நேற்று (ஜனவரி 8) ஹென்றி டிபேன் தலைமையில் இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகம் நிறுவனத்தில் மத்திய புலனாய்வு நிறுவனம் (சிபிஐ) சோதனை நடத்தியுள்ளதைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் பெரும் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை நடைபெறும் மனித உரிமை மீறல்களை (சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் படுகொலை உட்பட ) உலகிற்கு அறிய வைத்து, சட்டத்தின் உதவியுடன் நீதிப் பெற்றுத் தரும் அரிய தொண்டை ஆற்றி வரும் நிறுவனம் திரு. ஹென்றி டிபேன் தலைமையில் இயங்கி வரும் மக்கள் கண்காணிப்பகம், கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் கல்வி உரிமை, குழந்தைகள் உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் என மனித உரிமைகளின் பல்வேறு தளங்களில் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் செயல்படும் செயற்பாட்டாளர்களை உருவாக்கியதில் மக்கள் கண்காணிப்பகத்தின் பங்களிப்பு மகத்தானது.
மக்கள் கண்காணிப்பகம் நிறுவனத்தில் நேற்றைய தினம் மத்திய புலனாய்வு நிறுவனம் நடத்திய சோதனைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறேன். எந்த நோக்கத்திற்காக நேற்றைய தினம் மத்திய புலனாய்வு நிறுவனம் சோதனைகள் நடத்தியதோ அது குறித்து ஏற்கெனவே சோதனைகள் நடத்தப்பட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மத்திய புலனாய்வு நிறுவனம் சோதனை நடத்தியிருப்பது தேவையற்ற நடவடிக்கை ஆகும்.
மனித உரிமை செயற்பாட்டாளர்களை மிரட்டும் நோக்கத்திற்காகவே இச்சோதனைகள் நடைபெற்றுள்ளன என்று தான் புரிந்து கொள்ள முடிகின்றது. இது போன்ற மிரட்டல் நடவடிக்கைகள் அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமைகளின் அடிப்படையில் செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை முடக்கிவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பேராசிரியருமான எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.