Aran Sei

விதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு – ஐஐடி மற்றும் ஐஐஎம்கள் கவலை

Image Credits: New Indian Express

ந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐஐடி) மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்களில் (ஐஐஎம்) சில விதிகளை மாற்றுவதற்காக மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகள் அந்த நிறுவனங்களை கவலையடையச் செய்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐஐடிக்களில், அடுத்த கல்வியாண்டிலிருந்து இந்திய மொழிகளில் பிடெக் பயிற்றுவிக்கப்படும் எனும் முடிவை எண்ணி ஆசிரியர்களும் அதிகாரிகளும் கவலையில் உள்ளனர் என்று இச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 26 அன்று, ஐஐடி மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களில் (என்ஐடி) பிடெக் படிப்புகளை “தாய்மொழியில்” வழங்கவுள்ளதாகக் கல்வி அமைச்சகம் அறிவித்தது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இந்தி மொழியில் பிடெக் பயிற்றுவிப்பதில் இருந்து இது துவங்கும் என்றும் அமைச்சகம் கூறியது.

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் இடஒதுக்கீடு – நடப்பது என்ன?

தற்போது, ​​தொழில்நுட்ப நிறுவனங்கள் பிடெக் படிப்புகளை ஆங்கிலத்தில் மட்டுமே கற்பிக்கின்றன.

தாய்மொழிகளில் பயிற்றுவித்தால் “நிறுவனங்களின் பெயருக்கு பாதிப்பு ஏற்படும்” என்றும் “உள்கட்டமைப்பு, ஆசிரியர் பயிற்சி மற்றும் மாணவர்களின் தொழில் சாத்தியங்கள் தொடர்பான சிக்கல்கள் ஏற்படும்” என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

கல்வியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர்களும் இந்திய மொழிகளில் பொறியியல் தொடர்பான புத்தகங்கள் மற்றும் சொற்களஞ்சியம் இல்லாததை சுட்டிக்காட்டியுள்ளனர்.

“மத்திய அரசின் முடிவின்படி, கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் கட்டட பொறியியல் ஆகிய மூன்று படிப்புகளையாவது ஒரு குறிப்பிட்ட ஐஐடி அமைந்துள்ள மாநிலத்தின் முதன்மை மொழியில் வழங்க வேண்டும். ஒவ்வொரு ஐஐடியும் பிராந்திய மொழியில் கற்பிக்கப்படும் மாணவர்களுக்கு 50 கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டும். கூடுதலாக 50 இடங்களை உருவாக்கினால் 8% மாணவர்கள் அதிகரிப்பார்கள். முன்னதாக 25% பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் ஐஐடியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு அவர்களுக்கு அதிக நிதி தேவைப்படுகிறது” என்று அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக தி வயர் தெரிவிக்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன், ஐஐஎம் சட்டத்தின் கீழ் 20 முதன்மையான வணிக நிறுவனங்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.

தற்போது, ஒரு நிறுவனம் இந்தச் சட்டத்தை மீறிச் செயல்படுவதாகக் கண்டறியப்பட்டால், அந்நிறுவனத்தின் ஆளுநர் குழுவை விசாரிக்க அரசுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐஐஎம் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, சில ஐஐஎம்கள், பணிபுரியும் நிபுணர்களுக்கான ஒரு வருட டிப்ளோமாவை பட்டப்படிப்பு திட்டமாக மாற்றின.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், நிறுவனங்கள் மீது அரசு எந்த அளவுக்குக் கட்டுப்பாட்டைச் செலுத்த வேண்டும் என்பதில் பிரதமர் அலுவலகமும் கல்வி அமைச்சகமும் உடன்படவில்லை. ஸ்மிருதி இராணியின் பதவி காலம் முடிந்து பிரகாஷ் ஜவடேகர் பதவி ஏற்றப் பிறகு இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்