Aran Sei

என்னுடைய புத்தகத்தை அரசின் எந்த திட்டத்தின் கீழும் வாங்க கூடாது – தலைமை செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள்

“நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும், எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது” என்று தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, தலைமை செயலாளர் வெ.இறையன்புவெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களைத் தொடுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன். அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இப்போதுள்ள பொறுப்பின் காரணமாக, பள்ளிக் கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதியுள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வரப்பெற்றாலும், தலைமைச் செயலாளராகப் பணியாற்றும் வரை எந்தத் திட்டத்தின் கீழும் வாங்கக் கூடாது என்கிற உத்தரவே அது” என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, அரசு விழாக்களில் பூங்கொத்துகளுக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்று என, கடந்த 2006ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள வெ.இறையன்பு, இதன்காரணமாக, “அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பதாக எண்ணி, என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துகளுக்கு பதில் விநியோகிக்க வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இவ்வேண்டுகோள் மீறப்பட்டால் அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரியிடம் அது வசூலிக்கப்பட்டு அரசுக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் , எனவே, இத்தகைய சூழலை, எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்