Aran Sei

மத்திய அரசு விவசாயிகளுக்கு அளித்த திட்ட வரைவில் இருந்தது என்ன? – விரிவான விளக்கம்

புதிய விவசாயச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஒரு திட்ட வரைவை மத்திய அரசு அனுப்பியிருந்தது. இந்தத் திட்ட வரைவு தங்களை அவமரியாதைச் செய்திருப்பதாக தெரிவித்த விவசாயிகள், அடுத்தடுத்த திட்ட வரைவுகளை ஆவலோடு எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இருபது பக்கங்கள் கொண்ட இந்தத் திட்ட  வரைவில், முதல் எட்டு பக்கங்களுக்கு அரசாங்கத்தின் பார்வையில் விவசாயச் சட்டங்கள் எப்படி இருக்கிறன என எழுதப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, அரசு முன்வைக்கும் “திருத்தங்கள்” இருக்கின்றன. பக்கம் 8 முதல் 20 வரை இருக்கும் திருத்தங்களை கீழே பார்க்கலாம்.

இந்தியில் இயற்றப்பட்ட திட்ட வரைவை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர் நௌஷின் ரெஹ்மான்.

விவசாயிகள் எழுப்பிய கேள்வி : விவசாய சீர்திருத்தச் சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்தின்படி செல்லுபடியாகின்றவையா? .

மத்திய அரசின் விளக்கம் : அரசியலமைப்பின் 7-ம் அட்டவணையில் மூன்றாம் பொதுப்பட்டியலின் கீழ் இருக்கும் 33-வது பதிவின் கீழ் விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், 2020 மற்றும் விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம், 2020 ஆகியவை நிறைவேற்றப்பட்ட்ள்ளது.

33-வது பதிவின் படி உணவுப் பொருட்களின் வணிகம், வர்த்தகம், உற்பத்தி , விநியோகம் ஆகியவை தொடர்பான சட்டங்களை பாராளுமன்றம் நிறைவேற்றலாம். பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரப் பட்டியலின் 33-வது பதிவிற்கு உட்பட்ட, மாநில அதிகாரப் பட்டியலில் 26-வது பதிவின்கீழ், வணிகம் மற்றும் வர்த்தகம் தொடர்பான ஒரு சட்டத்தை நிறைவேற்ற மாநில சட்டசபைக்கு அதிகாரம் உள்ளது. இதன் வழியே, இரண்டு சட்டங்களும் அரசியலைப்பைப் பின்பற்றுவதாக  உள்ளன.

முறையான சட்ட அறிவுரைகளோடுதான் சட்டங்களும் பிற அரசாணைகளும் வெளியிடப்பட்டன.

பிரச்சனை: விவசாய சீர்திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்

திட்டம் : விவசாயிகளுக்கு மாற்றுக் கருத்து இருக்கும் பகுதிகளை மறுபரிசீலனை செய்ய அரசு தயாராக இருக்கிறது.

விவசாயிகள் எழுப்பிய கேள்வி : மண்டி ஆணையங்களால் அமைக்கப்படும் மண்டிகள் பலவீனமாகும் எனவும், விவசாயிகள் தனியார் மண்டிகளின் பிடியில் மாட்டிக் கொள்வார்கள் எனவும் அஞ்சப்படுகிறது.

மத்திய அரசின் விளக்கம் : முன்னர் இருந்த வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டே, பயிரை விற்க அதிக வாய்ப்புகளை புதிய சட்டம் வழங்குகிறது. இப்போது விவசாயிகளால் மண்டிக்கு வெளியே, அதாவது கிடங்குகளிலும், குளிர் கிடங்குகளிலும், தொழிற்சாலைகளிலும், ஏன், தங்கள் வயல்களிலும் இருந்தும் கூட பயிர்களை விற்க முடியும்.

வர்த்தகர்கள் நேரடியாக பயிரை விவசாயிகளிடம் இருந்து வாங்குவதனால், கொள்முதல் செய்வதற்கு வர்த்தகள் போட்டி போடுவார்கள் – இதனால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும். மாநிலத்திற்கு உள்ளே மற்றும் மாநிலங்களுக்கு இடையே நடக்கும் வணிகத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.

இதனுடன், விவசாயிகள் குறைந்தபட்ச ஆதார விலைக்குப் பயிர்களை, மண்டிகளிலும் அரசு கொள்முதல் நிலையங்களிலும் விற்கும் முறையும் மாற்றப்படாது.

திட்டம் : தனியார் மண்டிகள் பதிவு செய்யப்படுவதற்கு ஒரு அமைப்பை மாநில அரசு கொண்டு வருவதற்கு வழி செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும். மேலும், விவசாய உற்பத்தி சந்தை குழுவின் மண்டிகளில் அனுமதிக்கப்படுகிற அளவுக்கு ஏற்ற வரித்தொகையை மாநில அரசு நிர்ணயிக்கலாம்.

