Aran Sei

‘தேவையான தடுப்பூசிகள் இல்லை; நாளை 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்த இயலாது’ – சென்னை மாநகராட்சி ஆணையர்

தேவையான தடுப்புசிகள் கையிருப்பு இல்லாததால், நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 18 வயது மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமை நடத்த இயலாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று (ஏப்ரல் 30), பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “ஏற்கனவே, நாளை தொடங்கவுள்ள 18 வயதிலிருந்து 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாமிற்கு, தமிழ்நாடு ஒன்றரைக் கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகள் ஆர்டர் கொடுத்திருக்கிறது. ஆனால், பூனேவில் உள்ள மருந்து நிறுவனத்திடமிருந்து எவ்வளவு தடுப்பூசிகள் கிடைக்கும். ஹைதராபாத் மருந்து நிறுவனத்திடமிருந்து எவ்வளவு கிடைக்கும். மொத்தமாக ஆர்டர் செய்யப்பட்ட எண்ணிக்கையிலிருந்து எவ்வளவு தடுப்பூசிகள் கிடைக்கும், எப்போது கிடைக்கும் போன்றவற்றை மத்திய அரசு இன்னும் தெரிவிக்கவில்லை.” என்று கூறியிருந்தார்.

‘மத்திய அரசின் நடவடிக்கையால் நாளை தடுப்பூசி முகாம் தொடங்குவது சந்தேகமே’ – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

மேலும், “இம்முகாமிற்கான திட்டங்களை நாங்கள் முன்னமே தயாரித்து வைத்திருந்தாலும், நாம் புதிதாக இந்த முகாமிற்காக ஆர்டர் செய்திருந்த தடுப்பூசிகள் எப்போது கிடைக்கும்  என்று தெரிந்தால்தான், அதற்கு ஏற்றார்போல மருந்துகளை எடுத்த செல்ல முடியும். மற்ற மாநிலங்களும் இதே பிரச்சனையையே சந்தித்து வருகின்றன.” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக, இன்று (ஏப்ரல் 30) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 18 வயது மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமை நடத்த இயலாது. தேவையான தடுப்பூசிகள் இப்போது கையிறுப்பில் இல்லை. இப்போதிருக்கும் தடுப்பூசிகளை வைத்துக்கொண்டு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாமைதான் நடத்தவியலும்.” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்