Aran Sei

100% இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதி – வைரலாகிவரும் மருத்துவரின் உருக்கமான கடிதம்

கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள், 50% இருக்கைகளுடன் செயல்பட்டுக் கொள்ளலாம் என்று கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜய நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படமும், நடிகர் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ திரைப்படமும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளன.

இந்நிலையில், நடிகர் விஜய், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இரண்டு தினங்களுக்கு முன் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது, திரையரங்குகள் 100% இருக்கைகளுடன் செயல்பட அனுமதியளிக்க வேண்டும் என்று அவர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். இதே கோரிக்கையை நடிகர் சிம்புவும் முன்வைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்படுவதற்கு இன்று, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றும் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில்,  தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில், நடிகர்கள் விஜய் மற்றும் சிம்புவுக்கு எழுதியுள்ள கடிதம் வைரலாகி வருகிறது.

அந்த கடிதத்தின் சுருக்கமான மொழியாக்கம் பின்வருமாறு: 

அன்புடைய நடிகர் விஜய், நடிகர் சிம்பு மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசுக்கு,

நான் சோர்வடைந்து விட்டேன். என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்களும் சோர்வடைந்து விட்டனர். சுகாதார பணியாளர்களும், துப்புரவு பணியாளர்களும் சோர்வடைந்துவிட்டனர். காவல்துறையினரும் சோர்வடைந்துவிட்டனர்.

முன் எப்போதும் வந்திடாத, இந்த பேரிடர் ஏற்படுத்திவரும் அழிவுகளை, முடிந்த அளவுக்கு குறைப்பதற்கு எங்களைப் போன்றவர்கள் களத்தில் இறங்கி மிகக் கடுமையாக வேலை செய்துவிட்டோம். எங்களுடைய வேலையை நான் பெருமைப்படுத்தி கூறவில்லை. ஏனென்றால், பொதுவான பார்வையில் அதில் என்ன பெருமை உள்ளது என்று நினைப்பார்கள் என்பது எனக்கு தெரியும்.

எங்களுக்கு முன் எந்த கேமராவும் இல்லை. நாங்கள் சாகசங்களை செய்து காண்பிப்பதில்லை. நாங்கள் கதாநாயகர்கள் இல்லை. ஆனால், எங்களுக்கு சிறிது ஓய்வெடுக்கும் உரிமை உள்ளது. ஒரு சிலரின் பெருமைக்கும், பேராசைக்கும் நாங்கள் இரையாக விரும்பவில்லை.

பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்றும் இந்த தொற்றினால் மக்கள் உயிரிழக்கிறார்கள். இந்நிலையில், திரையரங்குகளில் 100 சதவீதம் மக்களை அனுமதிப்பது தற்கொலைக்குச் சமம். மாறாக இதை கொலை என்றே கூறலாம். கொள்கை வகுப்பவர்களும், கதாநாயகர்கள் என்று கூறிக்கொள்பவர்களும், மக்கள் கூட்டத்தோடு அமர்ந்து படம் பார்க்கப் போவதில்லை. இது, காசுக்காக உயிரை விலை பேசும் கொடுக்கல் வாங்கள் வியாபாரமேயன்றி வேறில்லை.

தற்போதும் முழுமையாக அனையாத நெருப்பை, மேலும் தூண்டி விடுவதற்கு பதில், நாம் பொறுமையாக நமது வாழ்க்கையில் கவனம் செலுத்தி, இந்த பெருந்தொற்றை அமைதியாக ஓன்றிணைந்து கடப்போமா?

நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல்பூர்வமாக எழுதலாம் என்று இருந்தேன். ஆனால், அப்போதுதான் என்னையே நான் கேட்டுக்கொண்டேன் “அதனால் என்ன பயன்?”

சோர்வுடன்,

வருத்தத்துடன், சோர்வான மருத்துவர்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்