Aran Sei

ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக சம்பளம் வழங்குங்கள் -சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு இணையான சம்பளம் கொடுப்பதற்கான திட்டத்தை 12 வாரகாலத்திற்குள் உருவாக்க வேண்டும் எனவும், அதுவரை குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி சம்பளம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் கே.பாரதி தாக்கல் செய்த மனுவில், “ஒன்றிய அரசின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 391 ரூபாய் மட்டும் ஊதியமாக வழங்கப்படுகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு 17,023 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. சம வேலைக்குச் சம ஊதியம் என்ற கோரிக்கையின் அடிப்படையில், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் உரிய ஊதியம் வழங்க வேண்டும்” என்று மனுவில் கே.பாரதி கோரியிருந்தார்.

“அம்பத்தூரில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் 1454 தூய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். நிரந்தர தூய்மை பணியாளர்களின் பணிகளை இத்திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களும் செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களைக் கடந்தாண்டு துவக்கத்தில் அவுட்சோர்ஸ் பணிகளுக்கு மாற்றச் சென்னை மாநகராட்சி முயன்றபோது அவர்கள் உழைப்போர் உரிமை இயக்கத்தில் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக வழக்குத் தொடுத்து தடை உத்தரவைப் பெற்று இன்றுவரை இத்திட்டத்தில் கீழ் பணிபுரிந்து வருகின்றனர். உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமல்படுத்தப்பட்டால் ஒவ்வொரு தூய்மை பணியாளர்களுக்கும் மாதம் 7,000 ரூபாய் வரை ஊதியம் அதிகரிக்கும்” என்று வழக்கறிஞர் பாரதி தெரிவித்துள்ளார்.

“ஒப்பந்த அடிப்படையில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் தூய்மை பணியாளர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தக் கூடாது. மேலும், ஒரு நாட்டின் நலிந்த பிரிவினர் எப்படி நடத்தப்படுகின்றனரோ, அதன் அடிப்படையில் தான் அந்நாட்டின் சிறப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது” என மகாத்மா காந்தி கூறியுள்ளதை நீதிபதி வி.பார்த்திபன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்த 1454 தூய்மை பணியாளர்களுக்கு இத்தீர்ப்பு நம்பிக்கையை அளித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள நிரந்தமில்லாத தூய்மை பணியாளர்களுக்குக் குறைந்தபட்சமாக ஊதிய சட்டத்தின் கீழ் சம்பளம் வழங்கப்பட வேண்டும், சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் கே.பாரதி வலியுறுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்