திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி கடந்த சில நாட்களாக முகமறியாத நபர்களிடமிருந்து வரும் தொடர் தொலைபேசி அச்சுறுத்தல்களால் மிகுந்த பதற்றத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
ட்விட்டரில் அவர், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்.” என்று பதிவிட்டுள்ளார்.
என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்.முதல்வர் அய்யா உதவ வேண்டும்
அவசரம்.— R.Seenu Ramasamy (@seenuramasamy) October 28, 2020
இதுகுறித்து இயக்குநர் சீனு ராமசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அப்போது, “எனக்கு அரசியல் சினிமா தெரிந்த அளவுக்கு சினிமா அரசியல் தெரியவில்லை என்பதுதான் உண்மை.” எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் முத்தைய்யா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என்று எதிர்ப்புகள் கிளம்பிய போது அவர் மிகவும் வருத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.
“தமிழ்த் திரையுலக கதாநாயகன் விஜய்சேதுபதி தமிழர்களின் எதிர்ப்பைப் பெற்றுவிடக் கூடாது என்பதால் அவருடைய நலன்கருதி அந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என நான் தனிப்பட்ட முறையில் அவரிடமும் பொதுவெளியிலும் கூறியிருந்தேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
“விஜய்சேதுபதி மீதுள்ள அன்பினால் உலகத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள் ஆகியோர் விஜய் சேதுபதி 800 படத்தில் நடிக்க வேண்டாம் எனக் கோரிக்கையை முன்வைத்தனர். அதே போல நானும் கோரிக்கை மட்டுமே வைத்தேன். இது தவறா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“நான் நடிகர் விஜய்சேதுபதிக்கு எதிராக இருப்பதாகவும், அவருக்கு எதிராகப் பதிவிட்டதாகவும் எனக்கு தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலமாக தொடர் அச்சுறுத்தல்கள் வருகின்றன. ஆபாசமாகப் பேசுகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.
என்ன காரணத்துக்காக யார் இதைச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் இயக்குநர் சீனு ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
“எனக்கும் நடிகர் விஜய்சேதுபதிக்கும் பகை உண்டாக்கி அதில் சிலர் குளிர்காய நினைக்கிறார்கள். முகமறியாத சில சக்திகள் இதுபோலச் செயல்படுவதன் நோக்கம் எனக்கு தெரியவில்லை. அது தெரியவருமானால் அவர்களோடு உரையாடக் கூட தயாராக இருக்கிறேன்.” எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, “தொலைபேசி அச்சுறுத்தல்கள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். நம் இருவருக்குள் யாராலும் முரண்பாட்டை உண்டாக்க முடியாது.” என நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளதாகவும் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இயக்குநர் சீனு ராமசாமி கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.