Aran Sei

ஊபா சட்டத்தில் கைதான பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன்: 5000 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்த காவல்துறை

Image Credits: India Legal

ட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (ஊபா) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர் சித்திக் காப்பன் உட்பட எட்டு பேர்மீது, உத்தரபிரதேச காவல்துறையினர் 5,000 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள ஒரு மலையாள செய்தி இணையதளத்தில் செய்தியாளராகப் பணிபுரிந்து வந்த சித்திக் காப்பான், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி, ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைப் பற்றி தகவல் சேகரிப்பதற்காக, உத்தர பிரதேச மாநிலத்துக்குச் சென்றார். அவரை ஹத்ராஸுக்குள் நுழைய விடாமல் வழிமறித்த காவல்துறையினர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி அவரைக் கைது செய்தனர்.

அவருடன் செய்தி சேகரிக்க சென்ற சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது, ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சித்திக்கினுடைய லேப்டாப், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

சித்திக்கிற்கு ஒரு நீதி, அர்னாப் கோசாமிக்கு ஒரு நீதியா? – கபில் சிபல் கேள்வி

உத்தர பிரதேசத்தில் ஒரு பெரிய சதி திட்டத்தை அரங்கேற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பின்னணியில் சித்திக் வந்துள்ளதாக, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த மதுரா காவல்துறை, சித்திக் காப்பான் மீது தேசதுரோக சட்டத்தின் கீழும், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் (ஊபா) வழக்குகளைப் பதிவு செய்தது.

கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சித்திக் காப்பானை விடுவிக்கக் கோரி சட்ட போராட்டத்தை நடத்தி வந்தாலும் அவருக்கு இதுவரை பிணை வழங்கப்படவில்லை.

சித்திக் கப்பன் : ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சிறையிடப்பட்டு சித்திரவதை : பிபிசி கட்டுரை

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 3), உத்தரபிரதேச மாநிலம் மதுரா நீதிமன்றத்தில், அம்மாநில காவல்துறையின் ஐந்து பேர் கொண்ட சிறப்பு பிரிவு, பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை (பி.எஃப்.ஐ) சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் மீது 5,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அச்செய்தியில், சித்திக் கப்பன் (பத்திரிகையாளர்), அதிகூர் ரெஹ்மான், ரவூப் ஷெரீப், முகமது டேனிஷ், ஆலம், மசூத் அகமது, ஃபெரோஸ் கான், மற்றும் ஆசாத் பத்ருதீன் ஆகியோரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.

மேலும், அதில், குற்றம் சாட்டப்பட்ட இந்த எட்டு பேரும் உத்தரபிரதேசத்தில் அமைதியின்மையையும் கலவரங்களையும் உருவாக்கும் நோக்கத்திற்காக, மஸ்கட் மற்றும் தோஹாவை சேர்ந்த நிதி நிறுவனங்களிடமிருந்து ரூ .80 லட்சம் பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

‘ஊபா சட்டத்தில் கைதான என் கணவருக்காக சுண்டு விரலையாவது அசைத்தீர்களா கேரள முதல்வரே?’ : சித்திக் கப்பனின் மனைவி கேள்வி

இதனைத் தொடர்ந்து, மதுரா கூடுதல் மாவட்ட நீதிபதி மற்றும் அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணையை மே 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும், மதுரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்