Aran Sei

புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டம் – “மத்திய பொதுப்பணித் துறையின் முன்மொழிவை ஏற்க வேண்டாம் ” : குடிமக்கள் குழு

த்திய விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிட வளாகம் உள்ளிட்ட டெல்லியின் மத்திய பகுதியை மறுசீரமைப்பதற்கான திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டிடங்களின் மேம்பாடு அல்லது மறு வடிவமைப்பிற்கான புதிய விதிமுறைகளுக்கு சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) வல்லுநர் மதிப்பீட்டுக் குழு (EAC) வழங்கி உள்ள நிபந்தனை ஒப்புதல் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது.

இந்த மதிப்பீடு துண்டு துண்டானது மற்றும் மாற்று வழிகள் பற்றிப் பார்க்கப்படவே இல்லை என்ற அடிப்படையில் குடிமக்களின் கூட்டுக்குழு விமர்சனங்களை வைத்துள்ளது.

கட்டிடக் கலைஞர்கள், நகர்ப்புறத் திட்டமிடுபவர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட இந்தக் குழு, உச்சநீதிமன்றத்தின் இறுதி முடிவு நிலுவையில் இருக்கும் போது இத்தகைய மதிப்பீடு, கூடுதலாக பொதுப் பணத்தை திசை மாற்றுகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளது.

வல்லுநர் மதிப்பீட்டுக் குழு 18 நிபந்தனைகளைக் குறிப்பிட்டிருந்தது

மத்திய விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாரம்பரிய மண்டலத்தில் வரவிருக்கும் பல்வேறு கட்டிடங்களின் மேம்பாடு அல்லது மறு வடிவமைப்பிற்கு 18 நிபந்தனைகளை விதிகளை வல்லுநர் மதிப்பீட்டுக் குழு குறிப்பிட்டிருந்தது. இந்தக் கட்டிடங்களில் மத்திய செயலக கட்டிடங்கள், பிரதமரின் குடியிருப்பு மற்றும் மத்திய மாநாட்டு மையம் ஆகியவையும் அடங்கும். ஒப்புதலின் விதிமுறைக் குறிப்புகள், திட்டத்துக்கு  ஆரம்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

• வல்லுநர் மதிப்பீட்டுக் குழு, இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ள மத்திய பொதுப்பணித் துறையிடம், இந்தத் திட்டத்தின் சுற்றுச்சூழல், சமூக பொருளாதார நன்மைகளை என்ன என்பது பற்றியும், இந்த திட்டம் அதன் முழுமையில்  எவ்வாறு இப்பகுதியில் சுற்றுச்சூழல் தரத்தைப் பாதிக்கும் என்பது பற்றியும் கேட்டுள்ளது.

டிசம்பர் 17 அன்று நடந்த இந்தக் குழுவின் கூட்டக் குறிப்பில் இந்தத் திட்டத்தினால் நிலம், நிலத்தடி நீர், நிலத்திற்கு மேல் உள்ள நீர், காற்று, பல்லுயிர் பாதுகாப்பு, ஒலி மற்றும் அதிர்வு, சமூக பொருளாதார மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கு ஏற்படும் விளைவுகள் குறித்துக் கேட்டுள்ளது. மேலும் அது ஏற்கனவே உள்ள கட்டிடங்களை இடிப்பது, நிலத்தடி நீரை மறுஊட்டம் செய்வது, போக்குவரத்து மேலாண்மை ஆகிய பிரச்சனைகள் குறித்து விளக்கமான திட்டங்களை கேட்டுள்ளது.

கட்டுமான பரப்பு குறைகிந்த போதிலும் செலவு அதிகரிக்கிறது

இந்தத் திட்டம் எவ்வாறு எல்லா அமைச்சகங்களையும் ஒன்றாகக் கொண்டு வந்து பொதுவான மத்திய செயலகத்தில் வைக்கும் என்பது பற்றி செயல் விளக்கத்தைக் காட்டிய மத்திய பொதுப்பணித் துறையிடம், டெல்லி நகர்புற கலை ஆணையகத்தின் (DUAC) பரிந்துரை பெற்றுத் தரும்படி கேட்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த திட்டம் 17,21,500 சதுர மீட்டர் அளவு நிலத்தில் கட்டப்படும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட 18,37,057 சதுர மீட்டரை விட குறைவாகும். எனினும் திட்டச் செலவு ரூ 11,794 கோடியிலிருந்து ரூ 13,450 கோடியாக, அதாவது 1,656 கோடி கூடியுள்ளது. தற்செயலாக, இந்த மத்திய விஸ்டா திட்டத்தின் பல்வேறு அம்சங்களுக்கு எதிராக பத்து மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதையும் கூட்டுக் குறிப்புகள் குறிப்பிட்டுள்ளன.

