Aran Sei

“நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லும்” – உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் மேல்முறையீடு செய்ய முடிவு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 12 அன்று, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள நிபுணத்துவ உறுப்பினர்கள் பணியிடத்திற்கு தமிழகத்தின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கிரிஜா வைத்தியநாதன் உட்பட மூவரை மத்திய அரசு நியமனம் செய்திருந்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்ட கிரிஜா வைத்தியநாதன் : தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்

இந்நிலையில், கிரிஜா வைத்தியநாதனுக்கு உரிய அனுபவம் இல்லாத காரணத்தினால் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

அந்த மனுவில், தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்ட விதிகளின் படி நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்படக்கூடியவர் 15 ஆண்டுகள் இந்திய ஆட்சிப்பணி அனுபவமும், குறிப்பாக அதில் 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த துறையில் பணியாற்றிய அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் கிரிஜா வைத்தியநாதன் 15 ஆண்டுகளுக்கு மேல் இந்திய ஆட்சிப்பணி அனுபவம் பெட்டிருக்கிறாரே தவிர 5 ஆண்டுகள் சுற்றுச்சூழல் சார்ந்த பணி அனுபவம் இல்லை. அவர் 3 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே சுற்றுச்சூழல் துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்கிறார் அதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

பசுமை தீர்ப்பாயத்தில் கிரிஜா வைத்தியநாதன் – விதி மீறப்பட்டதாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு

இந்நிலையில், தலைமை செயலராகப் பணிபுரிந்தபோது நெகிழித் தடை கண்காணிப்பு மற்றும் மருத்துவக் கழிவு மேலாண்மை போன்ற பல்வேறு குழுக்களின் தலைவராகப் பணியாற்றிய அனுபவத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையில் பல்வேறு குழுக்களில் நிர்வாக ரீதியாக எடுத்த முடிவுகளை மட்டுமே வைத்து, அவரை நிபுணத்துவம் பெற்றவராகக் கருதக் கூடாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்திருந்த நிலையிலும், கிரிஜா வைத்தியநாதனை பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராகத் தகுதி பெற்றிருக்கிறாரென தீர்ப்பளித்து, அவரது  நியமனத்திற்கான தடையையும் நீக்கி உத்தரவிட்டுள்ளது.

பசுமை தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் – சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு

இந்நிலையில், இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அரண்செய் யிடம் பேசியபோது, ”தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம்” என்று தெரிவித்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்