விவசாயிகள் எழுப்பிய கேள்வி  : பயிர்களை வாங்குபவர்களின் விவரங்களை முறையே பதிவு செய்வதற்கு ஒரு அமைப்பை உண்டாக்காமல், பான் அட்டையை  (PAN CARD ) வைத்து விவசாயியிடம் இருந்து பயிர்களை வாங்கிக் கொள்ளும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது மோசடிக்கு வழி வகுக்கும்.

மத்திய அரசின் விளக்கம் : புதிய சட்டங்களில் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதலில் நிறைய வாய்ப்புகளை உண்டாக்கிக் கொடுக்கும் நோக்கில், பான் அட்டையை வைத்து பொருட்களை வாங்கும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய சட்டத்தின்படி, வர்த்தகர்களின்  விவரங்களைப் பதிவு செய்தல், வர்த்தக முறைகள்  மற்றும் பணம் செலுத்தும் முறைகள் தொடர்பாக விதிகளை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு  உள்ளது.

பான் அட்டை இல்லாமல் வேறு ஆவணங்களை வைத்து விவரங்களை பதிவு செய்யும் முறையை நடைமுறைபடுத்தும் சட்டவிதி ஒன்று ஏற்கனவே இருக்கிறது.

திட்டம் : இது தொடர்பான சந்தேகங்களை தீர்க்கும் வகையில், வர்த்தக விவரங்களை  பதிவு செய்யும் அமைப்பிற்கான விதிமுறைகளை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கொடுக்கப்படும். உள்ளூர் நிலவரங்களை வைத்து விவசாயிகளின் நலனுக்காக மாநில அரசு சட்டங்கள் இயற்றலாம்.

விவசாயிகள் எழுப்பிய கேள்வி  : சிக்கல்களுக்கு தீர்வு காண சிவில் நீதிமன்றத்துக்கு போகும் உரிமை விவசாயிகளுக்கு இல்லை. இதனால், நீதி கிடைக்காமல் போகும் வாய்ப்பிருக்கிறது.

மத்திய அரசின் விளக்கம் : விவசாயிகளின் பிரச்சினைக்கு உடனடியாக , குறைந்த செலவில், எளிதாக நீதி கிடைக்கவும், பிரச்சினைகள் 30 நாட்களுக்குள் உள்ளூர் அளவிலேயே தீர்க்கப்படவும் சட்டவிதி இயற்றப்பட்டிருக்கிறது. ஒரு சமரச வாரியத்தை வைத்து இருதரப்பு ஒப்புதலையும்  பெற்று அதனடிப்படையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதுதான் இரண்டு சட்டங்களில் இருக்கும் முதல் ஏற்பாடு.

திட்டம் : இது தொடர்பான  சந்தேகத்தை, பிரச்சினைகளை தீர்க்க ஏற்கனவே இருக்கும் ஏற்பாடுகளோடு, சிவில் நீதிமன்றத்துக்கு செல்லும் உரிமையும் வழங்கப்படும்.

விவசாயிகள் எழுப்பிய கேள்வி  : விவசாய ஒப்பந்தங்களை பதிவு செய்ய எந்த அமைப்பும் இல்லை

மத்திய அரசின் விளக்கம் : விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம், 2020-ன் கீழ், மாநில அரசு , ஒப்பந்தங்களைப் பதிவு செய்ய ஒரு அமைப்பை உருவாக்குவதற்கான வழி ஏற்கனவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

பதிவாளர் நிர்வாகம் ஒன்றை அமைக்கும் உரிமையும் மாநில அரசுக்கு இருக்கிறது.

திட்டம் : மாநில அரசுகள், ஒப்பந்தங்களை பதிவு செய்வதற்கென ஒரு அமைப்பை உருவாக்கும் வரை, ஒப்பந்தங்களில் கையொப்பம் இடப்பட்ட முப்பது நாட்களில் அவற்றின் பிரதிகள் சம்பந்தப்பட்ட துணை பிரிவு மாஜிஸ்திரேட் அலுவலகத்தில்  இருப்பதற்கு முறையான ஏற்பாடுகள் செய்யப்படும்.

விவசாயிகள் எழுப்பிய கேள்வி  : பெரிய தொழிலதிபர்கள் விவசாயிகளின் நிலத்தை கைப்பற்றுவார்கள், விவசாயிகள் நிலம்  பறி போகும்.

மத்திய அரசின் விளக்கம் : விவசாயிகள் ஒப்பந்தச் சட்டத்தின் கீழ், விவசாயிகளின் நிலத்தையோ இடத்தையோ விற்கவோ, குத்தகைக்கு விடவோ, அடமானம் வைக்கவோ எந்த உடன்படிக்கையும் உருவாக்கப்படக் கூடாது.

விவசாயியின் நிலத்தில் எந்தவொரு கட்டமைப்பும் எழுப்பப்படக் கூடாது, ஒரு வேளை கட்டப்பட்டால், ஒப்பந்த காலம் முடியும் போது அதற்கு செலவு செய்தவர் அதை நீக்குவார் எனும் விதி ஏற்கனவே இருக்கிறது.

