Aran Sei

குதிரைவால் : ‘மேஜிக்கல் ரியலிசம்’ மூலம் அரசியல் பேசியுள்ளோம் – மனோஜ் லியோனல் ஜாசன்

தமிழ் சினிமா தன் வழமையான போக்கினை விட்டு விலகி, மாறுபட்ட கதைக்களங்களிலும், சோதனை முயற்சிகளிலும் துணிச்சலுடன் இறங்கி அடிக்கிறது. இலக்கிய வாசிப்பு, உலக சினிமாக்களின் தாக்கம் கொண்ட புதிய அலை இயக்குனர்களின் வருகையே இம்மாற்றத்தைச் சாத்தியப்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக பல வகைமைகளில் திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவ்வரிசையில் மேஜிக்கல் ரியலிஸம் என்று சொல்லப்படக்கூடிய மாய யதார்த்தவாதத்தை அடிப்படையாக வைத்து படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.

2018ம் ஆண்டு ‘பஞ்சு மிட்டாய்’ என்கிற திரைப்படம் தமிழின் முதல் மாய யதார்த்தவாதத் திரைப்படமாக வெளியானது. தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் வெளியீட்டில், இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகிய இயக்குனர்கள் இணைந்து இயக்கியிருக்கும் ‘குதிரைவால்’ என்கிற திரைப்படமும் மாய யதார்த்தவாத கதையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது

கவிஞரும் எழுத்தாளருமான வே.நி.சூர்யாவிடம் மாய யதார்த்தவாதம் என்கிற வகைமையின் தோற்றுவாய் குறித்துக் கேட்டதற்கு.

“மாய யதார்த்தவாத எழுத்து வகைமை மேற்கத்திய நாடுகளில் தோன்றியது என பொதுவாக நினைக்கிறார்கள். ஆனால் உலகில் எழுதப்பட்டுள்ள மாய யதார்த்தவாத கதைகள் அனைத்துமே அந்தந்த நாட்டின் தொன்மத்திலிருந்து விளைந்தவையே. நமக்கு விக்ரமாதித்யன் வேதாளம் கதை, மத்தியக் கிழக்கு நாடுகளில் ஆயிரத்தொரு அரபு இரவுக் கதைகள், மேற்கில் ஈசாப் நீதிக்கதைகள் என அனைத்துமே அதன் தொன்மங்களில் இருந்து உருவானதுதான். ஃபேண்டஸி என்று சொல்லப்படக்கூடிய மிகுபுனைவுக் கதைகளுக்கும் மாய யதார்த்தக் கதைகளுக்கும் நிறைய வேறுபாடுண்டு. ஃபேண்டஸி கதைகள் யதார்த்தத்தை விட்டு முற்றிலும் விலகி மாயாஜாலத்தன்மையை மட்டுமே முதன்மைக் கருவியாகக் கொண்டிருக்கும். மாய யதார்த்தக் கதைகளில் யதார்த்த வாழ்வில் நிகழும் மாயாஜால அம்சங்கள் சொல்லப்பட்டிருக்கும். உதாரணமாக விக்ரமாதித்யன் கதைகளை எடுத்துக் கொள்வோம். அதில் விக்ரமாதித்யன் யதார்த்தப் பாத்திரம், வேதாளம்தான் அதன் மாயாஜால அம்சம்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில், சர்வாதிகார ஆட்சி நடைபெற்ற காலகட்டத்தில் எழுத்தாளர்களால் எதையும் நேரடியாகச் சொல்ல முடியவில்லை. எனவே பூடகமாகச் சொல்வதற்காக அவர்கள் மாய யதார்த்தம் என்கிற வகைமையைக் கையிலெடுத்தார்கள். இக்கதைகளில் உள்ள மாயாஜாலத் தன்மையைக் கொண்டு அதனை வெற்று சுவாரஸ்யத்துக்காக எழுதப்பட்டது என எண்ணி விட முடியாது. இவ்வகைக் கதைகளில் பூடகமாக அரசியல் பேசப்பட்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான காப்ரியேல் கார்சியோ மார்க்கேஸ் தனது நூற்றாண்டு காலத் தனிமை நாவலில் மேற்கத்தியக் கலாச்சாரம் உள் நுழைகையில் அவர்களின் நாகரிகங்கள் எப்படியாக சிதைவுறுகின்றன என்பதைத்தான் எழுதியிருக்கிறார். ஜார்ஜ் லூயி போர்ஹேஸ், ஹாருகி முரகாமி என பலரும் இவ்வகை எழுத்தில் அரசியலைப் பேசியிருக்கிறார்கள். தமிழ் இலக்கியச் சூழலிலும் நமது தொன்மங்களை அடிப்படையாகக் கொண்டு மாய யதார்த்தவாதக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. இலக்கியத்தில் பல வகைமகள் உண்டு. காலத்தின் தேவைக்குத் தகுந்தாற்போல் அவை உருவாகிக் கொண்டே இருக்கும்” என்கிறார்.

