Aran Sei

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரும் வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகள் 8 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Image Credits: The Hindu

ல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி, திமுக சட்டபேரவை உறுப்பினர் எழிலன் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் எட்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதியின் திமுக சட்டபேரவை உறுப்பினர் எழிலன் நடத்திவரும் ‘அறம் செய்ய விரும்பு’ என்ற தொண்டு நிறுவனத்தின் வழியாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், “கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான விதிமீறலாகும். இந்தியாவில் 1975 ஆம் ஆண்டு தொடங்கி, 1977 ஆம் ஆண்டு வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பல்வேறு விதிமீறல்களும் இந்த காலக்கட்டத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டது.” என்று நினைவூட்டப்பட்டிருந்தது.

மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பாதுகாக்க வேண்டும் – சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்ற அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

“மாநில அரசின் சில அதிகாரங்கள் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1976-ல் மொத்தம் 5 முக்கியமான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை, மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. மாநில அரசுகளின் அனுமதி இன்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல், எமர்ஜென்சி காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இப்படி கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே, தற்போது நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக்கொள்கை போன்ற சட்டங்கள் மத்திய அரசு மூலம் அமலுக்கு வந்துள்ளன.” என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 14), இம்மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. தொண்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டுள்ளார்.

பின்னர், இவ்வழக்கில் தமிழ்நாடு அரசை தாமாக முன்வந்து எதிர் மனுதாரர்களாக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்கு குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் எட்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்