சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவியின் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து துறைத்தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மூன்றாவது நாளாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அரண்செய்யிடம் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் பேசிய போது, சென்னைப் பல்கலைக்கழகம் துறைத்தலைவருக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும் இந்தச் சம்பவத்தை விசாரிக்காமல் திசை திருப்புவதாகவும் குறிப்பிட்டார்.
தங்காத விடுதிக்கு கட்டணமா? – சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
மாணவிமீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தொல்லியல் துறைத்தலைவர் சௌந்தரராஜன் மீது குழு அமைத்து விசாரித்தால் மட்டுமே பேச்சு வார்த்தை வருவோம் என்று போராட்டக் குழு அறிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்
இந்நிலையில், நேற்று இந்தசம்பவம் குறித்து விசாரணை குழு அமைக்கிறோம் என்று எழுத்து வடிவில் பல்கலைக்கழக பதிவாளர் உறுதியளித்ததாகவும் ஆனால், இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது மாற்றி பேசி, இணைக்குழு என்று தெரிவித்ததாகவும் அந்த மாணவர் அரண்செய்யிடம் கூறினார்.
மேலும் விசாரணைக்காக அமைக்கப்பட்ட இணைக்குழுப்பற்றி எழுத்துபூர்வமாகப் பதிலளிக்காமல் பேச்சு வார்த்தைக்கு அழைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பெண்ணின் விருப்பமின்றி பாலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையே – டெல்லி நீதிமன்றம் உத்தரவு
இதற்கு முன்பே அமைக்கப்பட்ட பல குழுக்கள் துறைத்தலைவருக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கடந்த மாதம் 8 மாணவர்களை திட்டமிட்டு தேர்வில் தோல்வி அடையவைத்ததாகவும் , அதுகுறித்து போராடிய பின்பு குழு அமைத்துத் தேர்வுத்தாளை மறுதிருத்தம் செய்தபோது 8 மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும், ”மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்றால் இது அப்பட்டமாக மாணவர்கள்மீது திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அப்போதும் துறைத்தலைவர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை” என்றும் அந்த மாணவர் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் தான் இதேபோல் அனைத்து மாணவர்களது தாள்களும் மறுத்திருத்தம் செய்ய பட கோரிக்கை வைக்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியாகாத நிலையில் அதனை கேட்கச் சென்ற மாணவிமீது துறைத்தலைவர் சௌந்தர்ராஜன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறினார்.
பல்கலைக்கழகம் அமைக்கும் குழு எப்போதும் துறைத்தலைவர் சௌந்தர்ராஜனுக்கு ஆதரவாகச் செய்யப்படுவதாகவும் எனவே குழுவைப் புறக்கணிப்பதாகவும் போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக நிர்வாகம் துறைத்தலைவர் சௌந்தர்ராஜன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்டப்போராட்டத்தை தொடர்வோம் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.