Aran Sei

பாலியல் புகாரில் சிக்கிய துறைத்தலைவருக்கு எதிராக போராட்டம் : ஆடைகள் கிழிபட காவல்துறை தாக்கியதாக மாணவர்கள் புகார்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை தலைவர் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதால் அத்துறைத் தலைவர் சொளந்தர்ராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்று (மார்ச் 22), காலை 11 மணி அளவில், சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய சென்னை மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

அதில், இந்திய மாணவர் சங்க உறுப்பினர்கள் மட்டுமின்றி, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள், ஜனநாயக வாலிபர் சங்க உறுப்பினர்களும் மாதர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

பாலியல் புகாரில் சிக்கிய துறைத்தலைவர்: கண்டுகொள்ளாத பல்கலைக்கழகம் -மாணவர்கள் போராட்டம்

அப்போது, மாணவர்களின் மீதான முறையற்ற இடைநீக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் மாணவியின் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்ட தொல்லியல்துறை தலைவர் சௌந்தர்ராஜன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கங்கள் வழியாக போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், குற்றச் செயலில் ஈடுபட்ட அத்துறை தலைவரைப் பாதுகாக்காமல், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போது, காவல்துறையினருக்கும் போராட்டம் செய்த மாணவர்களுக்கு ஏற்பட்ட மோதலில், காவல்துறையினர் அவர்களைத் தாக்கியுள்ளனர்.

பாலியல் புகாரில் சிக்கிய துறைத்தலைவர்: போராடிய மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சி

கைதான இந்திய மாணவர் சங்க உறுப்பினரான சென்னைப் பல்கலைக்கழக மாணவி யுவஸ்ரீயிடம் அரண்செய் பேசியபோது, “பத்து நிமிடம் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு, பல்கலைக்கழக துணைவேந்தரை பார்த்து, நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுக்கிறோம் என்று காவல்துறையினரிடம் முன்னமே கேட்டிருந்தோம். அவர்களும் இதற்கு அனுமதிக் கொடுத்தார்கள். திடீரென்று வந்த துணை ஆணையர் சரவணன் இன்ஸ்பெக்டர் சீதாராமனும், எங்களிடமும் மாதர் சங்கத்தினரிடமும் தகாத முறையையிலேயே பேசினார்கள். எல்லோரையும் கைது செய்யுங்கள் என்று துணை ஆணையர் சரவணன் சத்தம் போட்டார். தரதரவென்று அராஜகமுறையில் எங்களை கைது செய்தனர். இப்போது, நுங்கம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளோம்.” என்று கூறினார்.

காவல்துறையின் இந்த தாக்குதல் குறித்து அரண்செய்யிடம் மேலும் கூறும்போது, இரு மாணவர்களுக்குக் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும், ஆண் பெண் பேதமின்றி எங்கள் உடைகளை எல்லாம் கிழிபட, அடித்து வண்டியில் ஏற்றினார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தங்காத விடுதிக்கு கட்டணமா? – சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நீதி கேட்டுப் போராடி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற இந்திய மாணவர் சங்க உறுப்பினர்களையும் மாதர் சங்க உறுப்பினர்களையும் காவல்துறை கொடூரத் தாக்குதல் நடத்தி கைது செய்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சட்டியுள்ளது. மேலும், பெண்களின் ஆடைகளைப் பொதுவெளியில் கலைந்து, ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 22) மாலை 5.00 மணிக்கு, திருவல்லிக்கேணி துணை ஆணையர் சரவணன் மற்றும் இன்ஸ்பெக்டர் சீதாராமன் தலைமையில் காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையைக் கண்டித்தும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் வாலாஜா ரோடு திருவல்லிக்கேணி காவல் நிலைய ஆணையர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா அறிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்