Aran Sei

‘குருதி’ – இந்துத்துவ அப்பாவியைக் காக்கும் `நல்ல முஸ்லிம் Vs கெட்ட முஸ்லிம்’ போர்

க்வெண்டின் டரண்டினோ எழுதி இயக்கிய The Hateful Eight அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவடைந்த சில மாதங்களுக்குப் பிறகு நிகழும் கதையைப் பற்றியது. பனிப்புயல் ஒன்றின் போது, பிடித்துக் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட குற்றவாளியோடு ஹோட்டல் ஒன்றில் நுழையும் தூக்குத் தண்டனை காவலாளிக்கும், அந்த ஹோட்டல் அறையில் அவரோடு இருக்கும் மற்ற ஐவருக்கும் இடையிலான உரையாடலும், அதன் பின் நிகழும் கதையையும் டரண்டினோ இயக்கியிருப்பார். அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்ற காலம் என்பதால், போரில் தோற்ற கான்பெடரேட் வெள்ளையின வெறியர்களுக்கும், மேற்கு அமெரிக்க அடிமை ஒழிப்பு சிந்தனை கொண்டவர்களுக்கும் இடையிலான விவாதமாக இந்தத் திரைக்கதையின் அரசியல் மையம் கொண்டிருக்கும். இதே பாணியிலான கதையில் இருந்து இன்ஸ்பைர் ஆகி, வெள்ளையின வெறியர்களுக்குப் பதிலாக, ’இஸ்லாமிய மத வெறியர்’களைக் கதாபாத்திரங்களாக்கி, நல்லிணக்கத்தையும் வெறுப்பையும் பேச முயன்றிருக்கிறது ‘குருதி’.

A Vow to kill.. An oath to protect என்ற சப் டைட்டிலோடு தொடங்குகிறது ‘குருதி’. அதாவது, ‘கொல்வதற்கான சபதம்.. காப்பதற்கான சத்தியம்’ என்ற பொருளில், இரண்டுமே இரு வேறு முஸ்லிம்களின் பண்பாக இந்தக் கதைக்குள் சொல்லப்பட்டிருக்கிறது. இந்து – முஸ்லிம் இடையில் எழும் வெறுப்பை மையப்படுத்தி, நடுநிலையோடு கதை சொல்வதாக நினைத்து, நல்ல முஸ்லிம் – கெட்ட முஸ்லிம் என்ற அரசியலை முன்வைக்கிறது ‘குருதி’. சப் டைட்டிலில் எழுதப்பட்டிருக்கும் வாசகத்தின் வழியாக, நல்ல முஸ்லிம், கெட்ட முஸ்லிம் என்ற இருமை உருவாக்கப்பட்டிருக்கிறது.

பெரும்பான்மை மாமிசம் உண்பவர்கள் வாழும் தேசத்தில், முஸ்லிம்களின் காட்டுமிராண்டித் தனத்தைக் காட்டுவதற்காக பக்ரீத் பண்டிகையின் போது பலிகொடுக்கப்படும் ஆடுகளை உருவகமாகப் பயன்படுத்தும் போக்கு இந்திய சினிமாவில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. தொடக்க காட்சியில், பலி கொடுப்பதற்காக வளர்க்கப்படும் ஆட்டின் மீது பரிவுகொண்ட குழந்தைக்கு, இறைவனுக்காக ஆட்டைப் பலிகொடுக்க வேண்டும் என்று பேசும் ஹீரோவுக்கு, அதே ஒப்பீட்டில் வில்லன் கொலை செய்யக் கட்டளையிடுவது இந்த வெறுப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் நிலச்சரிவு காரணமாக குடும்பத்தை இழக்கும் முஸ்லிம் ஆணைப் பற்றிய கதையை இந்த ஆண்டிலேயே இரண்டாம் முறையாகப் பார்க்கிறோம். சாஜின் பாபு இயக்கிய ‘பிரியாணி’ என்ற இஸ்லாமிய வெறுப்புத் திரைப்படத்திலும் இதே போன்ற ஒரு முஸ்லிம் ஆணின் கதாபாத்திரம் எழுதப்பட்டிருந்தது. ’குருதி’ இப்ராஹிமும், ‘பிரியாணி’ முகமது பிஜிலும் நிலச்சரிவு காரணமாக மனைவியையும், குழந்தைகளையும் இழந்தவர்கள்; இரு கதைகளிலும் இருவருமே பொதுச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நல்ல முஸ்லிம்கள்.

மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்ட மலைகளும், காடுகளும் சூழ்ந்த கிராமம் ஒன்றில் நிகழும் கதை. ஊரின் முஸ்லிம் கடைக்காரர் ஒருவரை, இந்துத்துவ சிந்தனைகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட சிறுவன் ஒருவன் கொன்றுவிடுவதாக நமக்குச் சொல்லப்படுகிறது. அந்த ஊரின் முஸ்லிம் இளைஞர்கள் கடுமையான கோட்பாட்டைக் கொண்டவர்களாகவும், ரகசிய கூட்டங்களை நடத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். நாயகனின் தம்பியும் அந்தக் கூட்டங்களில் கலந்துகொள்கிறான். நாயகனை விரும்பும் இந்துப் பெண் ஒருத்தியின் கதாபாத்திரம் இருக்கிறது. அவள் மதம் மாறத் தயாராக இருக்கிறாள் என்ற போதும், தனது மதப்பற்று காரணமாக அவளை நிராகரிக்கிறான் நாயகன் இப்ராஹிம். எனினும் அவர்களது நட்புக்கு இடையில் மத வேறுபாடு தடையாக நிற்பதில்லை.

கொலை செய்த சிறுவனும், அவனைக் காப்பாற்றும் பொறுப்புடன் காவல்துறை அதிகாரி ஒருவரும் நடுநிசியில் இப்ராஹிம் வீட்டிற்கு வருகிறார்கள். அந்தச் சிறுவனைக் கொல்வதற்காக மூவர் அதே வீட்டிற்கு வருகிறார்கள். அங்கு தொடங்கும் கதை, சமூகத்தின் பல்வேறு கருத்தியல்களைக் கொண்ட இந்து – முஸ்லிம்களுக்கு இடையிலான மோதலாக விரிவடைகிறது. மேலும், அதன் மூலம் பல்வேறு குறியீடுகளால் மதங்களால் ஏற்படும் வெறுப்பு மனிதர்களை எப்படி மாற்றுகிறது என்பதையும் பேசுகிறது.

இப்ராஹிமின் அப்பா மூஸா, இப்ராஹிம், அவனது தம்பி ரசூல் – இந்த மூவரும் வெவ்வேறு காலத்து முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள். மூஸா வயோதிகர். தன் மதத்தை விட, மனிதர்களோடு வாழும் வாழ்க்கையை மேன்மையானதாகக் கருதும் ‘நல்ல முஸ்லிம்’ கதாபாத்திரம். இப்ராஹிமின் தம்பி ரசூல் மதத்தை எல்லாவற்றிற்கும் மேலாக முன்னிறுத்துபவன். அமெரிக்கா, இஸ்ரேல், வட இந்தியா என முஸ்லிம்கள் உலகம் முழுவதும் ஒடுக்கப்படுகிறார்கள் என்று அரசியல் பேசுபவர்களின் ‘வெறுப்புப் பிரசாரங்களுக்கு’ இரையாகியிருக்கும் ‘கெட்ட முஸ்லிம்’. இப்ராஹிம் இந்த இருவருக்கும் நடுவில் நிற்கும் தலைமுறையைச் சேர்ந்தவன். மதக் கட்டுப்பாடுகளால் அவனது வாழ்க்கை நிறைந்திருந்தாலும், அவனால் மாற்று மதத்தவருக்கு எந்தத் தீங்கும் இல்லை என்ற மதிப்பீட்டால், அவன் ‘நல்ல முஸ்லிம்’.

