Aran Sei

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு – 1500 கன அடி நீர் வெளியேற்றம்

டையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை நிவாரண மையங்களுக்குச் செல்லுமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் கனமழையால், 24 அடியை முழு கொள்ளளவாக கொண்டுள்ள செம்பரம்பாக்கம் ஏரி 22 அடிவரை நிரம்பியுள்ளதால்,  ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் நடவடிக்கைகளைச் சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாகச் சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், செம்பரம்பாக்கம் ஏரியின் மிகைநீர் இன்று, சுமார் 1,000 கன அடி அளவுக்கு வெளியேற்றப்பட உள்ளதால் கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள், அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

”சென்னை வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி ’நிவர்’ புயல் இன்று இரவு வலுவான புயலாகக் கரையைக் கடக்கும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைக்க தேவையான நிவாரண முகாம்கள் மற்றும் இதர பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக” மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

”எனவே, செம்பரம்பாக்கம் ஏரியின் மிகைநீர் அடையாறு ஆற்றின் வழியே கடலில் கலப்பதால் ஆற்றின் இருமருங்கிலும் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள்; குறிப்பாக கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் உள்ள கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் 169 நிவாரண மையங்கள் தற்போது திறக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன” என்று பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தேவையான விவரங்களைத் தெரிந்துகொள்ளவும், மழைநீர் தேக்கம் மற்றும் இதர இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கவும், பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள். 044-25384530, 044-25384540. மற்றும் அவசர உதவி எண்.- 1913-லும், கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190210 என்ற அலைபேசி எண்ணிலும், வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190211 என்ற அலைபேசி எண்ணிலும், ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190212 என்ற அலைபேசி எண்ணிலும், அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 9445190213 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்”.

செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார் என தகவல் வந்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்