterest

நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க, எம்.எஸ்.ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

பந்து வீச்சில் சர்ச்சை

கிரிக்கெட் விதிகளுக்கு முரணாக, முழங்கையை அதிகம் சுழற்றிப் பந்து வீசுவதாக இவர் மீது சர்ச்சை எழுந்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சலிங் இவரின் பந்து வீச்சு முறையைச் சோதனை செய்து அனுமதித்தது.

அரசியல் சர்ச்சை

இலங்கையில் இறுதிக்கட்ட போர் முடிந்த போது, “போர் முடிந்த நாள்தான் என் வாழ்க்கையில் மிகச் சிறந்த நாள். இப்போது பயம் இல்லாமல் உலாவ முடியும்” என்று கூறியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. சர்வதேச மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிப் பொய்யைப் பரப்புகிறார்கள் என்றார்.  இவர் இலங்கை அரசின் ஆதரவாளராகச் செயல்படுவதாகத் தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்தன.

சில மாதங்களுக்கு முன், உள்நாட்டுப் போரின் போது ராணுவத் தளபதியாக இருந்த கோத்தபய ராஜபக்சே அதிபர் ஆன பின், இவர் இலங்கை வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்தன.

இத்திரைப்படம் குறித்து இலங்கைப் பத்திரிகையாளர் மதன் அவர்களிடம் அரண்செய்  பேசிய போது, “ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை என்ற முறையில் இதைப் படமாக எடுத்தால் பிரச்சனை இல்லை. ஆனால், இதன் மூலம் இலங்கைத் தமிழர்களின் அரசியலைப் பேசினால் அது தவறாக இருக்கும். இதைச் சாதாரண படமாக எடுத்துக்கொண்டு நகர்வதையே இங்குள்ள தமிழர்கள் விரும்புகிறார்கள்.” என்றார்.

இத்திரைப்படம் குறித்து, எழுத்தாளர் நீதுஜன் பாலாஅவர்களிடம் அரண்செய் பேசிய போது, “முதலாவது, இலங்கை அரசின் கட்டுப்பாடில் உள்ள ஒரு விளையாட்டு அணியில் இருந்து கொண்டு, ஒருவரால் முழுக்க அரசுக்கு எதிராகப் பேசிட முடியாது. இரண்டாவது அவர் பேசுவதால் எந்தப் பெரிய மாற்றமும் நிகழ்ந்து விடப்போவதில்லை. இவரை விட தமிழர்கள் மேல் அன்பு கொண்டவர் இலங்கை அணியின் சங்ககாரா. அவராலும் அரசுக்கு எதிராக ஒன்றும் சொல்ல முடியது. அப்படி அவர்கள் பேசினால், மற்ற நாடுகளைப் போல பதவி நீக்கம் மட்டும் நடைபெறாது. அவர்கள் உயிருக்கும் ஆபத்து நேரலாம்.

பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருந்ததால், இன ஒடுக்குமுறை மற்றவர்களை விட குறைவாக இருந்திருக்கலாம். அதேநேரம், சிங்களர் நிறைந்த இலங்கை கிரிக்கெட் அணியில், ஒரு தமிழராக இருப்பதால், நிறைய இன ஒடுக்குதலை அனுபவித்திருப்பார்.

இங்கிலாந்து பிரதமர் இலங்கைக்கு வந்த போது, பிள்ளைகளை இழந்த பெற்றோர் அவரைப் பார்த்து அழுதனர். அதற்கு முரளிதரன் இது நடிப்பாகக் கூட இருக்கலாம் என்றார். இது மோசமான பேச்சு. என்னைப் பொறுத்தவரை இந்தப் படத்தை ஆதரிக்கவுமில்லை. எதிர்க்கவுமில்லை.” என்றார்.

விஜய் சேதுபதி மீது விமர்சனம்

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதன் மூலம் விஜய் சேதுபதி, தமிழ் மக்களின் அன்பை இழக்கப்போகிறார் என்று பலர் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

இத்திரைப்படம் குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்தி நடிகர்கள் கூட தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள். தமிழராகிய நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?
இனவழிப்புக்கு நீதி கோரித் தமிழினம் கடினமான நீண்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு நீதியை மறுக்கும் இனக் கொலைக் குற்றவாளிகளுக்குத் துணைபோகும் இரண்டகருக்கு ஊக்கமளிப்பதாக இருந்து விடக் கூடாது என விரும்புகிறேன், விரும்புகிறோம்.” என்று கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்