Aran Sei

பீகாரில் பாஜக வெற்றிக்கே பாடுபட்டோம் – சிராக் பஸ்வான்

credits : the hindu

”பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவில் பாஜகவை ஒரு வலுவான சக்தியாக உருவாக்கவே நாங்கள் பாடுபட்டோம்” என கூறியுள்ளார் லோக் ஜன் சக்தியின் தலைவர் சிராக் பஸ்வான்.

தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மீண்டும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி. இந்தக் கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், இந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா, விகாஷில் இன்சான் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

முதலில் இழுபறியாக இருந்த தேர்தல் முடிவுகள் இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குச் சாதகமாக முடிந்ததுள்ளது. நான்காவது முறையாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.

இந்தத் தேர்தலில்  எல்ஜேபி  தேசிய ஜனநாயக கூட்டணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. “குறைந்தபட்சம் 27 தொகுதிகளிலாவது ஐக்கிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணியிடம் தோல்வியை சந்திக்க, எல்ஜேபிக்கு விழுந்த வாக்குகளே காரணம்” என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது

2015-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 71 இடங்களைப் பெற்ற நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இந்தத் தேர்தலில் வெறும் 43 இடங்களையே கைபற்றியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் 53 இடங்களை கைபற்றிய பாஜக இந்த முறை 74 இடங்களை கைபற்றியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது ”எல்ஜேபி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி தான் அமையும்” என்றும் “நித்திஷ் குமாரால் ஒருபோதும் பீகாரின் முதலமைச்சராக முடியாது” என பிரச்சாரம் செய்து வந்தார் பஸ்வான்.

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து இன்று பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த எல்ஜேபி தலைவர் சிராக் பஸ்வான் “தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியாக உள்ளது. மற்ற கட்சிகள் போலவே நாங்களும் நிறைய தொகுதிகளை கைபற்ற விரும்பினோம். ஆனால் இந்தத் தேர்தலில் எங்கள் முழு கவனமும் பாஜகவை ஒரு வலுவான சக்தியாக உருவாக்குவதிலேயே இருந்தது” என தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அவருடைய வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பீகார் முதலமைச்சர் நித்திஷ் குமாருடன் இருக்கும் முரண் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சிராக் ”எங்களுக்குள் தனிபட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லை, அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் மட்டுமே இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘அனுமன்’ போல இருப்பேன் என்று சிராக் பஸ்வான் கூறியது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்