Aran Sei

`நான் நிரந்தரமானவன் அழிவதில்லை’ – கண்ணதாசன் நினைவு நாள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் கண்ணதாசன். இயற்பெயர் முத்தையா. சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி தம்பதிக்கு எட்டாவது மகனாகப் பிறந்தவர்.

ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 20க்கும் மேற்பட்ட நாவல்கள் எனக் காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளைத் தந்த மாபெரும் படைப்பாளி. சங்க இலக்கிங்களின் செழுமையையும் தத்துவங்களையும் அனுபவங்களையும் சமூக, அரசியல் விழிப்புணர்வையும் பாமர மனிதனுக்கும் புரியும் எளிய மொழியில் எழுதிய கவியரசு கண்ணதாசனுக்கு இன்று 39 வது ஆண்டு நினைவு நாள்.

திரை ஒலி, சண்டமாருதம், தென்றல், தென்றல் திரை உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றினார். கண்ணதாசன் என்ற பத்திரிகையை அவரே நடத்தினார். அனைத்துப் பத்திரிகைகளிலும் அவரது கவிதைகள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் வெளிவந்தன. அவை அப்போதைய இலக்கிய ஆளுமைகள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றன.

பிறப்பு முதல் இறப்புவரை நினைவுகூரும்விதம் வாழ்வின் ஒவ்வோர் அடுக்கிலும் அங்கம் வகிப்பவர் கண்ணதாசன். திரைப்பாடல்கள் மட்டுமல்லாது கவிதை, சிறுகதை, புதினம், தன்வரலாறு, சமயம், நாடகம், வசனம் எனக் கலையின் அத்தனை பரிமாணங்களிலும் ஒளிர்ந்தவர். தான் வாழ்ந்த இன்பக் களிப்பு பற்றிச் சொல்கையில் `இந்தக் கைகளால் தீண்டாத அழகில்லை’ என்பார். இறக்கும் போதுகூட தான் எப்படி இறக்கவேண்டும் என்று நினைத்ததில் வித்தியாசமானவர். நான் இறக்கையில் `ஒரு கையில் மதுவும் இன்னொரு கையில் மாதுவும் இருக்க வேண்டும்’ என நினைத்தவர்.

ஒருமுறை வைரமுத்து தன் சொந்த கிராமத்துக்குச் சென்றிருந்த போது நிகழ்ச்சிகளில் கண்ணதாசன் பாடல்கள் ஒலிப்பதைக் கேட்டு நான் சினிமா பாட்டு எழுத ஆரம்பித்து கால் நூற்றாண்டு ஆகிறது. ஆனால், இன்னும் இங்கே கண்ணதாசன் பாடல்தான் ஒலித்துக்கொண்டிருக்கிறது என்று சொன்னதாகக் கேள்விப்பட்டது உண்டு. ஒருமுறை நா.முத்துக்குமார் கண்ணதாசனைப் போல் தத்துவப் பாடல்கள் எழுதணும் என்று ஒரு நேர்காணலில் கூறினார். நா.முத்துக்குமார் மட்டுமல்ல கோடாம்பாக்க சினிமாக் கதவைத் தட்டும் ஒவ்வொரு பாடலாசிரியரின் கனவும் அதுதான். அதுதான் கண்ணதாசனின் மகத்துவம்.

அவரைப் போல் எழுதவேண்டும் என்று ஒருசாரார் ஆசைப்படுவது ஒருபக்கம்; அவரைப் போல் எழுதமுடியவில்லையே என்கிற ஆதங்கம் உள்ளவர் மறுபக்கம். `எட்டாவது வரை படித்து எட்டா உயரத்துக்குச் சென்றவர்’ என இவரை பலபேர் புகழ்வது உண்டு.

பாடலாசிரியர்கள் மட்டுமல்ல `வனவாசம் போல் என் வாழ்வை அப்பட்டமாக  எழுதவேண்டும்’ என்று சொல்லும் பல எழுத்தாளர்களை நான் சந்தித்து இருக்கிறேன். ஆனால், எவராலும் அவ்வாறு எழுத இயலவில்லை. இவரின் வெளிப்படையான வாழ்வையும் கனவையும் எடுத்துரைப்பதற்கு `கோப்பையிலே ஒரு குடியிருப்பு’ பாடல் ஒன்றே போதும். இப்பாடலில் ஒரு வரி வரும் `நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.’

ஆம் கண்ணதாசன் நிரந்தமானவன். எந்த நிலையிலும் மரணமற்றவன்….

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்