உலக அளவில் மாய யதார்த்தவாதத்தைக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் சிலவற்றைக் குறித்து எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷிடம் கேட்டதற்கு

“மாய யதார்த்தவாதத்தின் வழியாக அரசியலைப் பேச முடியும் என்பதால் உலகின் முக்கியமான இயக்குனர்கள் பலரும் இவ்வகைமையில் திரைப்படங்கள் எடுத்திருக்கிறார்கள். தென் கொரிய இயக்குனர் கிம் கி டுக்கின் 3 iron, isle போன்ற திரைப்படங்கள் இவ்வகைப் படங்கள்தான். 3 iron திரைப்படத்தில் நாயகன் ஓர் கைதி. அவன் சிறையிலிருந்து தப்பிப்பதே ஓர் மாயாஜலம்தான். ஹாலிவுட்டில் டாம் ஹேங்ஸ் நடிப்பில் வெளியான Groundhog day திரைப்படத்தில் நாயகன் ஒரே நாளுக்குள் திரும்ப திரும்ப உழன்று கொண்டிருப்பான். அவன் தூங்கி எழுந்தால் மீண்டும் அதே நாளில்தான் எழுவான். ஒரே சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடக்கும். இதனால் சலிப்புறுகிற அவன் அந்நாளை மாற்றியமைப்பதற்காக ஈடுபடும் செயல்களைக் கொண்டு படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஃப்ரெஞ்சு இயக்குனர் வுடி ஆலனின் Midnight in Paris திரைப்படத்தில், ஒரு தம்பதியினர் பாரிஸுக்குச் செல்லும்போது அங்கே அவர்கள் எழுத்தாளர்கள் சிலரைச் சந்தித்துப் பேசுவார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும் இறந்தவர்கள். காலப்பயணத்தினூடே உருவாக்கப்பட்ட மாய யதார்த்தப்படம் இது. டாம் ஹேங்ஸ் நடிப்பில் வெளியான மற்றொரு திரைப்படமான The Green Mile சிறைச்சாலையை களமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. டாம் ஹாங்ஸ் அடைக்கப்பட்டிருக்கும் சிறையில், கருப்பினத்தைச் சேர்ந்த கைதி ஒருவரும்  அடைக்கப்பட்டிருப்பார். அவர் கை வைத்தாலே நோய் குணமாகி விடும். டாம் ஹேங்ஸ் சிறுநீரக பிரச்னைக்கு ஆளாகி தவித்துக் கொண்டிருக்கையில் அவர் கை வைத்து குணமாக்குவார். இப்படியாக இன்னும் பல திரைப்பட்ங்களைச் சுட்ட முடியும். இவ்வகைப் படங்கள் எல்லாம் அந்தந்த நாடுகளின் தொன்மக் கதைகளிலிருந்து உருக்கொண்டதுதான். அந்தந்த கால கட்டத்துக்கான சமூக மதிப்பீடுகள் அக்கதைகளில் வெளிப்பட்டிருக்கும். தமிழில் இவ்வகைத் திரைப்படங்கள் உருவாகி வருவது வரவேற்கத்தக்கது” என்கிறார் ராஜேஷ்.

‘குதிரைவால்’ திரைப்படத்தின் இயக்குனர்களில் ஒருவரான  மனோஜ் லியோனல் ஜாசனிடம் மாய யதார்த்தவாத வகைமையில் படம் இயக்க முன் வந்ததன் நோக்கம் குறித்துக் கேட்டதற்கு

“இத்திரைப்படத்தை நானும், ஷ்யாம் சுந்தரும் இயக்கியிருக்கிறோம். ஜி.ராஜேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். இத்திரைப்படத்தில் நாங்கள் ஓர் அரசியலைத்தான் பேசியிருக்கிறோம். அதை மேஜிக்கல் ரியலிஸம் வழியாகச் சொல்ல வேண்டும் என முன் வந்ததற்கு எங்களது இலக்கிய வாசிப்புதான் முக்கியமான காரணம். காப்ரியேல் கார்சியோ மார்க்கேஸ், ஹாருகி முரகாமி, ஃப்ரான்ஸ் காஃப்கா, போர்ஹேஸ் போன்றோரின் ஆக்கங்கள் எங்களுக்கு பெரும் தாக்கத்தை உண்டாக்கின. இந்திய திரைப்பட இயக்குனரான மணி கவுலின் திரைப்படங்களும் எங்களை பாதித்தன. நாட்டார் வழக்குக் கதைகளில் உள்ள மாய யதார்த்தத் தன்மையைக் கொண்டு சமகாலத்தைய அரசியல் மதிப்பீடுகளோடு ஓர் திரைப்படத்தை இயக்க வேண்டும் என்பது எங்களது கனவாக இருந்தது. மார்க்கேஸின் நூறாண்டு காலத் தனிமை, காஃப்காவின் உருமாற்றம் எல்லாம் எப்படியாக ஓர் அரசியலைப் பேசியதோ அதே போல் நமக்கான அரசியலைப் பேச வேண்டும் என்கிற முயற்சிதான் இத்திரைப்படம். தமிழ் திரையுலகம் இதுவரை பெரிதும் அறிந்திடாத ஓர் வகைமையில் படம் இயக்குவது சோதனை முயற்சிதான். வெகுஜனப் பரப்புக்கான படமாகவும் அது இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது பெரிய சவாலாக இருந்தது. அதனை சாத்தியப்படுத்தியிருக்கிறோம் என்றே நினைக்கிறோம். நிச்சயம் பார்வையாளர்களுக்கு இப்படம் புதிய அனுபவமாக இருக்கும்” என்கிறார் மனோஜ்.

புதியவைகளை நோக்கிய நகர்வுகள் சமூகம் தன்னை உலுக்கி உதறி புத்துணர்வு பெற உதவுகின்றன.  அந்தவகையில், வெகுஜனத் திரைச்சூழலில் நிகழும் இத்தகைய முன்னெடுப்பு நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்