Aran Sei

‘மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு ஆஜராக வேண்டும்’ -எஸ்.வி.சேகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டது தொடர்பான வழக்கில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக நடிகர் எஸ்.வி.சேகருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவிவகித்த காலக்கட்டத்தில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது குறித்து ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். அந்நேரத்தில், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, தனது சமூக வலைதள பக்கத்தில் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.

இதுதொடர்பாக, சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

‘படிக்காமல் ஃபார்வேட் செய்துவிட்டு, மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா?’ – எஸ்.வி.சேகருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இன்று (மார்ச் 25), இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, “சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த பதிவுகள் நீக்கப்பட்டு, மன்னிப்பும் கேட்கபட்டது. நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயார்” என்று எஸ்.வி.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தையே மனுதாரர் பகிர்ந்ததாகவும் அதற்காக உடனடியாக மன்னிப்பும் கேட்கப்பட்டுவிட்டதால், இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக ஒரு முறைகூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என்று தமிழ்நாடு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தேர்தல் செலவிற்கு கட்சி கொடுத்த 13 கோடி – பாஜக வேட்பாளர்கள் கணக்கு காட்ட எஸ்.வி.சேகர் வலியுறுத்தல்

அதைத் தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், எஸ்.வி.சேகர் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு காவல்துறை முன்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “அப்போது, பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி முகநூலில் எழுதிய அமெரிக்க வாழ் தமிழர் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் அடுத்த விசாரணை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்