ப்ரித்விராஜ் கெட்ட முஸ்லிமின் உச்சகட்ட வடிவம். சூப்பர் வில்லன் பாணியிலான பாத்திரப் படைப்பு. ’லாயக்’ என்ற அந்தக் கதாபாத்திரத்தின் கோபம் என்பது வெறும் பழிவாங்கும் உணர்ச்சி என்பதாக அல்லாமல், மதவெறியால் உந்தப்படுவதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வேட்டையாடுபவன், வேட்டையாடப்படுபவன் என்ற ரீதியிலான திரைக்கதையில் குற்றம் இழைத்த இந்துத்துவ சிறுவன் மீது பரிவும், அவன் மதவெறியர்களால் வேட்டையாடப்படுபவன் என்ற உணர்வும், அவன் எப்படியாவது இந்தக் காட்டுமிராண்டிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்ற வேட்கையையும் பார்வையாளர்களுக்கு உருவாக்குகிறது இந்தத் திரைப்படம்.

இந்துத்துவச் சிறுவன் ஒருவன் ஒரு முஸ்லிம் பெரியவரைக் கொலை செய்துவிடுகிறான். அவனது தந்தை பூசாரியாக இருந்த கோயில் முஸ்லிம்களால் அசுத்தமாக்கப்பட்டதால், அவன் கொலைசெய்ததாகக் கூறப்படுகிறது. அவனைக் கைதுசெய்யும் அரசின் அதிகாரிகள் மீது கெட்ட முஸ்லிம்களால் தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. அரசின் பிரதிநிதியான இந்து மதத்தைச் சேர்ந்த அதிகாரி அந்தச் சிறுவனை நல்ல முஸ்லிம் ஒருவனின் வீட்டிற்குள் அடைக்கலமாகக் கொண்டுவந்து சேர்க்கிறார். முதலில் பலவந்தமாக, தனது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, நல்ல முஸ்லிமைத் தனக்குக் கீழ்ப்படியச் செய்கிறார். கெட்ட முஸ்லிம்களால் தாக்கப்பட்டு, தான் இறக்கும் தருவாயில், நல்ல முஸ்லிமின் மத நம்பிக்கையின் மேல் சத்தியம் பெற்றுக் கொண்டு, அவனைக் கீழ்ப்படியச் செய்கிறார். எப்படியிருந்தாலும் அவன் முஸ்லிம் என்பதும், அவனைப் பலவந்தமாகவோ, அவனது குற்றவுணர்வைத் தூண்டியோ தான் விரும்புவதைச் செய்ய முனையும் அரசின் பிரதிநிதியாக காவல்துறை அதிகாரி சத்யனின் கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது.

சுமா என்கிற இந்துப்பெண்ணின் கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் ட்விஸ்ட்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. இப்ராஹிம் மீதான அவளின் ஆதங்கம், அவனது மதத்தின் மீதான வெறுப்பாக மாறியிருப்பதோடு, கொலை செய்த சிறுவனை அப்பாவி என்ற கோணத்தில் அணுகும் இந்துப் பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறார்.

இப்ராஹிம் வீட்டுக்குள் லாயக் நுழைந்ததும், திரைக்கதை The bridge and the torch, River crossing riddle முதலான விடுகதைகளின் பாணியில் மாறுகிறது. The Hateful Eight திரைப்படத்தின் அரசு அதிகாரம் கொண்ட வெள்ளையின வெறியர்களின் இடத்தில், அதிகாரமற்ற இந்தியச் சிறுபான்மையினரை நிரப்பும் கதையம்சத்தில், இந்த விடுகதை பாணியிலான திரைக்கதை பயன்படுத்தப்பட்டிருப்பது தொடக்கத்தில் சுவாரஸ்யத்தைத் தந்தாலும், இறுதியில் சலிப்படையச் செய்கிறது. மூன்று, மூன்று பேராக அணிசேர்வதும், அணி மாறுவதுமாக இருக்கிறார்கள் படத்தின் கதை மாந்தர்கள். மேலும், Home invasion thriller பாணியில் தொடங்கும் திரைப்படம், இறுதியில் ஏறத்தாழ zombie escape பாணியில் மாறிவிடுகிறது. நவாஸ் வலிக்குன்னுவின் உமர் கதாபாத்திரம் கிட்டதட்ட zombieயைப் போலவே செயல்பட்டு, படத்தின் போக்கைச் சிதைக்கிறது. திரைக்கதையிலும், இயக்கத்திலும் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய குறை இவை.