‘வல்லுநர் மதிப்பீட்டுக் குழு தனது பரிந்துரைகளை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். விதிமுறைக் குறிப்புகளை வெளியிடக் கூடாது’

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு லோக்பத் (LokPATH) அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசின் மத்திய விஸ்டா திட்டம், உச்சநீதிமன்றத்தில் பத்து முழுமையான பரிசீலனை மனுக்கள் நிலுவையில் இருக்கும் போதே, மக்களின் வரிப்பணத்தில்” வேலைகள் நடைபெற்று வருகின்றன என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“பிரதமரின் குடியிருப்பு, சிறப்பு பாதுகாப்புப் படைக் கட்டிடம், குடியரசு துணைத் தலைவரின் வளாகம் ஆகியவற்றுடன் பொது மத்திய செயலகக் கட்டிடங்களையும் மத்திய கருத்தரங்கு மையத்தையும் கட்டுவதற்கான மத்திய பொதுப்பணித் துறை திட்டத்தின் மூன்றாவது பதிப்பிற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டை மேற்கொள்வதற்கான விதிமுறை குறிப்புகளை குழு பரிந்துரைத்துள்ளது.” என்பதை கடிதம் குறிப்பிடுகிறது.

வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், மத்திய விஸ்டா திட்டத்தின் தற்போதைய வடிவத்தின் கூறுகளுக்கு விதிமுறை குறிப்புகளை வெளியிடக் கூடாது என்றும்  இந்தக் கடிதம் கோரியுள்ளது.

இந்தக் குழு “குறிப்பு விதிமுறைக்கான விண்ணப்பத்தில் அது முழுமையற்ற, தவறான தகவல்களை வெளியிடுவதை அடிப்படையாகக் கொண்டு கொடுத்துள்ளது.” என்பதால் மத்திய பொதுப்பணித் துறை கொடுத்துள்ள மூன்றாவது முன்மொழிவை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கடிதம் வலியுறுத்துகிறது.

இந்த நகர்வுகளை எதிர்க்கும் குடிமக்கள் குழுவும் முக்கியமான நான்கு கவலைக்குரிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டி உள்ளது.

மாற்று வழிகள் காணப்படவில்லை

சுற்றுச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பப் படிவத்தில் திட்ட ஆதரவாளர்கள் ‘மாற்று இடங்கள் இருந்தால் அதுபற்றிய ஆய்வுகள் செய்யப்பட்டதா’ எனக் குறிப்பிட வேண்டும். அத்தகைய இடங்கள் நிலவரைபடத்தில் (toposheet) காட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இந்தக் கேள்விக்கு மத்திய பொதுப்பணித் துறை ‘இல்லை’ என்று கூறியுள்ளது. இது மாற்று இடங்கள் பற்றி ஆய்வு செய்யப்படவில்லை என்பதையும் அல்லது குறிப்பு விதிமுறைகளை பரிந்துரைக்கும் போது வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவிடம் அது பற்றி தெரிவிக்கவில்லை என்பதையும் காட்டுகிறது என்று அது கூறி உள்ளது.

திட்டத்திற்கான மாற்று இடங்களைப் பற்றிய மதிப்பீட்டையும் அதன் அமைவிடம் பற்றியும் ஆய்வு செய்யாமலே, இதுதான் பொது வளங்களை பயன்படுத்த மிகச் சிறந்த இடம் என்றும், மிகக் குறைந்த சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டம் என்றும் மத்திய பொதுப்பணித் துறை எவ்வாறு முடிவு செய்தது என அந்தக் குழு கேட்கிறது.

அது மேலும்” மாற்று வழிகளைப் பற்றி மதிப்பீடு செய்யாமலே பொது மக்கள் நலன்கள் எனக் காட்டுவது வெறும் நம்பிக்கைதானே தவிர உண்மை அல்ல.” என்று கூறுகிறது. “உண்மையை அடிப்படையாகக் கொண்டிராத திட்டங்களை வல்லுநர் மதிப்பீட்டுக் குழு மதிப்பீடு செய்ய முடியாது.” என வாதாடுகிறது அது.

திட்டம் துண்டு துண்டானது

ஈஏசி (EAC) யின் ஒட்டு மொத்த தாக்க மதிப்பீட்டிற்கு பரிந்துரைக்கப்பட்ட ‘ ஒருங்கிணைந்த’ திட்டத்தில் தொழிலாளர் துறை கட்டிடமும் போக்குவரத்து துறை கட்டிடமும் இல்லை. மத்திய விஸ்டா மறு வடிவமைப்புத் திட்டப்படி இவை இரண்டும்தான் முதலில் இடித்துத் தள்ளப்பட்டு அந்த இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறைகளை கட்ட முடியும்.

