ரஃபேல் விமான ஒப்பந்தத்தை பெறுவதற்கு, டஸ்சோ ஏவியேஷன் (Dassult Avitaiton) நிறுவனம், இடைத்தரகருக்கு சுமார் 62 கோடி ரூபாய் பணம் பெற்றதற்கான ஆதாரம் சிபிஐ-யிடம் உள்ளதாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மீடியாபார்தே (Mediapart) என்ற லாப நோக்கமற்ற ஊடகம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆதாரங்கள் இருந்தும் சிபிஐ இதுவரை நடடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த ஊடகம் குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில், குடியரசு தலைவர், பிரதமர் போன்ற மிக முக்கியமான நபர்கள் பயணிப்பதற்காக 12 ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஒப்பந்தம் இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் இடைத்தரருக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட காங்கிரஸ் அரசு அந்த ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல்குறித்து விசாரித்து வரும் சிபிஐ, இதுதொடர்பாக 2018ஆம் ஆண்டு மொரீஷியஸ் அரசிடம் சில ஆவணங்களை கோரியதாகவும், மொரீஷியஸ் அரசு அதை சிபிஐக்கு அளித்ததாகவும் மீடியாபார்த்தே கூறியுள்ளது.
மொரீஷியஸ் அரசு அளித்த ஆவணங்களில், ரஃபேல் விமான தயாரிப்பு நிறுவனமான டஸ்சோ நிறுவனம், இந்தியாவை சேர்ந்த சுஷேன் குப்தா என்பவருக்குச் சொந்தமான இண்டர்ஸ்டெல்லார் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்திற்கு சுமார் 62 கோடி ரூபாய் வழங்கியது சிபிஐக்கு தெரியவந்ததாக மீடியாபார்த்தே ஊடகம் கூறியுள்ளது.
2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, சுஷேன் குப்தாவின் நிறுவனம் இந்த 62 கோடி ரூபாயை டஸ்சோ நிறுவனத்திடமிருந்து பல்வேறு முறைகேடான வழிகளில் பெற்றதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
மொரீஷியஸ் அரசிடமிருந்து சிபிஐ பெற்ற ஆவணங்கள் மூலம், 2015 ஆம் ஆண்டு ரஃபேல் விமான ஒப்பந்தம் ஏறக்குறைய முடிவடைந்த சமயத்தில், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடமிருந்து மிக முக்கியமான ஒரு ஆவணம் சுஷேன் குப்தாவுக்கு கிடைத்து தெரியவந்ததாக மீடியாபார்த்தே கூறியுள்ளது. அந்த ஆவணத்தில்தான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் விமானத்தின் விலையை எவ்வாறு கணக்கிடுகிறது என்ற முக்கியத் தகவல் இடம் பெற்றிருந்ததாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குறித்தும், அதில் இடைத்தரகர் சுஷேன் குப்தாவுக்கு உள்ள தொடர்புகுறித்தும், 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதமே சிபிஐக்கு தெரியவந்திருந்தும், அதுதொடர்பாக சிபிஐ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மீடியாபார்த்தே என்ற ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.