ஹீரோ – வில்லன் என்ற அடிப்படையில், ரோஷன் மேத்யூஸ் – ப்ரித்விராஜ் இருவருமே மிகச்சிறந்த நடிகர்கள். தங்களுக்கான ரோலை அடித்து ஆடியிருக்கிறார்கள். கதையை முழுவதுமாக சுமப்பது, இந்த இருவரின் உச்சபட்ச நடிப்பு மட்டுமே. இவர்களுக்கு நிகராக இருக்கிறது முதியவரான மம்முகோயாவின் நடிப்பு. ஸ்ரீண்டா, முரளி கோபி, ஷைன் டைம் சாக்கோ முதலான மிகக் குறைந்த நடிகர்களே என்ற போதும், திரைக்கதையில் தேவைப்படும் பங்களிப்பைச் சிறப்பாக அளித்திருக்கிறார்கள்.

பின்னணி இசை படத்தின் சூழலுக்குத் தகுந்தவாறு இருந்தாலும், பாடல்கள் கதையோட்டத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. பெரும்பாலும் இரவுக் காட்சிகள், பவர்கட் செய்யப்பட்ட வீடு என்ற இருளிலும், அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்.  அகிலேஷ் மோகனின் படத்தொகுப்பு தொடக்க காட்சிகளில் வேகத்தைக் கொடுத்தாலும், இறுதியில் பார்வையாளர்களுக்கு சோர்வையளித்து விடுவதாக இருக்கிறது.

‘குருதி’ மத வெறுப்பின் கட்டளையை நிறைவேற்றும் மனிதர்களின் கதையின் வழியாக, மத நல்லிணக்கத்தைக் கோரும் திரைப்படமாகத் தன்னைக் கருதிக்கொள்ள முயல்கிறது. இந்த முயற்சியில், மத நல்லிணக்கம் என்பது இரு தரப்பு உரையாடல் என்பதை வசதியாக மறந்து, சிறுபான்மைச் சமூகத்தின் தலையிலேயே மத நல்லிணக்கத்தை இறக்கி வைக்கிறது. இஸ்லாமியச் சமூகம் குர்பானி செய்வதால், ரத்தத்திற்குப் பழகிய ஒன்றாகச் சித்தரிக்கப்படுகிறது. ’குருதி’ என்ற தலைப்பும், ’மதப் படுகொலை’ என்றே பொருள்படுகிறது. ஆக, மத வெறுப்பு இஸ்லாமியர்களின் தனிச்சொத்தாகவும், முதல் கொலையை நிகழ்த்திய சிறுவனின் மனம், பாதிக்கப்பட்ட அப்பாவி இந்து என்ற கண்ணோட்டத்திலும் ‘குருதி’ உருவாக்கப்பட்டிருக்கிறது.