நீக்காத பட்சத்தில் அது விவசாயியின் உடைமை எனக் கொள்ளப்படும்.

திட்டம் : சட்ட விதி ஏற்கனவே தெளிவாக இருக்கிறது என்றாலும், விவசாயியின் நிலத்தில் கட்டப்பட்ட எந்தவொரு கட்டிடம்/ பிற அமைப்புகளை வைத்து வர்த்தகர் கடன் வாங்க முடியாது; அப்படி ஒரு கட்டிடம் பிணையமாகவும் ஏற்றுக் கொள்ளப்படாது.

விவசாயிகள் எழுப்பிய கேள்வி : விவசாயியின் நிலம்  அபகரிக்கப்படும்.

மத்திய அரசின் விளக்கம் : விவசாய  ஒப்பந்த சட்டத்தின் 15-ம் பிரிவின் கீழ், விவசாயியிடம் இருந்து வர வேண்டிய தொகையைப் பெற, அவர் நிலத்தை வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படக் கூடாது என்று ஒரு விதி இருக்கிறது.

இந்தச் சட்டத்தின் கீழ், விவசாயிக்கு எந்த அபராதமும் விதிக்கப்பட முடியாது. ஆனால், செலுத்தப்பட வேண்டிய தொகை முறையே செலுத்தப்படவில்லை என்றால் நிலுவையில் உள்ள தொகையில் 150% சதவிகிதம் அபராதம் வர்த்தகருக்கு விதிக்கப்படலாம்.

ஒப்பந்தத்தின்படி முழு விலையைக் கொடுத்து வர்த்கர் பயிர்களை வாங்க வேண்டும் எனும் விதி இருந்தாலும், விவசாயிக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

திட்டம் : சட்டவிதி தெளிவாகவே இருக்கிறது, இதற்கு மேலும் விளக்கம் தேவைப்பட்டால் கொடுக்கப்படும்.

விவசாயிகள் எழுப்பிய கேள்வி  : விவசாயிகள் ஆதார விலையில் அரசு முகமைகள் வழியே தங்கள் உற்பத்தியை விற்க முடியாது, அனைத்து விவசாய உற்பத்தி வணிகமும் தனியார் கரங்களுக்குள் நடைபெறும்.

மத்திய அரசின் விளக்கம் :  அரசு கொள்முதல் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை முறையில் புதுச்சட்டங்கள் தலையிடவே இல்லை.

மாநில அரசுகளுக்கு ஆதார விலை மையங்கள் அமைக்கும் உரிமை இருக்கிறது, இவற்றை மண்டிகளில் அமைக்கவும் அரசுகளுக்கு உரிமை இருக்கிறது.

குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யும் அமைப்பை மத்திய அரசு வலுப்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டின் கோடை மற்றும் குளிர்கால பயிர்களின் கொள்முதல் அதற்கு உதாரணம்.

திட்டம் : இப்போது இருக்கும் ‘ குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல்’ எனும் திட்டமே தொடர்ந்து நீடிக்கும் என அரசு எழுத்தில் வாக்குறுதி அளிக்கும்.

விவசாயிகள் எழுப்பிய கேள்வி : மின்சார (திருத்த) மசோதா 2020, திரும்பப் பெறப்பட வேண்டும்.

மத்திய அரசின் விளக்கம் : மின்சார திருத்த மசோதா விவாதத்திற்கு என தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

நேரடி பயன்மாற்றம் குறித்து- மாநில அரசுகள் நேரடியாக மானிய விலையை நுகர்வோரின் வங்கிக் கணக்குகளில் முன் கூட்டியே செலுத்திவிடும்.

திட்டம் : விவசாயிகள் இப்போது மின் கட்டணங்களை செலுத்தும் முறையில் எந்த மாற்றமும் இருக்காது.

விவசாயிகள் எழுப்பிய கேள்வி : தேசிய தலைநகர் காற்று தர மேலாண்மை அரசாணை 2020-ஐ திரும்பப் பெற வேண்டும்

மத்திய அரசின் விளக்கம் : இப்போதைய விதிகளின் கீழ், பதர்களை எரிப்பவர்கள் மீது அபராதங்களும் கிரிமினல் வழக்குகளும் பதிவு செய்ய முடிகிறது.

திட்டம் : தேசிய தலைநகர் காற்று தர மேலாண்மையின் பதர் எரிப்பு விதிகள் தொடர்பான விவசாயிகளின் மாற்றுக்கருத்து முறையே கையாளப்படும்.

மத்திய அரசின் விளக்கம் : நாட்டின் விவசாயிகளை மதித்து, திறந்த மனதோடும் அனுதாபத்தோடும் அத்தனை பிரச்சினைகளையும் தீர்க்க மத்திய அரசு முயற்சி செய்திருக்கிறது. எனவே , விவசாய சங்கங்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்