இந்த சேர்க்கை, ஈஏசி யின் விதிமுறை குறிப்புகள் பரிந்துரைகளுக்கு பத்து நாட்களுக்கு முன்புதான் வந்தன. இதுவே இந்தக்குழு மத்திய பொதுப்பணித் துறையின் மூன்றாவது துண்டு துண்டான திட்டத்தை ‘ஒருங்கிணைந்த’ திட்டமாக முடிவு செய்திருப்பதை செல்லாததாக்கி விட்டது என்கிறது லோக்பத்.

“ஈஏசிக்குத் தரப்பட்டுள்ள இந்த மூன்றாவது திட்டத்தில் (கூட) மத்திய விஸ்டா மறு முன்னேற்றத் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகக் காட்டப்பட்டுள்ள யமுனா வெள்ள வடிநிலப் பகுதியில் உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடமும், புதிய இந்தியா தோட்டமும் சேர்க்கப்பட வில்லை.” என்பதை குடிமக்கள் குழு சுட்டிக்காட்டுகிறது.

மதிப்பீடு செய்வதில் பொதுப்பணம் வீணாகிறது

முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு திட்டத்திற்கான நோக்கத்தை நியாயப்படுத்துவதற்காக அதனை மதிப்பீடு செய்வதில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை லோக்பத் கண்டித்துள்ளது. குறிப்பு விதிமுறைகளை பரிந்துரை செய்ய, கட்டிடங்களை இடிப்பதால் ஏற்படும், நிலத்தடி நீர்மட்ட மறு ஊட்டம், நிலத்தின் சரிவைக்காட்டும் சமன் வரைபடம் (contour plan) மற்றும் போக்குவரத்து ஆகிய பிரச்சனைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தாக்க மதிப்பீடு உள்ளிட்டவற்றைப் பற்றிய விரிவான பல ஆய்வுகளை மத்திய பொதுப்பணித் துறை ஈஏசிக்கு செய்ய வேண்டி உள்ளது.

“திட்டத்தின் கட்டிடங்களை கட்டுவது முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டதால்,
இந்த ஆய்வுகள் எல்லாம் திட்டத்தை சுற்றுச்சூழல் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றுவதற்கு ஏற்ப வடிவமைக்கப்படுமோ என்ற அச்சத்தை அக்கடிடம் வெளியிடுகின்றது.

மக்களின் வரிபணத்தில் ஆலோசகர்களுக்கும், துணை ஆலோசகர்களுக்கும் இந்த ஆய்வுகள் ஒப்பந்தம் செய்யப்படும். கொரோனா தொற்று நோயையும் அதன் பொருளாதார, சமூக தாக்கங்களையும் கருத்தில் கொண்டு ஏற்கனவே குடிமக்கள் அரசு பொதுபணத்தை இந்தத் திட்டத்திற்கு திசை திருப்புவது குறித்து கடுமையாக கேள்விகள் எழுப்பி உள்ளனர்.  பொது சுகாதாரம் மற்றும் சமூக நலனுக்கான செலவுகளுக்கு முன்னுரிமை தர வேண்டும் என குடிமக்கள் கூறுகின்றனர் என்பதை இந்தக் குழு நினைவூட்டியுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் முடிவு நிலுவையில் இருக்கும் நிலையில் எதற்கு இந்த செலவு?

உச்சநீதிமன்றத்தில் பத்து மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன என்பதை குழு அமைச்சருக்கு நினைவு படுத்தி உள்ளது‌.

“இந்த மனுக்கள் இந்தத் திட்டத்தின் நம்பகத்தன்மை, ஒப்பந்தங்களை வழங்குவதில் நடைமுறை முறைகேடுகள், நடைமுறை மீறல்களையும் நில பயன்பாட்டு மாற்றம், பாரம்பரியம், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு தொடர்பான எதிர்மறைத் தாக்கங்களையும் குறித்து அடிப்படை சட்டக் கேள்விகளை எழுப்பி உள்ளன.

எனினும் மத்திய பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசு, பொது நிதியை செலவிடும் செயல்களைத் தொடர்ந்து செய்கின்றது. மேலும் நீதிமன்ற முடிவு நிலுவையில் இருக்கும் போதே புதிய ஆய்வுகளை வழங்குதல், அளவு, வடிவமைப்பு மற்றும் தள அமைப்பு ஆகியவற்றை மாற்றுவது ஆகியவற்றை தொடர்ந்து செய்து வருகின்றன.” என்று இந்தக் குழு குற்றம் சாட்டி உள்ளது.

– கௌரவ் விவேக் பட்நாகர்

thewire.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்