கமல் ஹாசன் இயக்கிய ‘ஹே ராம்’ திரைப்படம் காந்தியப் பார்வையிலான மத நல்லிணக்கத்தை முன்வைத்திருந்த போதும், அது ஆர்.எஸ்.எஸ் தரப்பு நியாயங்களின் வழியாக அதனை அணுகியது. காட்சி ஊடகமான சினிமாவில், முஸ்லிம் ஆண்களால் இந்துப் பெண்ணுக்கு நிகழும் வெறியாட்டம் ரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தப்பட்ட அந்தப் படத்தில், முஸ்லிம் தரப்பில் இந்துக்களால் நிகழ்ந்த வன்முறையும், வெறியாட்டமும் காட்சிகளால் அல்லாமல் வார்த்தைகளால் கடத்தப்பட்டது. அதே தவறை, ‘குருதி’ திரைப்படமும் செய்கிறது. இந்துச் சிறுவனின் கொலையோ, அதற்கு முன்பு நிகழ்ந்தவையோ காட்சிகளால் விவரிக்கப்படவில்லை. மேலும், இந்துத்துவச் சிந்தனையால் கவரப்பட்ட அப்பாவியாகவே அந்தச் சிறுவன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறான். சூழ்நிலையின் பொருட்டு அவனது தரப்பை ஏற்றுக் கொள்ளும் இந்துப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள் சுமா.


அரசு அதிகாரி இந்து என்ற போதும், அவரும் செக்யூலர் அடையாளத்திலேயே இயங்குகிறார். ஆனால், முஸ்லிம் தரப்பில் மூஸா முதல் லாயக் வரை எல்லா வகையான வெறியர்களும் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு, மத வெறுப்பில் ஊறிப் போனவர்களாக இருக்கிறார்கள். அப்படியொரு வெறிபிடித்த கும்பல், இந்துத் தரப்பில் இல்லையென்பதையே ‘குருதி’ முன்வைக்கிறது. சந்தர்ப்பங்களால் மத அடிப்படையில் எதிர்வினையாற்றுபவர்களாக இந்து மத வெறியர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் இந்துத்துவ வெறியாட்டங்களின் பின்னணியில் அரசுப் படைகளும், வெறியாட்டங்கள் முடிவடைந்த பிறகு அவற்றைக் கழுவும் பொறுப்பை நீதிமன்றங்களும் ஏற்றிருப்பது நிதர்சனமாக இருக்கிறது. டெல்லி ஜந்தர் மந்தரின் இந்தியாவில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என ஆளுங்கட்சிப் பிரமுகர்களும், பெரும்பான்மை இந்துச் சமூகத்தின் மத வெறியர்களும் முழக்கமிட்டு, கைது செய்யப்படாமல் இருப்பதை நாம் கண்டித்த கையோடு, ‘குருதி’ படத்தையும் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அந்தப் பின்னணியில், ‘குருதி’ நடுநிலை, மத நல்லிணக்கம், மத வெறுப்பு என்ற போர்வையில் எந்தத் தரப்புடன் சமரசம் பேசுகிறது, எந்தத் தரப்பு திருந்தாது என்று தீர்ப்பு கொடுக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.

ப்ரித்விராஜ் தயாரிப்பில் உருவாகியிருக்கிறது ‘குருதி’. ப்ரித்விராஜ் இயக்கிய ‘லூசிஃபர்’ படத்தில் பிரபலமான வசனம் ஒன்று உண்டு. ‘இங்கு நடப்பது நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான சண்டை அல்ல; தீமைக்கும் தீமைக்கும் இடையிலான சண்டை’ என்று மோகன்லால் சொல்வதாக அந்த வசனம் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வசனத்தை போல, ‘குருதி’ நல்ல முஸ்லிமுக்கும் கெட்ட முஸ்லிமுக்குமான சண்டையையும், அதனூடே ’இந்து அப்பாவித்தனம்’ என்பதற்கும், ‘முஸ்லிம் மதவெறி’ என்பதற்குமான சண்டையின் வழியாக போலி நடுநிலை வேடத்தைத் தரித்து வந்திருக்கிறது.

கட்டுரையாளர் ~ ர. முகமது இல்யாஸ்

ஊடகவியலாளர், தமிழின் முன்னனி பத்திரிகைகளில் எழுதி வரும் இவர் தற்போது ஒரு தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
தொடர்புடைய பதிவுகள்:

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்