Aran Sei

சாதிவாரி கணக்கெடுப்பு: பெரும்பான்மைச் சாதிகளுக்கு வலுக்கும் அதிகாரம் – ஸ்டாலின் ராஜாங்கம்

சாதி வாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உரிய தரவுகளைச் சேகரித்து அறிக்கை சமர்ப்பிக்க அதற்கெனப் பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 69 விழுக்காடு இட  ஒதுக்கீடு  தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில், வழக்கை எதிர்கொள்ள சாதி வாரியான புள்ளி விவரங்கள் தேவை என்று கூறியுள்ளார். அதற்காக உரிய தரவுகளைச் சேகரிக்க அதற்கான பிரத்யேக ஆணையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று போராட்டம் நடைபெற்றது.  இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசை சந்தித்தார்.

20 விழுக்காடு இடஒதுக்கீடு அல்லது சாதி வாரியாகக் கணக்கெடுத்து எல்லோருக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது பாமகவின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இது குறித்து எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்திடம் அரண்செய் கருத்துக் கேட்டது. ”முதலமைச்சர்  அறிவித்திருப்பது பாமகவின் போராட்டத்தைக் கைவிட வைப்பதற்காகத்தான் என்று எண்ணுகிறேன்.  சாதி  வாரியான கணக்கெடுப்பென்பது எண்ணிக்கைப் பெரும்பாண்மை சாதியின் அதிகாரத்தைக் கூட்டவே வழிவகுக்கும். எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட இந்திய தேர்தல் அரசியலில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், எது பெரும்பாண்மைச் சாதியாக அறியப்படுகிறதோ அதற்கு மட்டுமே நலன் பயக்கும். மேலும்  எண்ணிக்கை சிறுபான்மையாக இருக்கும் சாதிகளுக்கு ஆபத்தாக முடிவதற்குதான் வாய்ப்புள்ளது. எண்ணிக்கைப் பெரும்பாண்மையோடு அதிகார பெரும்பாண்மைச் சேர்த்தால்  மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்