Aran Sei

`மெஹ்பூபா முஃப்தியைக் கைது செய்யுங்கள்’ – முன்னாள் அதிகாரிகள் கூட்டறிக்கை

Image Credits: DNA India

ம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெஹ்பூபா முஃப்தி மற்றும் பாரூக் அப்துல்லா ஆகியோரை தேச துரோக வழக்கில் கைது செய்யக் கோரி, ஓய்வுபெற்ற பாதுகாப்புத் துறை மற்றும் நீதித்துறை அதிகாரிகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் நீதித்துறைகளிலிருந்து ஓய்வுபெற்ற 250 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதில், மெஹ்பூபா முஃப்தியும் பாரூக் அப்துல்லாவும், பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

பிரிவினைக்கு எதிரான அக்கறையுள்ள குடிமக்கள் குழு என்று தங்களை அழைத்துக் கொண்ட அதிகாரிகள், “சிலர் தங்களின் சுய நலனுக்காகக் கருத்துச் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில், நம் நாட்டையும் அதன் அரசியலமைப்பையும் பற்றி அவதூறு பரப்புவதைக் கண்டு எங்கள் குழு மிகவும் வருந்துகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

“இவர்களின் பேச்சு, இந்தியாவின் பகை நாட்டின் பேச்சைப் போல் உள்ளது. இதைச் செய்யும்போது, ​​அவர்கள் அந்த நாடுகளிடமிருந்து ஒத்துழைப்பைப் பெற கூடத் தயங்கவில்லை” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் மெஹ்பூபா முஃப்தி, “ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தும் கொடியும் மீண்டும் வழங்கப்பட்டால் இந்திய தேசியக்கொடியையும் ஏந்துவேன்” என்று கூறினார்.

“எங்கள் சொந்தக் கொடி திரும்பக் கிடைக்கும் வரை வேறு எந்தக் கொடியையும் நான் ஏற்றமாட்டேன். இந்தக் கொடிதான் அந்தக் கொடியுடனான எங்கள் உறவை உருவாக்கியது” என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைக் குறிப்பிட்டுப் பேசிய குழுவினர், அவர் இந்தியக் கொடியை அவமதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். “1971, தேசிய மரியாதை அவமதிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மெஹ்பூபா முஃப்தி கைது செய்யப்பட வேண்டும். அவர் காஷ்மீர் மக்களைத் தூண்டி பொது ஒழுங்கைக் குலைக்க முயற்சித்துள்ளார்” எனக் கூறியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீருக்கு ரத்து செய்யப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுப்பதற்காக அப்பிராந்தியத்தைச் சேர்ந்த ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து, ‘குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டமைப்பு’ எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

இதைப் பற்றி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், “சீனாவின் ஆதரவுடன் ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு மீட்டமைக்கப்படும் என்று பாரூக் அப்துல்லா தெரிவித்தார்” எனக் கூறியுள்ளனர்.

“மெஹ்பூபா முஃப்தியும் பாரூக் அப்துல்லாவும் ஜம்மு காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டம், 1978 மற்றும் தேசத்துரோகத்திற்கான ஐபிசியின் பிரிவு 124 ஏ ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட வேண்டும்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அனில் தியோ சிங், வெளியுறுவுத்துறை முன்னாள் தூதர்கள் லட்சுமி பூரி, அஜய் ஸ்வரூப் மற்றும் இந்திய உளவுத்துறையின் முன்னாள் தலைவர் சஞ்சீவ் திரிபாதி ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்