கொரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கும் காப்பீடு திட்டத்தைக் கடந்த மாதம் 24-ம் தேதியுடன் நிறுத்தியதற்கு எழுந்த கண்டங்களை தொடர்ந்து, அதனை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதான் மந்திரி கரீப் கல்யாண் தொகுப்பு திட்டத்தின் கீழ் வரும் இக்காப்பீட்டால் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்கள் ஆகியோரும் பயன்பெறுவர்.
கடந்த மாதம் 24-ம் தேதியிட்ட மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கான கடிதத்தில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன், இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இன்று (மார்ச் 24) நள்ளிரவு வரையிலான உரிம கோரல்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்றும் அதற்கான உரிம கோரலை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஏப்ரல் 24-ம் தேதி என்றும் தெரிவித்திருந்தார்.
கொரோனா முன்களப்பணியாளர்களுக்கு புதிய காப்பீடு திட்டம் – மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
மத்திய அரசின் இம்முடிவிற்கு எதிராக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “அப்படியெனில் 24.03.2021 நள்ளிரவுக்கு பின் இறப்பை சந்தித்துள்ள விலை மதிப்பற்ற உயிர்களுக்கு என்ன பதில்? அவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தினர்க்கு என்ன ஆறுதல் தரப் போகிறோம்? இன்னும் வீரியத்தோடு தாக்கிக் கொண்டிருக்கிற கோவிட் இரண்டாவது அலையை எதிர்த்து முன் வரிசையில் நிற்கும் மருத்துவர், செவிலியர், ஊழியர்க்கு என்ன நம்பிக்கையை தரப் போகிறோம்?” என்று கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசுக்கு நன்றி என்ற குணமே இல்லாமல் போய்விட்டது என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 20), இக்காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா போராளிகள் காப்பீடு: கை தட்டிய அரசே கை விரிக்கலாமா? – சு.வெங்கடேசன் கேள்வி
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு பின்னர், இந்த புதிய நீட்டிப்பை அடுத்த ஓர் ஆண்டிற்கு மத்திய அரசு அறிவித்துள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அச்செய்தியில், “இக்காப்பீட்டு திட்டத்தின் கீழ், இதுவரை 287 உரிமைகோரல்களுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது தொற்றால் இறந்த 168 மருத்துவர்களின் குடும்பங்களின் உரிமைகோரல்களும் இதில் அடங்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.