Aran Sei

ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான இத்தாலி நிறுவனம் – ஆயுதம் வாங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியது பாஜக அரசு

இத்தாலியின் பின்மெக்கானிகா (Finmeccanica) என்ற ஆயுத தயாரிப்பு நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை பாஜக அரசு விலக்கிக்கொண்டுள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது லியனர்டோ எஸ்பிஏ (Leonardo SpA) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த நிறுவனத்திடமிருந்து, மிகவும் முக்கியமான நபர்கள் (VVIP) பயணிப்பதற்கு ஹெலிகாப்டர்கள் வாங்க 2010 ஆம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட், சுமார் 3,600 கோடி மதிப்புள்ள இந்த ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை பெறுவதற்கு, இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள், விமானப்படை அதிகாரிகள் உட்பட பலருக்கு ரூ.360 கோடி லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத்தொடர்ந்து அப்போதைய காங்கிரஸ் அரசு, 2013 ஆம் ஆண்டு இந்த ஒப்பதத்தை ரத்து செய்ததுடன், இதுகுறித்து சிபிஐ விசாரிப்பதற்கும் உத்தரவிட்டது. இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தற்போதும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், லியனர்டோ எஸ்பிஏ (பின்மெக்கானிக்கா) நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடரக்கூடாது, அபராதம் விதிக்கக் கூடாது ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையில், இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி சென்றார். ரோம் நகரில் நடைபெற்ற மாநாட்டிற்கு மத்தியில், இத்தாலி பிரதமர் மாரியே டராகி-யை நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பிற்குப் பிறகு பாஜக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர், குடியரசுத் தலைவர் உட்பட மிக முக்கியமான நபர்கள் பயணிப்பதற்காக 12 ஹெலிகாப்டர்களை வாங்க அப்போதை காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்தது. 2010 ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தம் ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் லஞ்சம் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய விமானப் படையின் தலைமை ஏர் மார்ஷல் தியாகி, பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குசிப்பி ஓரிஸ், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் தலைவர் புரூனோ ஸ்பெக்னோலினி, இடைத்தரகர் கிரிஸ்டின் மைக்கேல் அகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் விவகாரத்தை சுட்டிக்காட்டி, பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக தலைவர்கள் பலர், பின்மெக்கானிக்கா நிறுவனத்தை ஊழல் நிறுவனம் என்று கடுமையாக விமர்சித்துள்ளனர். இந்நிலையில், அந்த (லியனர்டோ எஸ்பிஏ) நிறுவனத்திடமிருந்து ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தற்போது பாஜக அரசு விலக்கிக்கொள்ள முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்